அரசு மாதிரி பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை குறித்த அறிமுக கூட்டம்


அரசு மாதிரி பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை குறித்த அறிமுக கூட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2023 2:30 AM IST (Updated: 17 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை தொடர்பான அறிமுக கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை தொடர்பான அறிமுக கூட்டம், திண்டுக்கல் எம்.வி.எம். அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினர். அப்போது அவர் பேசுகையில், "அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களின் நலன்கருதி, திண்டுக்கல்லில் உண்டு-உறைவிட வசதியுடன் கூடிய அரசு மாதிரி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாலாஜி பிளாக்கில் மாதிரி பள்ளி செயல்படுகிறது.

இந்த பள்ளியில் சேர்க்க மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் 400 மாணவர்கள், 400 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கு நவீன டிஜிட்டல் வகுப்பறைகள், மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. நீட், ஜே.இ.இ., கியூட், நிப்ட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்று மாணவர்கள் தரமான கல்வியில் சேர வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. அதேபோல் விளையாட்டு உள்ளிட்ட தனித்திறன்களை வளர்க்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை மாணவ-மாணவிகள் நன்றாக பயன்படுத்தி எதிர்காலத்தில் சாதனை படைக்க வேண்டும்" என்றார்.

இதில் முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சுதாகர், சண்முகநாதன், மாதிரி பள்ளி மண்டல ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், தலைமை ஆசிரியர் ஜேசுதாசன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கதிரேஷன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித்திட்ட அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story