சர்வதேச யோகா தினம் கடைப்பிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் சர்வதேச ேயாகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
யோகா தினம் கடைப்பிடிப்பு
சர்வதேச யோகா தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்காங்கே யோகா தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் யோகா பயிற்சி மற்றும் விழிப்புணர்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், மகிளா கோர்ட்டு நீதிபதி சத்யா, கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி பாபுலால், தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயக்குமாரி ஜெமி ரத்னா உள்பட புதுக்கோட்டை, அறந்தாங்கி, கீரனூர், திருமயம் கோர்ட்டு நீதிபதிகள், வக்கீல் சங்க தலைவர் சின்னராசு உள்பட வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். இதேபோல நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் திலகவதி செந்தில்குமார், ஆணையர் நாகராஜன், கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதேபோல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சித்தன்னவாசல்-இலுப்பூர்
அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது. இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் உதயக்குமார் தலைமை தாங்கினார். மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் பூங்குன்றன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பயிற்சியில் பத்மாசனம், கோமுகாசனம், வஜ்ராசனம், புஜங்காசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களும் அவற்றின் பயன்கள் குறித்த கருத்துகளும் வழங்கப்பட்டது. இதில் அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, பேரூராட்சி தலைவர் சாலை பொன்னம்மா மதுரம், ஒன்றிய கவுன்சிலர் நிஷாந்தி சுவாமிநாதன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மதர்தெரசா கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
அன்னவாசல் வடக்கு ஒன்றியம் பா.ஜ.க. சார்பில் புங்கினிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் பொன்.முருகையா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் சர்வதேச பஞ்சபூத தற்காப்புக் கலை கழகத்தின் நிறுவனர் பயிற்சியாளர் சதீஷ்குமார் பயிற்சி அளித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு யோகா தின விழாவை கொண்டாடினர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி தெற்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் புதுப்பட்டி அருகே உள்ள ஆத்தியடிப்பட்டி சுனையில் அம்மன் கோவில் மண்டபத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ஜீவானந்தம் யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துமுன்னணி நிர்வாகிகள், பாரதீய ஜனதா மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆலங்குடி
ஆலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சர்வதேச யோகா தின பயிற்சி நடைபெற்றது. இதற்கு ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமை தாங்கினார். தினேஷ் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் முத்தையா யோகா தினம் பற்றிய சிறப்புரையாற்றினார். இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தலைமையில் சர்வதேச யோகா தின பயிற்சி நடைபெற்றது.