பள்ளி மாணவர்களுக்காக புதிய கருவி அறிமுகம்
அருவங்காடு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்காக புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டது.
குன்னூர்,
தமிழகத்தில் புதிதாக மெய்நிகர் நூலகம் தொடங்கப்படும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி, குன்னூர் அருகே அருவங்காட்டில் உள்ள நூலகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் பயன்பாட்டிற்காக மெய்நிகர் கருவிகள் வசதி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக நூலகத்துக்கு 2 கருவிகள் வழங்கப்பட்டு, கருவிகள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த கருவியில் அறிவியல் சார்ந்த செயலிகள் உள்பட ஏராளமான செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளன.
இவை அனைத்தும் 360 டிகிரி, முப்பரிமாண தோற்றத்தில் மாணவ-மாணவிகளை கவரும் வண்ணம் காணப்படுகிறது. மாணவர்கள் எளிதில் கண்டுணர இயலாத வானிலை அறிவியல், ஆழ்கடல், அடர்ந்த காடுகள், அறிவியல், பரிசோதனைகள், உயிரியல், உடல் உறுப்பு செயல்பாடுகள், விலங்குகளின் அறிவியல், தொல்லியல் போன்ற பல பாடங்களை எளிதில் கண்டு கேட்டு உணர்ந்து முழுமையாக அறிந்திட இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. 12 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தகவலை அருவங்காடு கிளை நூலகர் ஜெய்ஸ்ரீ தெரிவித்து உள்ளார்.