மகளிர் உரிமைத்தொகை திட்ட 2-வது மாதிரி முகாமிலும் இணையசேவை பாதிப்பு
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப படிவம் பதிவு செய்வதற்கு 2-வது நாளாக நடந்த மாதிரி முகாமிலும் இணையசேவை பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டது. எனவே மீண்டும் இன்று முகாம் நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப படிவம் பதிவு செய்வதற்கு 2-வது நாளாக நடந்த மாதிரி முகாமிலும் இணையசேவை பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டது. எனவே மீண்டும் இன்று முகாம் நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது வீடு, வீடாக சென்று விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது.
மாவட்டத்தில் உள்ள 699 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 934 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பம் வினியோகம் செய்து முடித்தவுடன் நாளை முதல் 660 சிறப்பு முகாம்களில் பெண்களுக்கு அவர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடங்க உள்ளது.
இந்த நிலையில் பதிவு செய்யும் முகாம் நடைபெறும்போது பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதை களைவதற்காக மாதிரி முகாம்கள் நடத்த அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாதிரி முகாம்கள் நடந்தது. இதில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அதை நிவர்த்தி செய்ய நேற்று மீண்டும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டனர்.
இணைய சேவை முடக்கம்
2-வது நாளாக நடந்த முகாமிலும் இணையசேவை முடக்கம், 'லாகின்' செய்ய முடியாத நிலை, பதிவு பணியில் தொய்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் முறையான முகாம் நடைபெறும் அன்றும் இதேபோன்று மீண்டும் பிரச்சினைகள் எழ வாய்ப்பு உள்ளது.
எனவே பிரச்சினைகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மாதிரி முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தடையில்லா இணையசேவை மற்றும் பிற தேவைகள் தடையின்றி கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.