ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நேர்காணல்
மாவட்ட கருவூலம், சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நேர்காணல் நடக்க உள்ளது.
வேலூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஓய்வூதிய நேர்காணல் நடைபெற உள்ளது.
இந்தாண்டு எளிமைப்படுத்தப்பட்ட ஓய்வூதியர் நேர்காணல் செயல்படுத்தப்படுகிறது. மின்னணு விரல்ரேகை சாதனம் மூலம் ஜீவன் பிரமான் இணையதளம் வழியாக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். அல்லது இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் தபால்காரர்கள் ஓய்வூதியர்களின் இருப்பிடத்துக்கே சென்று, ஜீவன் பிரமான் இணையதளத்தின் வழியாக ரூ.70 செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்தல், தமிழக அரசின் இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையம் மூலம் பதிவு செய்தல், அரசு டாக்டர்களிடம் வாழ்நாள் சான்றிதழ் பெற்று தபால் மூலம் பதிவு செய்தல், ஓய்வூதியம் வழங்கும் மாவட்ட மற்றும் சார் கருவூலங்களுக்கு நேரடியாக சென்று பதிவு செய்தல் ஆகியவற்றின் மூலம் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
ஓய்வூதியர் நேர்காணலுக்காக கருவூல கணக்குத்துறை மற்றும் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி மூலம் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நேர்காணலில் ஓய்வூதியம் பெறும் ஆணை, ஆதார் அடையாள அட்டை, தொலைபேசி எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் அரசு ஓய்வூதியம் பெறும் அனைவரும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதத்துக்குள் நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.