அனைத்து நலத்திட்டங்கள், மானியங்கள் பெற கட்டாயம் என அறிவிப்பு: ஆதார் எண் இணைப்பு அவசியமா?அலைக்கழிப்பா ?- பொதுமக்கள் கருத்து


அனைத்து நலத்திட்டங்கள், மானியங்கள் பெற கட்டாயம் என அறிவிப்பு:  ஆதார் எண் இணைப்பு அவசியமா?அலைக்கழிப்பா ?- பொதுமக்கள் கருத்து
x

அனைத்து நலத்திட்டங்கள், மானியங்கள் பெற ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைப்பு அவசியமா?அலைக்கழிப்பா ? என்பது பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

திருநெல்வேலி

ஒருவர் பிறப்பு முதல் இறப்பு வரை, படிப்பு முதல் வேலை வரை, எங்கும், எதற்கும், எதிலும் ஆதார்? என்ற நிலை இன்றைக்கு உருவாகிக் கொண்டு வருகிறது.

ஆதார் அறிமுகம்

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற படிப்பினையை மத்திய அரசுக்கு உணர்த்தியது.

அப்போதுதான் நாட்டு மக்கள் அனைவருக்கும் கை விரல் ரேகை, கண் கருவிழி ஆகிய உடல்கூறு பதிவுகளுடன் தனி அடையாள எண்ணை வழங்க வேண்டும் என்ற யோசனை அரசாங்கத்துக்கு உதித்தது.

அதற்காக இந்திய தனிநபர் அடையாள ஆணையம் என்ற அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு 12 இலக்க எண்ணுடன் ஆதார் அட்டை வழங்கும் பணி கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கியது.

140 கோடிக்கு மேலான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் இதுவரையில் 131 கோடி பேருக்கு ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டுவிட்டது.

எதிர்ப்பு கிளம்பியது

தனி நபர் அடையாள எண்ணாக ஆதார் அறிமுகம் ஆனாலும் நாளடைவில் மத்திய அரசின் மானியங்கள், சலுகைகளைப் பெறுவதற்கும் அது அவசியம் என்று ஆணைகள் வந்தன.

ஆரம்பத்தில் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. முக்கிய விவாத பொருளாகவும் மாறியது. நீதிமன்றங்கள் வரை வழக்குகளும் சென்றன. இறுதியில் ஆதாரே வென்றது.

அதையடுத்து வருமான வரி செலுத்துவதற்கான பான் எண் (நிரந்தர கணக்கு எண்), வங்கி கணக்கு எண், ரேஷன் அட்டை, வருங்கால வைப்பு நிதி எண் போன்ற அனைத்திலும் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டது.

ஆயுதமானது

வங்கிகள் மூலம் சமையல் கியாஸ் மானியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் ஆனவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டன. இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.3 ஆயிரத்து 445 கோடி மானியத்தொகை மிச்சம் ஆனது.

ரெயிலில் 'டிக்கெட்' முன்பதிவு செய்ய தனி நபருக்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கிலும் ஆதார் இணைப்பு கட்டாயம் ஆனவுடன் போலி கணக்குகள் ஒழிக்கப்பட்டன. இதுபோன்று மத்திய அரசின் மானியங்கள், திட்டங்களில் முறைகேடுகளை ஒழித்துக்கட்டும் ஆயுதமாக ஆதார் மாறியது.

தமிழ்நாட்டில் கட்டாயம்

தமிழகத்தைப் பொறுத்த அளவில் முதலில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது. பின்னர், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்மூலம் 1 கோடி ஆதார் எண்கள் இதுவரை இணைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து இணைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள், சலுகைகள், மானியங்கள் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதில், திட்ட பயனாளிகளின் ஆதார் அங்கீகாரத்தை பெறுவதற்கான கை விரல் ரேகை பதிவு சரியாக செயல்படாவிட்டால் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முகப்பதிவு போன்ற அடையாள பதிவை மேற்கொள்ளலாம் அல்லது ஆதார் ஓ.டி.பி.முறையிலும் முயற்சி மேற்கொள்ளலாம்' என்ற அறிவிப்பும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு வருகிற ஜனவரி 14-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.

இதுபோன்ற ஆதார் இணைப்பு கட்டாய முறை மக்களுக்கு அவசியமா? அல்லது அலைக்கழிப்பா? என்பது பற்றிய மக்கள் பார்வை வருமாறு:-

வரவேற்பு

வீரவநல்லூரைச் சேர்ந்த துரைராஜ்:-

மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின்கட்டணம் பெறப்படும் என்று அறிவித்த உடனே ஆதாரை இணைத்து விட்டோம். இதேபோல் அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் என்று எதை பெற வேண்டுமானாலும் ஆதார் எண் கட்டாயம் என்று அரசு அறிவித்து உள்ளது. வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ் என்று எதை எடுக்க வேண்டுமானாலும் ஆதார் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியவில்லை. மனிதன் இறந்தால்கூட ஆதாரம் இருந்தால் தான் இறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆதார் எண் இணைப்பதை மனிதனின் உயிராக அரசு நினைக்கிறது. இதனால் அதை ஏற்றுக்கொள்கிறோம்.

நெல்லையை சேர்ந்த திருமலை:-

அரசின் எந்த நலத்திட்டங்களை பெற வேண்டுமானாலும் ஆதார் எண் கட்டாயம் என்று அரசு அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. ஆதார் இல்லாமல் எந்த பணிகளும் நடைபெறுவது இல்லை. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு கூட அவர்களது ஆதார் அட்டையும், பெற்றோரின் ஆதார் அட்டையையும் கொடுக்க வேண்டி உள்ளது. இதன்மூலம் போலி பயனாளிகள் தவிர்க்கப்படுவார்கள்.

அலைக்கழிக்கும் செயல்

தச்சநல்லூரை சேர்ந்த மாடத்தி:-

அரசின் நலத்திட்டங்கள் பெற இனி ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது ஏழைகளை அலைக்கழிக்கும் செயல் ஆகும். மின்இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை தொடர்ந்து தற்போது அனைத்து நலத்திட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டே ஆதார் கட்டாயம் என்று சொல்லக்கூடாது என தெரிவித்து உள்ளது. ஜனநாயக நாட்டில் மக்களே எஜமானர்கள் என சொல்லப்படுகிறது. மக்கள் வாக்களித்துதான் மத்தியிலும், மாநிலத்திலும் அரசு அமைகிறது. அதை உறுதிப்படுத்த ஒவ்வொரு சராசரி மனிதனும் போடும் ஓட்டு உண்மையாக இருக்க வேண்டும். அதற்கு வாக்காளர் பட்டியலுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுளாக எழுப்பப்படுகிறது. ஆதார் கார்டு இணைப்பை எளிமையாக்க வேண்டுமே தவிர மாறாக மக்களை அலைக்கழிக்கக் கூடாது.

பரப்பாடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பகவத்சிங் டேனியல் மதிவண்ணன்:-

ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதன் மூலம் அரசு திட்டங்களில் பயன்பெறும் போலியான நபர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். மேலும் அரசு பணம் விரயம் ஆவது தடுக்கப்படும். அரசு திட்டங்களில் பயன்பெறுவோர் இரண்டு இடங்களில் பயன்பெறுவது தடுக்கப்படும்.

ஏமாற்ற முடியாது

தென்காசியை சேர்ந்த கந்தசாமி:-

ஆதார் கட்டாயம் என்பதன் மூலம் அரசு நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளின் உண்மைத்தன்மை தெளிவாக இருக்கும். போலியான பெயர்களை கொடுத்து ஏமாற்ற முடியாது. குறிப்பாக ஒரே நபர் வெவ்வேறு முகவரியை கூறி அரசின் நலத்திட்டங்களை பெற முயற்சிக்கலாம். அது தடுக்கப்படும். எனவே, இது மிகவும் வரவேற்கத்தக்கது.

குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பை சேர்ந்த முன்னாள் மின்வாரிய அலுவலர் எஸ்.முகிலன்:-

பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகப்பட்சமாக குறைப்பது அரசின் முழுமையான நோக்கமாக உள்ளது. ஏழை, எளிய, விவசாய, கூலி தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் நலத்திட்டங்கள் 10 சதவீதமே உள்ள பணக்காரர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆதார் கட்டாயம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அரசு பணியில் இருந்தவர்கள் பணியில் இருந்தபோது உண்மையை கூறி சர்க்கரை குடும்ப அட்டையை பெற்றனர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இன்னும் அரிசி குடும்ப அட்டையை பெற முடியாமல் தவிக்கிறார்கள். கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடி செய்யும்போது பெரும் பணக்காரர்களுக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது போல் தற்போது இதன்மூலமும் அவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கும். எனவே, உண்மையிலேயே அரசின் திட்டங்கள் ஏழை மக்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது. மாறாக விருப்பத்துக்கு ஏற்ப இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அரசின் திட்டங்களுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு சிரமம் இன்றி அதுகிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், செல்போன் மாற்றம் போன்றவைகளுக்காக மக்கள் அலைகழிக்கப்படும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

அதேப் போன்று வாக்காளர் அடையாள அட்டை எண், நலத்திட்டங்களுக்கு என்று தனித்தனியாக ஆதார் இணைப்பை செயல்படுத்தாமல் அதனை ஒரே குடையின் கீழ் செயல்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.


Next Story