தடை விதித்தால் போதுமா? 'பிளாஸ்டிக்' ஒழியுமா?


தடை விதித்தால் போதுமா? பிளாஸ்டிக் ஒழியுமா?
x
தினத்தந்தி 1 Dec 2022 6:45 PM GMT (Updated: 1 Dec 2022 6:46 PM GMT)

தடை விதித்தால் மட்டும் போதுமா, பிளாஸ்டிக் ஒழிந்து விடுமா என்பது குறித்து தேனி மாவட்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

தேனி

எங்கும் பிளாஸ்டிக். எதிலும் பிளாஸ்டிக். அதுதான் இன்றைய நம்முடைய அன்றாட வாழ்க்கையாக இருக்கிறது.

காலையில் எழுந்ததும் பல் துலக்குவது, பாத்திரம் விளக்குவது, காய்கறி வாங்குவது என அனைத்து பயன்பாட்டிலும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆக்கிரமிப்புதான்.

எளிதில் எடுத்துச்செல்லலாம், வேண்டாம் என்றால் வீசிவிட்டுப் போகலாம். விலையோ மலிவு, பொருளும் மெலிது, கையாளுவது எளிது. இதுபோன்ற சாதகமான அம்சங்கள்தான் நமது பழக்க வழக்கங்களில் இருந்து, பிளாஸ்டிக் பொருட்களைப் பிரிக்க முடியாமல் செய்கிறது.

பிளாஸ்டிக்கின் வரவால் நாம் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து விலகிப் போய்க்கொண்டு இருக்கிறோம்.

ஒரு பிளாஸ்டிக் பையின் பயன்பாடு என்பதோ, குறுகிய நேரம் மட்டும்தான். அதன் பிறகு அதை தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் அது ஏற்படுத்தக்கூடிய எதிர்விளைவுகளை யாரும் எண்ணி பார்ப்பது இல்லை.

இதை எல்லோரும் தெரிந்தே செய்கிறோம் என்று சுற்றுச்சூழல், உயிரின ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். அதிலும் அதிகம் படித்தவர்கள்தான் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை அதிகளவில் ஊக்கப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

பயன்படுத்த தடை

பிளாஸ்டிக் பொருட்களில் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருப்பவை, 'யூஸ் அன்ட் துரோ' என்று சொல்லப்படுகிற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகள்தான்.

இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதியில் இருந்து, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்ததோடு, இந்த பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, வினியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்துக்கும் தடை விதிப்பதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் தடையை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது. பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி, பலூனில் கட்டப்படும் பிளாஸ்டிக் குச்சி, பிளாஸ்டிக் கொடி, மிட்டாயின் பிளாஸ்டிக் உறை, ஐஸ்கிரீம் குச்சி, அலங்கார வேலைகளுக்கான தெர்மாகோல், சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் முள்கரண்டி, தேக்கரண்டி, கத்தி, சுவீட் பாக்ஸ், அழைப்பிதழ், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை சுற்றி கட்டப்படும் பிளாஸ்டிக் சுருள்கள், பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி. பேனர்கள் ஆகியவற்றுக்கும் இந்த தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, உணவுப்பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள், தெர்மாகோல் தட்டுகள், டம்ளர்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சுக்குழாய்கள், தூக்குபைகள் ஆகியவற்றை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சாத்தியமாகி இருக்கிறதா?

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையை கண்காணிக்கவும், அமல்படுத்தவும் தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு, பிளாஸ்டிக் தடையை கண்காணித்து வருகிறது. இதில் அனைத்து துறை செயலாளர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் உள்பட 19 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இக்குழு 2 மாதத்துக்கு ஒருமுறை கூடி பிளாஸ்டிக் தடை குறித்து விவாதித்து வருகிறது. மேலும், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த மாவட்டம், மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய அளவில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது போன்ற தகவல்களை சமீபத்தில் தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.இந்த தடை உத்தரவு வருவதற்கு முன்பே தமிழக அரசு 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை தொடங்கி, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தியது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தானியங்கி எந்திரங்களும் வைக்கப்பட்டு, பொதுமக்கள் மஞ்சப்பை வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

மறுசுழற்சி

அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை, நடைமுறையில் சாத்தியமாகி இருக்கிறதா என்பது பற்றி பலதரப்பு மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

ஜெயராம் (வர்த்தகர், தேனி) :- ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த போதிலும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. வணிகர்கள் பலரும் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து வெளியே வந்து விட்டனர். ஆனாலும் பொட்டலமிட்டு வரும் பொருட்கள் பலவும் பிளாஸ்டிக் பைகளில் தான் வருகிறது. அவற்றை மறுசுழற்சி செய்ய முடியும் என்றாலும் மக்கள் தங்கள் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது இல்லை.

பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு துணிப்பை வழங்கப்படுகிறது. ஆனால், அவற்றை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவது இல்லை. மது குடித்துவிட்டு சாலையில் மதுபான பாட்டில்களை வீசிச் செல்வது எப்படி இழிவான செயலோ, அதேபோன்று தான் பிளாஸ்டிக் பொருட்களை தெருக்கள், நீர்நிலைகளில் வீசுவதும் ஆகும். வணிகர்கள் துணிப்பையை வாங்கும் போது அதிக செலவு ஆகிறது. எனவே, துணிப்பை உற்பத்தியை ஊக்குவிக்க அரசு மானியங்கள் வழங்கவும், குறைந்த விலைக்கு துணிப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடுமையான தண்டனை

சீனிவாசன் (சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், கூடலூர்) :- பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க சட்டம் இயற்றினால் மட்டும் போதாது. அவற்றை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும். கள்ளத்தனமாக பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 'சீல்' வைத்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.

மாணவர்களிடமும், மக்களிடமும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் அதிக அளவில் உள்ளது. ஆனால், அவை முறையாக மறுசுழற்சி செய்யப்படுவது இல்லை. இதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டாலும் மீண்டும் குப்பைகளை கொட்டுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மனச்சோர்வு அடையச் செய்கிறது.

அபராதம் விதிக்க வேண்டும்

காசிவிஸ்வநாதன் (சுற்றுச்சூழல் ஆர்வலர், கோகிலாபுரம்) :- இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல், நீர்நிலைகளில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீதும் அபராதம் விதிக்க வேண்டும். நீர்நிலைகளில் மது அருந்தும் நபர்கள் நீர்நிலைகளில் மதுபான பாட்டில்களை வீசிச் செல்வதும், பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் பைகளை வீசிச் செல்வதும் அதிக அளவில் நிகழ்கிறது.

இதனால், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் மாசுபடுகின்றன. இது பல்லுயிர் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனையை முற்றிலும் நிறுத்த வேண்டும். நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும்.

விளைநிலங்கள் பாதிப்பு

ராஜ்குமார் (விவசாயி, கம்பம்) :- பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். பல ஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மையுடைய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அவற்றை வீதியிலும் நீர் நிலைகளிலும் வீசுவதால், மழை காலங்களில் அவை விளை நிலங்களுக்குள் இழுத்து வரப்பட்டு நிலங்கள் பாழாகின்றன.

விவசாய பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. நீர்நிலைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணுக்குள் புதைவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை விளைநிலங்களில் உழவுப் பணி மேற்கொள்ளும் போதெல்லாம் மண்ணுக்குள் புதைந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் வெளி வருகின்றன. எனவே இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்


Related Tags :
Next Story