பயணிகளை பதம் பார்க்கும் இரும்பு தகடு


பயணிகளை பதம் பார்க்கும் இரும்பு தகடு
x

கூடலூர்-அய்யன்கொல்லி இடையே இயக்கப்படும் அரசு பஸ்சில் உடைந்து காணப்படும் இரும்பு தகடுகள் பயணிகளின் கைகளை பதம் பார்த்து வருகிறது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர்-அய்யன்கொல்லி இடையே இயக்கப்படும் அரசு பஸ்சில் உடைந்து காணப்படும் இரும்பு தகடுகள் பயணிகளின் கைகளை பதம் பார்த்து வருகிறது.

பயணிகள் கடும் சிரமம்

கூடலூரில் இருந்து பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சேரம்பாடி, எருமாடு, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, பாட்டவயல், பிதிர்காடு உள்பட பல ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக தினமும் கூடலூர் வந்து செல்கின்றனர்.

இதுதவிர ஏராளமான மாணவ-மாணவிகள் அரசு கல்லூரியில் படித்து வருவதால் அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் இயக்கப்படும் பஸ்கள் மிகவும் மோசமாக உள்ளன.

இதனால் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. மிகவும் மோசமான நிலையில் காணப்படும் பஸ்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாததால் அரசு பஸ்களால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பதம் பார்க்கிறது

கூடலூரில் இருந்து அய்யன்கொல்லிக்கு இயக்கப்படும் அரசு பஸ்சில் பல இடங்களில் இரும்பு தகடுகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் படிக்கட்டுகளும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது.

பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கை, கால்களை இரும்புத் தகடுகள் பதம் பார்த்து வருகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

இது குறித்து பயணிகள் கூறியதாவது:-

பஸ்சில் அமரக்கூடிய இருக்கைகளின் அருகே ஜன்னல் ஓரத்தில் பல இடங்களில் இரும்பு தகடுகள் உடைந்து காணப்படுகிறது. இதேபோல் படிக்கட்டுகளில் உள்ள தகடுகள், பலகைகளும் மோசமாக உள்ளது. இதனால் பயணம் செய்யும் சமயத்தில் கை, கால்களில் காயங்களை ஏற்படுத்துகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story