அரசு போக்குவரத்து கழகத்தில்காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும்கடலூரில் அமைச்சர் சிவசங்கர் பேட்டி
அரசு போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று கடலூரில் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
குளிரூட்டப்பட்ட அறை திறப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட கடலூர் மண்டல கிளையில் முதல் முறையாக டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு அறை குளிரூட்டப்பட்ட அறையாக மாற்றப்பட்டது. இதை நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.
அய்யப்பன் எம்.எல்.ஏ., விழுப்புரம் கோட்ட மேலாண்மை இயக்குனர் ஜோசப் டயாஸ், கடலூர் மண்டல பொது மேலாளர் அர்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் போக்குவரத்து கழக அதிகாரிகள் செல்வக்குமார், ராஜசேகர், சிவக்குமார், பரிமளம், பிரபு, மணிகண்டன், கார்த்திகேயன், அருண், வசந்தராஜன், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, தொ.மு.ச. தங்கஆனந்தன், பழனிவேல், சி.ஐ.டி.யு. பாஸ்கரன், எம்.எல்.எப். மணிமாறன் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காலி பணியிடங்கள்
அரசு போக்குவரத்து கழகங்களில் புதிய பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு போக்குவரத்து கழகங்களில் படிப்படியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி பெற்று காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு இலவச பஸ்-பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த ஆண்டு உரிய நேரத்தில் மாணவர்களுக்கு இலவச பஸ்-பாஸ் வழங்கப்படும்.
புதிதாக 400 தாழ்தள பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் இறுதி செய்யப்பட இருக்கிறது. இன்னும் 1 மாதத்தில் 4 ஆயிரம் பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டு, விரைவில் புதிய பஸ்கள் பயன்படுத்தப்படும்.
1,500 பஸ்கள்
அரசு வாகனங்களை 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் பஸ்களும் அடக்கம். இந்தியாவில் அதிக பஸ்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான். நம்மிடம் 21 ஆயிரம் பஸ்கள் உள்ளன. 1,500 பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்ததாக இருக்கிறது.
இருந்தாலும் கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் அதிகமான பஸ்கள் ஓடவில்லை. ஆகவே அந்த 2 ஆண்டுகளை கணக்கில் கொண்டு, புதிய பஸ்கள் டெண்டர் விடப்பட்டு வாங்கும் வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தேன். அவர் பிரதமர் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார். ஆகவே புதிய பஸ்கள் வரும் வரை இந்த பஸ்கள் இயக்கப்படும்.
அக்கறை கொண்டவர்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்து தொழிலாளர்கள் நலனின் முழு அக்கறை கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் புதிதாக டிரைவர், கண்டக்டர்களை நியமிக்கவில்லை. ஓய்வு பெறுவோர்களுக்கு பணப்பலன்களை கொடுக்காமல் சூறையாடி விட்டார்கள். ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தி விட்டார்கள். இப்போது ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை தொடங்கி உள்ளது. இதனால் புதிய பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம். இதன் மூலம் தற்போதுள்ள டிரைவர், கண்டக்டர்களுக்கு பணிச்சுமை குறையும். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.