திருச்செந்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு
திருச்செந்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் மெயின்ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே வடிகால் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் குறுக்கே குழாய்கள் பதித்து பாலம் அமைக்கப்பட்டது. இதற்கு ஓடையை மறித்து பாலம் அமைத்தால் மழை காலத்தில் வெள்ள நீர் செல்வதில் தடை ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதுதொடர்பாக திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் தலைமையில் ஏற்கனவே சமாதானம் கூட்டம் நடந்தது. அதில் ஓடை மீது பாலம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே வடிகால் ஓடை மீது திடீரென குழாய் பதித்து தற்காலிக பாலம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தற்காலிக பாலத்தை உடனடியாக அகற்றக்கோரி திருச்செந்தூர் நகர முன்னாள் தி.மு.க. செயலாளர் மந்திரமூர்த்தி, நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் முத்துகிருஷ்ணன், ஆறுமுகம் உள்ளிட்ட சிலர் நேற்று முன்தினம் மாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தற்காலிக பாலத்தை அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. உடனடியாக அந்த பாலம் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதற்கிடையே அனுமதியின்றி மறியல் போராட்டம் நடத்தியதாக தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் மந்திரமூர்த்தி, தி.மு.க. கவுன்சிலர்கள் முத்துகிருஷ்ணன், ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல் முத்து, தமிழக மாணவர் இயக்க தென் மண்டல அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் மீது திருச்செந்தூர் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.