நெல்லையில் துரை வைகோ பேட்டி
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என நெல்லையில் துரை வைகோ கூறினார்
நெல்லையில் ம.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பால் விலை உயர்வு தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. பாரதீய ஜனதா கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கூட பால் விலை உயர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தான் தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 6 பேர் விடுதலையை எதிர்த்து மறு சீராய்வு மனு செய்ய காங்கிரஸ் கட்சிக்கு உரிமை இருப்பதால் சென்று உள்ளார்கள். சீராய்வு மனு விவகாரத்திலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தி.மு.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஒரே கோட்பாடுடன் இருக்கிறோம். மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் ம.தி.மு.க. உறுதியாக உள்ளது. தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் எந்தவித மாற்றமும் கிடையாது.
ராகுல் காந்தி நடைபயணத்தில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மதவாத சக்தியை முழு பலத்துடன் எதிர்க்க காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை நன்றாக உருவாக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன். கட்சி தலைமை வற்புறுத்தினால் கட்டாயம் தேர்தலில் போட்டியிடுவேன்.
வருகிற 2024-ம் ஆண்டு மதவாத சக்திகளை எதிர்த்து அனைத்து இயக்கங்களும் ஓரணியில் திரண்டால் மிகப்பெரிய பலன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லையில் ம.தி.மு.க. நிர்வாகி செல்வகோபால் என்ற ஸ்ரீதர் உடல்நலக்குறைவால் உயிர் இழந்தார். அவரது வீட்டுக்கு துரை வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.