கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வினியோகம் செய்வதில் குளறுபடி
சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி பகுதியில் குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடி காரணமாக 28 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி,
சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி பகுதியில் குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடி காரணமாக 28 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளப்பட்டி பஞ்சாயத்து
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் பள்ளப்பட்டி பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்தில் 28 குக் கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காத நிலை இருந்து வந்த போது கடந்த அ.தி.மு.க.ஆட்சியில் அப்போதைய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் முயற்சியால் சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி பஞ்சாயத்து பகுதிக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.
குளறுபடி
இந்தநிலையில் தற்போது பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தினமும் 2 லட்சம் முதல் 3 லட்சம் லிட்டர் வரை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீரை வைத்து பஞ்சாயத்து நிர்வாகம் 13 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மேலும் குடிநீர் கொண்டு வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 8 இடங்களில் தண்ணீர் வீணாகி வருகிறது.
இதை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சில பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மோட்டார் பழுது
குடிநீர் வினியோகம் செய்ய பயன்படுத்தப்படும் மின்மோட்டார்களில் 3 மின் மோட்டார்கள் பழுது ஏற்பட்டு அவைகள் சரி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் பள்ளப்பட்டி பஞ்சாயத்து மக்கள் விலை கொடுத்து குடிநீர் வாங்கி உபயோகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது, குடிநீர் குழாயில் சேதம், மின் மோட்டார்கள் பழுது ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம். விரைவில் சரி செய்துவிடுவதாக கூறி இருக்கிறார்கள். இந்த பழுதுகள் சரி செய்தவுடன் சீரான குடிநீர் வினியோகம் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.