சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் தூத்துக்குடி வீரர் சாதனை
சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் தூத்துக்குடி வீரர் சாதனை படைத்துள்ளார். அவருக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு தெரிவித்தார்.
தென்கொரியா நாட்டின் ஜீயோன்பெக் நகரில் 2-வது மூத்தோர் ஆசிய பசிபிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த மே மாதம் 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடந்தது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 71 நாடுகளைச் சார்ந்த சுமார் 14 ஆயிரத்து 177 விளையாட்டு வீரர்கள் 26 விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் தி.சுப்பிரமணியன் (68) இந்திய அணியில் இடம்பெற்று போட்டிகளில் பங்கேற்றார்.
இவர் குண்டு எறிதல், தட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், பெரிய குண்டு எறிதல் ஆகிய 4 போட்டிகளில் கலந்துகொண்டு அனைத்து போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றார். நான்கு தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்த சுப்பிரமணியன் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மேலும் பல போட்டிகளில் வென்று சாதனை படைக்க அவருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.