நீர்நிலை புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி இருப்பவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் அமைச்சர் எவவேலு பேட்டி
நீர்நிலை புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி இருப்பவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தப்பட்டினம் கிராமத்தில் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான எ.வ. வேலு கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பொதுமக்களின் குறைகளை அவரவர் ஊர்களுக்கு சென்று மனுக்களை கேட்டு பெற்று நடவடிக்கை எடுக்கும் ஒரு நிகழ்ச்சி இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறாத ஒரு நிகழ்ச்சியாகும். மாநிலத்தில் முதன் முதலில் நடைபெறும் இந்த முகாமை சிறப்பாக செய்து முடித்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அந்த அடிப்படையில் பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெற்று குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இன்னும் ஒரு படி மேலே போய் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மனு கொடுக்க வருபவர்களுக்கு சாப்பாடும் கொடுத்து மனுக்களை பெறும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்காக அவரையும் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆன்லைன் ரம்மி
கொரோனா காலகட்டத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான நிதி நெருக்கடியிலும் கூட பொதுமக்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கி உள்ளார். முன்னேறிய நாடான சீனாவில் கூட இன்னமும் கொரோனா இருக்கின்ற காலகட்டத்தில் தமிழகத்தில் கொரோனா என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் கூட இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் தேர்தல் சமயத்தில் சொன்ன வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை முதல்-அமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார். மீதமுள்ள 3 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதோடு வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.
நெடுஞ்சாலை புறம்போக்கு மற்றும் நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி இருப்பவர்கள் உடனடியாக அதனை காலி செய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை அமல்படுத்துவது குறித்து வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடனிருந்தனர்.