வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை
சேலத்தில் தையல் தொழிலாளி கொலையில் வாலிபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் தையல் தொழிலாளி கொலையில் வாலிபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தையல் தொழிலாளி
சேலம் அம்மாபேட்டை மாணிக்க வாசகர் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). தையல் தொழிலாளி. நேற்று முன்தினம் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் கத்திக்குத்து காயத்துடன், பச்சப்பட்டி பகுதியில் அவர் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை நடத்திய போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது மதுபோதையில் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தவரிடம் வாலிபர் ஒருவர் தகராறில் ஈடுபடுவது பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் கேட்டு தகராறு
இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது, வீட்டை விட்டு வெளியில் வந்த செல்வராஜ், மது குடித்து விட்டு போதையில் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்து உள்ளார். அப்போது பச்சப்பட்டியை சேர்ந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவர் தடுத்து நிறுத்தி அவரிடம் பணம் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் வாலிபர் அவரை கத்தியால் குத்தி இருக்கலாம்.
இதனால் அதிக ரத்தம் வெளியேறி அவர் இறந்திருக்கலாம். பிடிபட்டவர் மாறுபட்ட தகவல்கள் கூறி வருகிறார். எனவே அவர் தான் கொலையாளியா? என்பது குறித்து வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.