திற்பரப்புக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க திற்பரப்புக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திருவட்டார்:
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க திற்பரப்புக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திற்பரப்பு அருவி
குமரி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் போல் வெயில் சுட்டெரிக்கிறது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் குறைவான அளவு தண்ணீரே கொட்டுகிறது.
எனினும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று திற்பரப்புக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அங்கு அருவியிலும், அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளத்திலும் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர். மேலும் பூங்கா மற்றும் அலங்கார நீரூற்று ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். பின்னர் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து குதூகலத்துடன் வீடு திரும்பினர்.
மாத்தூர் தொட்டிப்பாலம்
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், கோடையை போன்று தற்போது வெயில் வாட்டி வதைப்பதால் திற்பரப்புக்கு அருவிக்கு வந்தோம். இந்த பயணம் இதமாக இருந்தது என்றனர்.
இதுபோல் மாத்தூர் தொட்டிப்பாலத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர். சிலர் ஆற்றில் குளித்து மகிழ்ந்ததையும் காணமுடிந்தது.