சம்பளம் வழங்குவதில் முறைகேடு: தூய்மை பணியாளர்கள் புகார்
மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் சம்பளம் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக தூய்மை பணியாளர்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி மனுக்கள் வாங்கினார். மொத்தம் 229 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 700 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில், பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கோகிலாபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மனு கொடுத்தனர். அதுபோல், மார்க்கையன்கோட்டை பேரூராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் சிலர் கொடுத்த மனுவில், "மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் 30 நாட்கள் பணியாற்றினாலும் 23 நாட்களுக்கே சம்பளம் வழங்கப்படுகிறது. அலுவலகத்தில் இருந்த வருகை பதிவேட்டை எடுத்து பார்த்ததற்காக 5 தூய்மை பணியாளர்களை பணிக்கு வர வேண்டாம் என்று நிறுத்தி விட்டார்கள். எனவே பேரூராட்சியில் பழைய தூய்மை பணியாளர்களை பணி செய்ய உத்தரவிட வேண்டும். அரசு உத்தரவுப்படி நாள் ஒன்றுக்கு ரூ.483 சம்பளம் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.