இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவியஇலங்கையை சேர்ந்த 8 பேர் கைது


இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவியஇலங்கையை சேர்ந்த 8 பேர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2023 12:15 AM IST (Updated: 25 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் பகுதியில் இருந்து கடத்திச்சென்ற பொருட்களை வாங்குவதற்காக இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவிய இலங்கையை சேர்ந்த 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் அவர்கள் கொண்டு வந்திருந்த தங்கக்கட்டிகளை கடலில் வீசி இருக்கலாம் என கருதி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ரோந்து பணி

தமிழக கடல் பகுதியிலேயே ராமேசுவரம் கடலுக்கு அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளது. இதனால் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதும், அகதிகள் போல் கடத்தல்காரர்கள் வந்து செல்வதும் நடைபெறுகிறது.

இதே போல் ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை, மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட பலவிதமான பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தனுஷ்கோடி அருகே நடுக்கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினரும், சுங்கத்துறையினரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

4 பேர் கைது

அப்போது சந்தேகப்படும்படியாக வந்த பைபர் படகை மடக்கி சோதனை செய்தனர். அந்த படகில் 20 சாக்கு பைகளில் 600 கிலோ மஞ்சள், 15 சாக்குபைகளில் 300 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

இவற்றை ராமேசுவரம் பகுதியில் இருந்து கடத்த முயன்றதாக மண்டபம் பகுதியை சேர்ந்த முகமது உபயத்துல்லா (வயது 41), வாசிம்அக்ரம்(31), முகமது இஷாக் (31), மொகிதீன்(31) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் சுங்கத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். 4 பேரிடமும் சுங்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய பகுதிக்குள் ஊடுருவல்

அப்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதாவது, தாங்கள் கடத்தி வந்த கடல் அட்டைகள், மஞ்சள் மூடைகளை வாங்க இந்தியாவின் கடல் பகுதிக்குள் சில இலங்கை படகுகள் ஊருடுவி இருப்பதாக அந்த 4 பேரும் கூறி இருக்கிறார்கள்.

உடனே அந்த படகுகள் ஊடுருவியதாக கூறப்படும் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு மீன்பிடிப்பது ேபான்று 4 பிளாஸ்டிக் படகுகள் நின்றிருந்தன. அவை இலங்கை படகுகள் என்பதால் அவற்றையும் மடக்கினர். ஒவ்வொரு படகில் தலா 2 பேர் வீதம் மொத்தம் 8 பேர் இருந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால், 8 பேரையும் கைது செய்தனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், மண்டபம் அழைத்து வந்து கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண், கூடுதல் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் மற்றும் கடலோர போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

கோர்ட்டில் ஆஜர்

இலங்கை கல்பட்டி பகுதியை சேர்ந்த ரிக்மண்ட் (37), பெர்னாண்டோ(45), பிரசாத் ரங்ககுமார்(40), ஜூட் மென்சன்(41), ஜீவா நாத்(34), ராக்சன்(35), பிரசாந்தி(42), சில்வர் ஸ்டார்(43) என்பதும், அதில் 6 பேர் இலங்கை தமிழர்கள் என்றும் தெரியவந்தது.

8 பேரும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து அவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.

தங்கக்கட்டிகள் கடலில் வீச்சா?

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, "8 பேரும் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் கடத்தி வந்து இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். படகில் தங்கக்கட்டிகள் இருந்தால் சிக்கிக்கொள்வோம் என நினைத்து, கடலோர காவல் படையினரை கண்டதும் தங்கக்கட்டிகளை கடலில் வீசினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.


Next Story