வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேருக்கு சிறை தண்டனை
வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து அம்பை கோர்ட்டு உத்தரவிட்டது.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி குமாரகோவில் மேலரதவீதியை சேர்ந்தவர் பத்மினி (வயது 62). இவர் கடந்த 2015-ம் ஆண்டு வீட்டில் இருந்து வங்கிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, கல்லிடைக்குறிச்சி ஏகாம்பரம் தெரு அருகில் மோட்டார் சைக்கிள் வந்த 3 பேர் பத்மினி அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பத்மினி கொடுத்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கோபாலசமுத்திரம் அருகே உள்ள கொத்தங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த பாண்டி (32), பேட்டையைச் சேர்ந்த செல்வன் (36), கோபாலசமுத்திரம் முப்பிடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் (35), என்பது தெரியவந்தது.
இதுதொடர்பான வழக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பல்கலைச்செல்வன் விசாரித்து, பாண்டிக்கு 1 ஆண்டு சிறை தண்டனை, ரூ.4000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்தார்.
மேலும் செல்வனுக்கு சிறையில் இருந்த காலம் போக ரூ.6000 அபராதமும், கட்ட தவறினால் 2 மாதம் சிறை தண்டனையும், முருகேசனை விடுதலை செய்தும் தீர்ப்பு அளித்தார்.