ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதில் முறைகேடு
இந்திரவனம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு
இந்திரவனம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்ஜீவன் திட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இந்திரவனம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தில் 2022 2023-ம் ஆண்டுக்கு 15-வது நிதி குழுவில் இருந்து 52 வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு ரூ.3 லட்சத்து 69 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து இந்த திட்டம் செய்வதற்கு டெண்டர் எடுக்கப்பட்டு அந்த கிராமத்தில் திட்டப்பணிகள் நடந்தது.
ஆனால் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு கொடுக்காமல் பழைய குடிநீர் இணைப்பில் 10 வீடுகளுக்கு இந்த திட்டத்தில் இணைத்துள்ளனர்.
மேலும் குடிநீர் பைப்லைன் புதைக்காமல் 42 வீடுகளுக்கு குடிநீர் குழாய் மற்றும் தடுப்புச்சுவர் அமைத்து குடிநீர் இணைப்பு கொடுத்ததாக செய்துள்ளனர்.
குடிநீர் வராததால் அந்த பகுதி மக்கள் ஏரி மற்றும் கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.
முறைகேடு
பின்னர் 15-வது நிதிக்குழுவில் ஜல்ஜீவன் திட்டத்தில் 52 வீடுகளுக்கு இணைப்பு கொடுத்ததாக அந்த பகுதியில் எழுதி வைத்தனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் குடிநீர் இணைப்பு கொடுக்காமல் கொடுத்ததாக எழுதி வைத்துள்ளதை பார்த்து ஆத்திரம் அடைந்தனர். பின்னர் குடிநீர் குழாய்களை எடுத்து பார்த்தபோது அதில் குடிநீர் பைப்லைன் அமைக்காமல் குழாய்கள் மட்டும் பதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து தண்ணீர் வராமல் முறைகேடு செய்துள்ளதாக பொதுமக்கள் கலெக்டருக்கு புகார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஊரக செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், ஆரணி உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தன், செய்யாறு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சுரேஷ்குமார், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வேணுகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று இரவு 9 மணிக்கு இந்திரவனம் கிராமத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது பூமிக்கு அடியில் குடிநீர் குழாய்க்கு பைப்ைலைன் அமைக்காதது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து இன்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் பைப்லைன் போடுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. 52 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பா.ஜ.க.வினர் கோஷம்
இந்த நிலையில் சேத்துப்பட்டு பாரதீய ஜனதா கட்சியினர் திடீரென அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் மாவட்ட செயலாளர் தா.பாஸ்கரன் தலைமையில் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், முன்னாள் நகர தலைவர் கிஷோர்குமார் ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், மகளிர் அணி தலைவி தேவி ஆகியோர் குடிநீர் பைப் மற்றும் காலி குடங்களுடன் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை சரியாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெண்டர் விட்டதை ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் கூறுகையில், இந்த பணிக்கான டெண்டர் செப்டம்பர் மாதம் விடப்பட்டது. முறையாக அனைத்து வீடுகளுக்கும் குடி தண்ணீர் கிடைப்பதற்கு பணிகளை நேரில் பார்த்து வருகிறேன் என்றார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.