ரூ.236.83 கோடியில் நீர்பாசன திட்டங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.236.83 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் நீர்பாசன திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.236.83 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் நீர்பாசன திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
சூளகிரி ஊராட்சி ஒன்றியம் எண்ணேகொள் அணைக்கட்டில் ரூ.233 கோடி மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணிகள், ரூ.3 கோடியே 83 லட்சம் மதிப்பில் அத்திமுகாம் தளவாய் ஏரி மற்றும் கோவிந்தகவுண்டன் ஏரிகள் தூர்வாரி புனரமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.236 கோடியே 83 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
ஏரிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ், சூளகிரி வட்டத்தில் அத்திமுகம் தளவாய் ஏரி, கோவிந்தகவுண்டன் ஏரி, குப்பம்மா ஏரி, தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள சித்தேகவுண்டன் ஏரி உள்ளிட்ட 4 ஏரிகள் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ள ரூ.3.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 ஏரிகளில் 723.80 ஏக்கர் நிலங்களின் பாசன வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
திட்டப்பணிகள்
இந்த ஏரிகளில் தூர்வாரி, கரையை பலப்படுத்துதல், மதகுகள் சரி செய்யும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மழைக்காலங்களில் ஏரிக்கு வரும் மழைநீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு வழங்க வேண்டும் என்று பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், ரூ.233 கோடி மதிப்பில் எண்ணேகொள் அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுறத்தில் இருந்து புதிய வழங்கு கால்வாய் அமைத்து தென்பெண்ணை ஆற்றில் இருந்து வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை கிருஷ்ணகிரி, தா்மபுரி மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு நீர் வழங்குவதற்கான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
தற்போது, அணைக்கட்டில் இருந்து வலதுபுறத்தில் சுமார் 50.65 கி.மீ தொலைவிற்கு பிரதான கால்வாயும் 5.51 கிளைக்கால்வாய் வெட்டப்பட உள்ளது. இதேபோல் இடதுபுறத்தில் சுமார் 22.675 கி.மீ தொலைவிற்கு பிரதான கால்வாயும் 2.40 கிளைக்கால்வாய் வெட்டப்பட உள்ளது.
நடவடிக்கை
மேலும், வலதுபுறக்கால்வாய் 15 நாட்களில் வழங்க ஏதுவாக இடது மற்றும் வலதுபுற கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 33 ஏரிகள் மற்றும் 1 அணையின் பாசன பரப்பான 3,408 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். இக்கால்வாய் பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) குமார், உதவி செயற்பொறியாளர்கள் உதயகுமார், உதவி பொறியாளர்கள் பார்த்தீபன், சையத் ஜக்ருதீன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.