காமராஜர் துறைமுக நிர்வாக இயக்குனராக ஐரீன் சிந்தியா பொறுப்பேற்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தவர்


காமராஜர் துறைமுக நிர்வாக இயக்குனராக ஐரீன் சிந்தியா பொறுப்பேற்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தவர்
x

சென்னை காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குனராக ஜே.பி.ஐரீன் சிந்தியா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை,

சென்னை காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குனராக ஜே.பி.ஐரீன் சிந்தியா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக அவர் மத்தியபிரதேச மாநில அரசில் நிதித்துறை இயக்குனராக (பட்ஜெட்) பதவி வகித்துவந்தார். ஐரீன் சிந்தியா 2008-ம் ஆண்டு மத்தியபிரதேச மாநில ஐ.ஏ.எஸ். அணியை சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. (நிதி), அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி.யில் நுண்பொருளாதாரம் பயின்றுள்ளார். ஐரீன் சிந்தியா போபால் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரியாகவும், சத்னா மாவட்ட உதவி கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் புர்கான்பூர் மற்றும் பன்னா மாவட்டங்களில் கலெக்டராகவும் பணியாற்றியிருக்கிறார்.

ராஜ்ய சிக்ஷா கேந்திரா இயக்குனராகவும், உதய் திட்டத்தின் இயக்குனராகவும் (நகர்ப்புறம்) மத்தியபிரதேச அரசின் முக்கிய பொறுப்புகளை கவனித்துவந்தார். 2014-15 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்தியதற்காக 2016-ம் ஆண்டு மத்தியபிரதேச மாநில தேர்தல் ஆணையம் ஐரீன் சிந்தியாவை கவுரவித்தது. இதேபோல, சிறு, குறு மற்றும் நடுத்தர அலகுகளுக்கான உதயம் கிராந்தி திட்டத்துக்காகவும், அரசின் மின்னணு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காகவும் விருதுகள் பெற்றுள்ளார்.


Next Story