43 டன் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த 3 லாரி டிரைவர்களிடம் விசாரணை


43 டன் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த 3 லாரி டிரைவர்களிடம் விசாரணை
x

43 டன் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த 3 லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தஞ்சையில் ஆய்வு செய்த டி.ஜி.பி. ஆபாஷ்குமார் கூறினார்.

தஞ்சாவூர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாயிலாக விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்யப்படும் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு அங்கிருந்து அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அரவை செய்யப்பட்டு அரிசி மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாயிகளிடம் நெல்லை நேரடி கொள்முதல் செய்வதில், வெளி மாவட்டங்களில் இருந்து ஏதேனும் இடைத்தரகர்கள் வாயிலாக உரிய ஆவணங்கள் இல்லாமல் நெல் மூட்டைகள் எடுத்து வருவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

9 மாவட்டங்களில் ஆய்வு

மேலும் அரிசி ஆலைகளில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்கவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் டி.ஜி.பி. ஆபாஷ்குமார் மேற்பார்வையில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி திருச்சி மண்டலத்தில் உள்ள திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் ரேஷன் அரிசி அரவை செய்யும் ஆலைகள் மற்றும் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் உரிய ஆவணங்களுடன் வருகிறதா என தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

29 டன் நெல் பறிமுதல்

மேலும் சோதனைச் சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைகளிலும் கடந்த மூன்று நாட்களாக தீவிர வாகன சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் டி.ஜி.பி.ஆபாஷ்குமார் தஞ்சையை அடுத்த மருங்குளத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திலும், அரிசி ஆலையிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக துணை மேலாளர் முத்தையா, கொள்முதல் அதிகாரி எழில் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

இது குறித்து டி.ஜி.பி. ஆபாஷ்குமார் கூறுகையில், "திருச்சி மண்டலத்தில் இதுவரை நடந்த தீவிர வாகன சோதனையில் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் எந்த ஆவணங்களும் இல்லாமல் சுமார் 29 டன் நெல் ஏற்றி வரப்பட்ட 2 லாரிகளை பிடித்து நுகர் பொருள் வாணிப கழக துணை மேலாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 43 டன் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த 3 லாரிகளை பிடித்து டிரைவர்களிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை திருச்சி மண்டலத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் மையங்கள் மற்றும் 36 க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி அரவை ஆலைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது"என்றார்


Next Story