3-வது நாளாக விசாரணை: செந்தில்பாலாஜியை டெல்லி அழைத்துச் செல்ல திட்டமா? அமலாக்கத்துறை பதில்


3-வது நாளாக விசாரணை: செந்தில்பாலாஜியை டெல்லி அழைத்துச் செல்ல திட்டமா? அமலாக்கத்துறை பதில்
x

அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் நேற்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்றது. அவரை டெல்லி அழைத்து செல்லும் திட்டம் உள்ளதா? என்பதற்கு அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது.

சென்னை,

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

அதன் அடிப்படையில் செந்தில்பாலாஜியை கடந்த 7-ந்தேதியில் இருந்து காவலில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடக்கிறது.

இதன்படி நேற்று 3-வது நாளாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடந்தது. அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ள ஆவணங்களை வைத்து அவரிடம் விளக்கம் கேட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இதுவரை நடந்துள்ள விசாரணையில் 150-க்கும் மேற்பட்ட ஆவணங்களுக்கு செந்தில்பாலாஜி விளக்கம் அளித்து உள்ளார். நேற்றும் ஆவணங்கள் அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

டெல்லி அழைத்து செல்ல திட்டமா?

விசாரணைக்கு இடையே அவருக்கு சற்று ஓய்வு கொடுக்கப்படுகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்து சரியான நேரத்துக்கு, செந்தில்பாலாஜிக்கு கொடுக்கப்ப டுகிறது. டாக்டர்கள் குழுவினரும் செந்தில்பாலாஜியை தினமும் 2 முறை பரிசோதிக்கிறார்கள். ரத்த அழுத்தம் பார்க்கப்படுகிறது.

செந்தில் பாலாஜியை விமானத்தில் டெல்லிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

அந்த தகவலுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதால், அவரை டெல்லி அழைத்து செல்லும் திட்டம் இல்லை, என்று கூறி விட்டார்கள். இதை செந்தில்பாலாஜி தரப்பும் உறுதி செய்து விட்டது.


Next Story