தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிதான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது-நெல்லையில் சீமான் பேட்டி


தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிதான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது-நெல்லையில் சீமான் பேட்டி
x

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிதான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்

திருநெல்வேலி

நெல்லை:

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிதான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

பெருஞ்சித்தனார் நினைவு தினம்

நாம் தமிழர் கட்சி சார்பில், பாவலேறு பெருஞ்சித்தனார் நினைவு தினம், நெல்லை ரஹ்மத் நகரில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதைெயாட்டி அங்கு அலங்கரிக்கப்பட்ட பெருஞ்சித்தனாரின் உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து நினைவு ஜோதியை ஏற்றி வைத்து நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடன்சுமை அதிகரிப்பு

பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்றவை நாட்டில் மதமோதல்களை தூண்டி விட்டு, பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். சர்வதேச அரங்கில் இந்தியாவின் கடன் சுமை ரூ.90 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் இந்தியா ரூ.7 ஆயிரம் கோடியை இலங்கைக்கு கொடுப்பதால் என்ன பயன்?. இலங்கையில் சிங்களர்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பார்களா?. சீனாவின் ஒரு மாகாணமாகவே இலங்கையை மாற்றிவிட்டனர்.

18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையில் இருந்த தி.மு.க.விற்கு கட்சத்தீவை மீட்க இதுவரையிலும் நேரம் கிடைக்கவில்லை. இலங்கையை விட மோசமான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு கொண்டிருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அதனை மறைக்க முயற்சிக்கிறார்கள்.

ஊழல்

ஓராண்டு தி.மு.க. ஆட்சியின் ஊழலை சொல்லும் அண்ணாமலை, அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் குறித்து கேட்கவில்லை. 2024-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுடன் கூட்டணி அமைக்காமல் இருப்பார்களா?.

தி.மு.க., பா.ஜனதாவின் 'பி' டீம் அல்ல, அவர்கள்தான் மெயின் டீம்.

எதிர்க்கட்சியாக...

தமிழகத்தின் ஒரே எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சிதான் செயல்படுகிறது. 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணி தொடர்ந்து நடைபெறும். நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் தொடர்ந்து செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வக்கீல் சிவகுமார், வியனரசு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story