மதுபோதையில் கத்தியை காட்டி பயணிகளுக்கு மிரட்டல்


மதுபோதையில் கத்தியை காட்டி பயணிகளுக்கு மிரட்டல்
x

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் மதுபோதையில் கத்தியை காட்டி பயணிகளுக்கு மிரட்டல் விடுத்த 3 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, ஈரோடு, பழனி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோர் திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வந்து வெளியூர்களுக்கு பஸ்களில் செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். குறிப்பாக இரவில் வெளியூர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பயணிகள் ஏராளமானோர் காத்திருப்பார்கள். அவர்களை அச்சுறுத்தும் வகையில் திருட்டு, மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து திண்டுக்கல்லில் அரங்கேறி வருகிறது.

இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி நள்ளிரவில் திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு 55, 40, 25 வயது மதிக்கத்தக்க 3 பேர் வந்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த பயணிகள் அவர்களை விலக்கிவிட சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பயணிகளை மிரட்டினர். ஆனாலும் பயணிகள் அவர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் வடக்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அவர்களிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில அவர்கள் மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்தவர்கள் என்பதும், மதுபோதையில் பயணிகளை மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசாரிடம் பேசிய பயணிகள் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க பஸ் நிலையத்தில் இரவில் தொடர் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story