இந்த மாதம் இறுதியில் வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் விடப்படும்-சபாநாயகர் அப்பாவு பேட்டி


இந்த மாதம் இறுதியில் வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் விடப்படும்-சபாநாயகர் அப்பாவு பேட்டி
x

இந்த மாதம் இறுதியில் வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் விடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்

திருநெல்வேலி

இந்த மாதம் இறுதியில் வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் விடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

வெள்ளநீர் கால்வாய்

தாமிரபரணி ஆற்றுடன் கருமேனியாறு, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைத்து தாமிரபரணி ஆற்றில் மழைக்காலத்தில் வீணாக கடலுக்கு செல்லும் உபரிநீரை கன்னடியன் கால்வாயில் இருந்து வெள்ளநீர் கால்வாய் அமைத்து அதன்மூலம் நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, சாத்தான்குளம் உள்ளிட்ட தாலுகாக்கள் பயனடையும் வகையில் தண்ணீர் கொண்டுவர வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கால்வாய் மொத்தம் 72 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படுகிறது. 4 கட்டங்களாக இந்த கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை சபாநாயகர் அப்பாவு நேற்று பொன்னாக்குடியில் 4 வழிச்சாலையில் கால்வாய்க்காக மாற்றுப்பாதை அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் எம்.எல்.தேரி, மன்னார்புரம் இடையன்குடி, முதுமொத்தான்மொழி, கஸ்தூரிரெங்கபுரம், பொட்டல்விளை, கோட்டைகருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தண்ணீர் விடப்படும்

இந்த திட்டத்தில் பொன்னாக்குடி 4 வழிச்சாலையில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு 1,300 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மாற்றுப்பாதை அமைக்கும் பணி இன்னும் 10 நாட்களில் முடிவடைந்து விடும். பின்னர் ஏற்கனவே போக்குவரத்து நடைபெறும் பாதை உடைக்கப்பட்டு அதில் தண்ணீர் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த பணிகள் இந்த மாத இறுதியில் நிறைவு பெற்றுவிடும். அதைத்தொடர்ந்து தண்ணீர் விடப்படும்.

இந்த திட்டத்தின் இறுதிப்பகுதியான எம்.எல்.தேரி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படும். எம்.எல்.தேரி வரை 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பகுதிக்கான பணி முடிவடைந்து விடும். இதற்கு முன்பு பொட்டல்விளை பகுதி உள்ளது. அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கும் விரைந்து முடிக்கப்பட்டு அந்த பணிகளும் இந்த மாதத்திற்குள் முடிக்கப்படும்.

நிலத்தடி நீர்மட்டம்

இடையன்குடி பகுதியில் இரண்டு கட்டமாக பணி நடக்கிறது. அதில் ஒரு இடத்தில் 40 சதவீதமும், மற்றொரு இடத்தில் 45 சதவீதமும் பணிகள் முடிவடைந்து உள்ளன. மன்னார்புரம் பகுதியில் பணிகள் மிகவும் மந்தமாக நடக்கிறது. ஒரு இடத்தில் 20 சதவீதமும், மற்றொரு இடத்தில் 25 சதவீதமும் பணி நடந்துள்ளது. அடுத்து கோட்டைகருங்குளம் பகுதியிலும் பணி மந்தமாகத்தான் நடைபெறுகிறது. முதுமொத்தான்மொழியில் 65 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது.

தற்காலிகமாக 3,200 கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த கால்வாயில் இந்த ஆண்டு முதல்கட்டமாக நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1,300 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லப்படும். எம்.எல்.தேரிக்கு இந்த தண்ணீரை கொண்டு சேர்த்து விட்டால் வறண்ட பகுதியான இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உப்புத்தண்ணீர் மாறும். இதன்மூலம் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் முழு பலன் பெறாவிட்டாலும் 35 சதவீதத்திற்கு மேல் விவசாய நிலம் பயன்பெறும்.

நிலம் ஆர்ஜிதம்

இந்த திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 40 கிராமங்களில் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதில் 30 கிராமங்களில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு, ரூ.237 கோடி பணம் கொடுக்கப்பட்டது. இன்னும் தருவை, திசையன்விளை, முதுமொத்தான்மொழி, விஜயநாராயணம், மன்னார்புரம் உள்பட 10 கிராமங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் தேவையான நிதி கேட்டு முதல்-அமைச்சருக்கு தகவல் கொடுத்துள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு கிட்டத்தட்ட ரூ.105 கோடியும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.14 கோடியும் நிதி ஒதுக்க வேண்டும். நிதி வந்த பிறகு பணம் கொடுப்பதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். நான் இந்த நிதி கிடைப்பதற்கு முதல்-அமைச்சரையும், நிதித்துறை, வருவாய்த்துறை அமைச்சர்களையும் பார்த்து உரிய நடவடிக்கை எடுப்பேன். இந்த திட்டம் மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் விஷ்ணு, நில எடுப்பு வருவாய் அலுவலர் சுகன்யா, கண்காணிப்பு பொறியாளர்கள் செல்வராஜ், பத்மா, செயற்பொறியாளர்கள் பழனிவேல், அண்ணாதுரை, திருமலைக்குமார், அரசு ஒப்பந்தகாரர் ஆர்.எஸ்.முருகன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கமலா சுயம்புராஜன், அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன், வியாபாரிகள் சங்க பேரமைப்பு மாநில இணை செயலாளர் தங்கையா கணேசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story