பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் 2-வது நாளாக விசாரணை குழுவினர் ஆய்வு
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் 2-வது நாளாக விசாரணை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த குமரிமன்னன், ராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் குமரிமன்னன் அங்கு பணியிட மாற்றமாகி செல்லாமல் இருந்தார். இந்தநிலையில் குமரிமன்னன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் பெரம்பலூர் நகராட்சியில் குமரிமன்னன் ஆணையராக பணிபுரிந்த காலத்தில், அவரால் கையாளப்பட்ட கோப்புகளின் ஆவணங்களை ஆய்வு செய்து, அதில் குறைபாடுகள் அல்லது முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா? என்பதை கண்டறிந்து 3 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி அந்த விசாரணை குழுவினர் நேற்று முன்தினம் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் முகாமிட்டு ஆவணங்களை ஆய்வு செய்ய தொடங்கினர். 2-வது நாளாக நேற்றும் விசாரணை குழுவில் உள்ள 4 பேர் வந்து நகராட்சி அலுவலகத்தில் காலை முதல் மாலை வரை முகாமிட்டு ஆவணங்களை ஆய்வு செய்தனர். 3-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) விசாரணை குழுவினர் ஆய்வு செய்யலாம் என்று தெரிகிறது. ஆய்வு செய்த அறிக்கையை விசாரணை குழுவினர் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையாவிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.