"நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறேன்"- ஜான் பாண்டியன் பேட்டி
“வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறேன்” என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கூறினார்
"வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறேன்" என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கூறினார்.
இதுகுறித்து அவர் தென்காசியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநில மாநாடு
எனது பிறந்த நாளையொட்டி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கட்சியினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். வருகிற ஜூலை மாதம் 2-ந் தேதி சங்கரன்கோவில் பகுதியில் மாநிலம் தழுவிய 'பட்டியல் வெளியேற்ற கோரிக்கை' குறித்த மாநாடு நடக்கிறது.
மேலும் வருகிற அக்டோபர் மாதம் 9-ந் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபயணம் தொடங்குகிறேன். தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திதான் போராட்டம் நடத்துகிறோம்.
தென்காசியில் போட்டி
இதற்காக கையெழுத்து இயக்கத்தில் குறைந்தபட்சம் 5 லட்சம் பேர் கையெழுத்திட்டு, அதனை தமிழக முதல்-அமைச்சர், கவர்னர், பிரதமர் ஆகியோரிடம் கொடுப்போம். தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் சங்கமும் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
வழக்கமாக நாங்கள் ஏதாவது ஒரு கூட்டணியில் இணைந்துதான் தேர்தலில் போட்டியிடுகிறோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைப்போம். எந்த கூட்டணியாக இருந்தாலும் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நான் (ஜான் பாண்டியன்) போட்டியிடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முப்பெரும் விழா
முன்னதாக ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தேவேந்திரகுல வேளாளர் பட்டியலில் இருந்து வெளியேற்ற கோரிக்கை கையெழுத்து இயக்க தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா, தென்காசி இசக்கி மகாலில் நடைபெற்றது. மண்டல செயலாளர் இன்பராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கணேசன், மாரியப்பன், வடக்கு மாவட்ட செயலாளர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார்.
த.ம.மு.க. நிறுவன தலைவர் ஜான் பாண்டியன், பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் வியங்கோ பாண்டியன் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மாநில துணை பொதுச்செயலாளர்கள் நெல்லையப்பன், சண்முகசுதாகர், அமுதமுரளி, அருண் பிரின்ஸ், தமிழரசன், நளினி சாந்தகுமாரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட இணை செயலாளர் முருகேசன், நகர செயலாளர் மூர்த்தி ஆகியோர் நன்றி கூறினர்.