ஒகேனக்கல் அருகே மான்வேட்டை: 3 வாலிபர்களிடம் வனத்துறையினர் விசாரணை
பென்னாகரம்:
ஒகேனக்கல் அருகே மான்வேட்டையில் ஈடுபட்டது தொடர்பாக 3 வாலிபர்களை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வன விலங்குகள் வேட்டை
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே கர்நாடக எல்லையில் ஆலம்பாடி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான மான், கரடி, யானை உள்ளிட்ட விலங்குகள் சுற்றித் திரிகின்றன. மர்ம நபர்கள் இந்த பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.
வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்காக கர்நாடக மாநில வனத்துறை சார்பில் ஆலம்பாடி வனப்பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
3 வாலிபர்களிடம் விசாரணை
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 வாலிபர்கள் வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன், இந்த வனப் பகுதியில் சுற்றித் திரிந்தது கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. மேலும் இவர்கள் 3 பேரும் மான் வேட்டையில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.
இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்த 2 வாலிபர்கள் மற்றும் ஊட்ட மலையை சேர்ந்த ஒரு வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் கர்நாடக மாநில வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.