தடை விதித்தால் போதுமா? 'பிளாஸ்டிக்' ஒழியுமா?


தடை விதித்தால் போதுமா?  பிளாஸ்டிக் ஒழியுமா?
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தடை விதித்தால் போதுமா? ‘பிளாஸ்டிக்' ஒழியுமா? என பொதுமக்கள். அதிகாாிகள் கருத்து தொிவித்துள்ளனா்.

விழுப்புரம்

எங்கும் பிளாஸ்டிக். எதிலும் பிளாஸ்டிக். அதுதான் இன்றைய நம்முடைய அன்றாட வாழ்க்கையாக இருக்கிறது.

காலையில் எழுந்ததும் பல் துலக்குவது, பாத்திரம் விளக்குவது, காய்கறி வாங்குவது என அனைத்து பயன்பாட்டிலும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆக்கிரமிப்புதான்.

எளிதில் எடுத்துச்செல்லலாம், வேண்டாம் என்றால் வீசிவிட்டுப் போகலாம். விலையோ மலிவு, பொருளும் மெலிது, கையாளுவது எளிது. இதுபோன்ற சாதகமான அம்சங்கள்தான் நமது பழக்க வழக்கங்களில் இருந்து, பிளாஸ்டிக் பொருட்களைப் பிரிக்க முடியாமல் செய்கிறது.

பிளாஸ்டிக்கின் வரவால் நாம் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து விலகிப் போய்க்கொண்டு இருக்கிறோம்.

ஒரு பிளாஸ்டிக் பையின் பயன்பாடு என்பதோ, குறுகிய நேரம் மட்டும்தான். அதன் பிறகு அதை தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் அது ஏற்படுத்தக்கூடிய எதிர்விளைவுகளை யாரும் எண்ணி பார்ப்பது இல்லை.

இதை எல்லோரும் தெரிந்தே செய்கிறோம் என்று சுற்றுச்சூழல், உயிரின ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். அதிலும் அதிகம் படித்தவர்கள்தான் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை அதிகளவில் ஊக்கப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

பயன்படுத்த தடை

பிளாஸ்டிக் பொருட்களில் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருப்பவை, 'யூஸ் அன்ட் துரோ' என்று சொல்லப்படுகிற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகள்தான்.

இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதியில் இருந்து, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்ததோடு, இந்த பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, வினியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்துக்கும் தடை விதிப்பதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் தடையை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது. பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி, பலூனில் கட்டப்படும் பிளாஸ்டிக் குச்சி, பிளாஸ்டிக் கொடி, மிட்டாயின் பிளாஸ்டிக் உறை, ஐஸ்கிரீம் குச்சி, அலங்கார வேலைகளுக்கான தெர்மகோல், சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் முள்கரண்டி, தேக்கரண்டி, கத்தி, சுவீட் பாக்ஸ், அழைப்பிதழ், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை சுற்றி கட்டப்படும் பிளாஸ்டிக் சுருள்கள், பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி. பேனர்கள் ஆகியவற்றுக்கும் இந்த தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, உணவுப்பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள், தெர்மகோல் தட்டுகள், டம்ளர்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சுக்குழாய்கள், தூக்குபைகள் ஆகியவற்றை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சாத்தியமாகி இருக்கிறதா?

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையை கண்காணிக்கவும், அமல்படுத்தவும் தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு, பிளாஸ்டிக் தடையை கண்காணித்து வருகிறது. இதில் அனைத்து துறை செயலாளர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் உள்பட 19 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு 2 மாதத்துக்கு ஒருமுறை கூடி பிளாஸ்டிக் தடை குறித்து விவாதித்து வருகிறது. மேலும், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த மாவட்டம், மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய அளவில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது போன்ற தகவல்களை சமீபத்தில் தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இந்த தடை உத்தரவு வருவதற்கு முன்பே தமிழக அரசு 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை தொடங்கி, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தியது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தானியங்கி எந்திரங்களும் வைக்கப்பட்டு, பொதுமக்கள் மஞ்சப்பை வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை, நடைமுறையில் சாத்தியமாகி இருக்கிறதா என்பது பற்றி பலதரப்பு மக்கள் மற்றும் அதிகாரியிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

100 சதவீதம் ஒழிக்க முடியாது

தமிழ்நாடு-பாண்டி பிளாஸ்டிக் சங்க தலைவரும், சென்னை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சங்க தலைவருமான ஜி.சங்கரன் கூறுகையில், 'சின்ன கடைகள், உற்பத்தியாளர்களை நசுக்குகிறார்கள். பெரிய கடைகள், உற்பத்தியாளர்களை கண்டுகொள்வதில்லை. ஒருசாராருக்கு சாதகமான தடையாக இது இருக்கிறது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை என்று சொல்கிறார்கள். அண்டை மாநிலமான புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத்தில் தடை இல்லை. அங்கிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. மோனோ லேயர், மல்டி லேயர் என்று பிளாஸ்டிக் இருக்கிறது. இதில் மல்டி லேயர் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்ய முடியாது. ஆனால் அதற்கு அனுமதி. மறுசுழற்சி செய்யக்கூடிய மோனோ லேயர் பிளாஸ்டிக்குக்கு தடை என்கிறார்கள். காரணம், மல்டி லேயர் பிளாஸ்டிக்குகளை பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. பிளாஸ்டிக் தடை உத்தரவில் ஒன்று மட்டும் தெரிகிறது. பெரிய நிறுவனங்கள் செயல்பட வேண்டும். சிறிய நிறுவனங்கள் செயல்படக்கூடாது என்ற நோக்கம்தான் அது. பிளாஸ்டிக்கை குறைக்கவேண்டும் என்ற தெளிவு இல்லை. 100 சதவீதம் இதை ஒழிக்க முடியாது. இதற்கு மாற்றாக சிறந்த பொருட்களை விலையில், தரத்தில், உபயோகத்தில் இருக்கும்வகையில் கொண்டுவரவேண்டும். பாக்கு தட்டு, பேப்பர் பை ஆகியவை ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான். அதைத்தான் மாற்று ஏற்பாடு என்கிறார்கள். ஏற்கனவே இருந்த அந்த பொருட்கள் சரியில்லை என்பதால்தான் மாற்றாக பிளாஸ்டிக் வந்தது. பிளாஸ்டிக் தடை என்பது வெளிநாட்டு நிறுவனங்களின் ஊழல்' என்றார்.

வியாபாரம் பாதிப்பு

மளிகை கடைக்காரர் வேலவன் கூறும்போது, 'அரசின் தடை உத்தரவு அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. கடைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் 'கேரி பேக்'கில் போட்டுக்கொடுங்கள் என்றே சொல்கிறார்கள். அப்படி இல்லையென்றால், பொருட்களை வாங்காமல் திரும்பி சென்றுவிடுகிறார்கள். இதனால் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது. நான் இந்த தொழிலில் 35 ஆண்டுகளாக இருக்கிறேன். எனக்கு தெரிந்து 15 ஆண்டுகளாகத்தான் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. மடியில் கட்டிக்கொண்டு பொருட்களை வாங்கிச்சென்ற காலமும் உண்டு. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. பிளாஸ்டிக் பொருட்களை கண்டிப்பாக ஒழிக்கத்தான் வேண்டும். ஹெல்மெட் போடாமல் சென்றால் அபராதம் விதிப்பதுபோல், கையில் பிளாஸ்டிக் கவரோடு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை இழுத்து மூடவேண்டும். கட்டுப்பாட்டை கடுமையாக்கினால், இந்த தடை உத்தரவு கண்டிப்பாக வெற்றி பெறும்' என்றார்.

மிகவும் சிரமமாக உள்ளது

விழுப்புரத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர் அமரகவி:-

பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து பல மாதங்கள் ஆகியும் தினந்தோறும் மக்கும் குப்பைகளை விட மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் குப்பைகள்தான் அதிகம் சேருகிறது. நாங்கள் தினந்தோறும் ஒவ்வொரு வீடுகளிலும் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து தரும்படி கேட்டு வருகிறோம். இருப்பினும் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. ஒரு சில பேர் தான் அதை சரியாக பின்பற்றி தரம் பிரித்துக்கொடுக்கின்றனர். 10 வீடுகளில் குப்பைகளை வாங்கும் போது 2 வீடுகளில்தான் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து தருகின்றனர். பெரும்பாலான வீடுகளில் அவ்வாறு தருவதில்லை. மொத்த குப்பைகளையும் ஒருசேர தருவதால் அதை நாங்கள் பெற்றுக்கொண்டு ஒரு இடத்திற்கு சென்று தரம் பிரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. குப்பைகளை சேகரித்து அதனை தரம் பிரித்து கொடுப்பது என்பது எளிதல்ல, மிகவும் கஷ்டமான காரியம். மிகுந்த துர்நாற்றத்திற்கு மத்தியிலும், நோய் தொற்று அச்சத்திலும் நாங்கள் இந்த பணியை நாள்தோறும் முறையாக செய்கின்றோம். ஏனெனில் விழுப்புரம் நகரம் தூய்மையான நகரமாக இருக்க வேண்டும் என்பது எங்களது ஒரே நோக்கம். எனவே எங்களுடைய கஷ்டத்தையும், உணர்வையும் பொதுமக்கள் புரிந்துகொண்டு இனிவரும் காலங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்துக்கொடுத்தால் எங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

ரூ.3¼ லட்சம் பறிமுதல்

விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா கூறுகையில், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் 32,656 வீடுகளும், 4,880 வணிக நிறுவனங்களும் உள்ளன. 1,55,278 பேர் வசிக்கின்றனர். நகரில் தினந்தோறும் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என 63 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகிறது. இவற்றில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்குவதற்காக நகரில் 9 இடங்களில் நுண்ணுர மையங்கள் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் உள்ள கிடங்கில் மக்கும் குப்பைகளை சேகரித்து உரமாக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை தரம் பிரித்து அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுவரை 575.250 மெட்ரிக் டன் உரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 279.500 மெட்ரிக் டன் உரம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 112.500 மெட்ரிக் டன் உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 183.250 மெட்ரிக் டன் உரம் இருப்பில் உள்ளது. இதுவரை ரூ.67,670-க்கு உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் மறுசுழற்சி செய்யக்கூடிய உலர்கழிவுகள் 924.888 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.71,042 அளவிற்கு விற்பனையாகியுள்ளது. மக்காத உலர்கழிவு 3,276.080 மெட்ரிக் டன் சேகரிக்கப்பட்டுள்ளதில் 2,882.900 மெட்ரிக் டன், சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமம் 393.18 மெட்ரிக் டன் உலர்கழிவுகள் இருப்பில் உள்ளது. அதுபோல் 1,590 கிலோ அளவுக்கு மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டதில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு 1,171 கிலோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 419 கிலோ தற்போது இருப்பில் உள்ளது. நகர மக்களுக்கு அவ்வப்போது பிளாஸ்டிக் தடுப்பு குறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதுவரை பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கையின் மூலமாக ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 500 தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.


Next Story