சரணடைந்த மாமனாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த வாலிபர் ஜெகன் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் சரணடைந்த மாமனார் சங்கரை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த வாலிபர் ஜெகன் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் சரணடைந்த மாமனார் சங்கரை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
புதுமாப்பிள்ளை கொலை
கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. அவதானப்பட்டி அடுத்த முழுகான்கொட்டாயை சேர்ந்தவர் சரண்யா (22). இவர்கள் இருவரும் பள்ளிப்பருவம் முதல் காதலித்து வந்துள்ளனர். இதற்கு சரண்யா வீட்டின் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையும் மீறி காதலர்கள் கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. டேம் ரோடு அருகே சென்ற ஜெகனை, சரண்யாவின் தந்தை சங்கர் உள்பட 3 பேர் வெட்டி கொலை செய்தனர். புதுமாப்பிள்ளை கொலை தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை நடந்த அன்றே ஜெகனின் மாமனார் சங்கர் (47) கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
காவலில் எடுத்து விசாரணை
அதன் தொடர்ச்சியாக கடந்த 23-ந் தேதி நல்லூரை சேர்ந்த நாகராஜ் (21), பில்லனகுப்பத்தை சேர்ந்த, முரளி (20) ஆகிய 2 பேரும் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.4-ல், நீதிபதி யுவராஜ் முன்பு சரணடைந்தனர். இதனிடையே நீதிமன்றத்தில் சரணடைந்த ஜெகனின் மாமனார் சங்கரை, போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது சங்கர் கூறியதாவது:-
கூலித்தொழிலாளியான ஜெகன் தனது மகள் சரண்யாவை காதலிப்பது குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. ஜெகனை திருமணம் செய்ய வேண்டாம் என்று மகள் சரண்யாவிடம் பலமுறை கூறியும் கேட்கவில்லை. எப்படியாவது தனது மகளை ஜெகனிடம் இருந்து பிரித்து விடலாம் என்ற எண்ணத்தில் அவரை மிரட்டுவதற்காக சிலருடன் சேர்ந்து சென்றேன். அங்கு நடந்த தாக்குதலில் எதிர்பாராதவிதமாக ஜெகன் இறந்துவிட்டார்' என்று கூறியுள்ளார்.
சேலம் சிறையில் அடைப்பு
இதையடுத்து 3 நாள் காவல் முடிந்து போலீசார் சங்கரை நேற்று கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இக்கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், மீண்டும் சங்கர் மற்றும் மற்ற 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவர் எனவும் போலீசார் தரப்பில் கூறினர்.