அ.தி.மு.க. ஒற்றை தலைமை பிரச்சினையில் பா.ஜனதா தலையிடாது கன்னியாகுமரியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி


அ.தி.மு.க. ஒற்றை தலைமை பிரச்சினையில் பா.ஜனதா தலையிடாது  கன்னியாகுமரியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
x

அ.தி.மு.க. ஒற்றை தலைமை பிரச்சினையில் பா.ஜனதா தலையிடாது என கன்னியாகுமரியில் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

அ.தி.மு.க. ஒற்றை தலைமை பிரச்சினையில் பா.ஜனதா தலையிடாது என கன்னியாகுமரியில் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சர்வதேச யோகா தின கவுண்டவுன் நிகழ்ச்சி கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திரா கடற்கரை வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். அவரை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவஹர், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உலக யோகா தின கொண்டாட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. 75-வது ஆண்டின் சுதந்திர தின விழா, இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நோயற்ற வாழ்வு

இந்த வருடத்தில் 71-வது நாள் கவுண்டவுன் யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் நடைபெறுகிறது. நமது நாட்டில் சோம்நாத், உத்தரகாண்ட் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் நடக்கிறது. அதில் கன்னியாகுமரி இடம் பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வருகிற 21-ந் தேதி அன்று நாடு முழுவதும் 75,000 இடங்களில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நமது நாட்டில் தோன்றிய கலை யோகா. இது எளிமையான கலை. நோய்களை கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் யோகா மிகவும் முக்கியமான ஒன்று. யோகா செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திடலாம். உடல் மற்றும் மனதை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பயனுள்ளதாக உள்ளது.

யோகா செய்த மத்திய மந்திரி

கொரோனா அதிகரித்து வந்த காலகட்டத்தில் யோகா பயிற்சி மிகவும் உதவிகரமாக இருந்தது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தது. நமது இளைய தலைமுறையினருக்கு நோயற்ற வாழ்வை அளிப்பதற்கு யோகாவை முன்னிறுத்த வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் யோகா பயிற்சி மேற்கொள்வது அவசியம். யோகா மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தம் குறைந்து, புத்துணர்ச்சி உண்டாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து யோகா பயிற்சி நடனம், பரத நாட்டியம், சிலம்பம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.‌ பின்னர் மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவஹர் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள், கேந்திரா நிர்வாகிகள் உள்பட பலர் யோகா செய்தனர்.

கலந்துரையாடல்-கோரிக்கை

முன்னதாக கேந்திரா வளாகத்தில் குமரி மாவட்ட கால்நடை விவசாயிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகளுடன் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துரையாடினார். அப்போது அவர்களிடம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அதில் பயன்பெற்ற விவரங்களை கேட்டறிந்தார். அப்போது மாடுகளுக்கு இலவச இன்சூரன்ஸ் வழங்க வேண்டும், மாட்டு தீவனங்கள் மானிய விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். அதேபோல் மீனவ பிரதிநிதிகள் சார்பிலும் கடல் ஆம்புலன்ஸ் சேவை, ஹெலிகாப்டர் தளம் தேங்காப்பட்டணம்- இரையுமன்துரை இடையே செல்லும் தாமிரபரணி ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை துறை வருவாய் அதிகாரி ரேவதி, பெங்களூரு சி.எப்.எஸ்.பி. இயக்குனர் அருண்பிரசாத், நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, விவேகானந்தா கேந்திரா பொதுச்செயலாளர் பானு தாஸ், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள், மாணவர்கள், கேந்திரா நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எல்.முருகன் பேட்டி

நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. கட்சியில் நிலவி வரும் பிரச்சினை, அந்த கட்சியின் உள்கட்சி விவகாரம். அதனை அவர்கள் கூடி தீர்த்து கொள்வார்கள். அதில் பா.ஜனதா தலையிடாது. அக்னிபத் திட்டம் வரலாற்று சிறப்பு மிக்க திட்டம். இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகும். இளைஞர்களுக்கு சிறப்பான திட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story