கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா?மருத்துவர்கள், பொதுமக்கள் கருத்து
கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா? என்பது குறித்து மருத்துவர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா? என்பது குறித்து மருத்துவர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கியது.
இது ஒரு வகையான சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் என்பதால் தும்மும் போதும், இருமும் போதும் வெளியேற்றப்படும் சிறிய நீர்த்துளிகள் வழியாக அடுத்தவர்களுக்கு எளிதாக பரவி லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்தது.
பொதுமக்கள் அச்சம்
இந்தத் தொற்றால் இறந்தவர்களின் உடலை குடும்பத்தினர்கூட அருகில் சென்று பார்க்க முடியாத அளவுக்கு பரிதாபநிலை ஏற்பட்டது. உலகில் உயிர்களை பறித்ததுடன், மனிதர்களை மட்டும் அல்லாது அரசாங்கங்களையும் கடந்த சில ஆண்டுகளில் தலைகீழாகப் புரட்டி போட்டது கொரோனா.
தடுப்பூசிகள் மூலம் அதன் பரவலை தடுத்துவிட்டாலும் தற்போது 4-வது அலை, 5-வது அலை வரப்போகிறது என்றெல்லாம் ஆங்காங்கே புரளிகள் புரண்டு வருவதால், பொதுமக்கள் கொஞ்சம் அச்சப்படத்தான் செய்கின்றனர்.
பயணங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போதுகூட கண்டிப்பு இல்லாவிட்டாலும் தற்காப்புக்காக ஒரு சிலர் முக கவசங்கள் அணிந்து செல்வதையும் காணமுடிகிறது. உண்மையில் கொரோனா ஒழிந்து விட்டதா? தைரியமாக நடமாடலாமா? பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்லலாமா? என்று பலதரப்பட்ட கேள்விகளை பொதுமக்கள் கேட்கின்றனர். அதற்கு மருத்துவர்களும் மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
பாதுகாப்பு
இதுகுறித்து டாக்டர் செல்வ விநாயகம் கூறும்போது, 'கொரோனா நோய் தடுப்புக்காக 96 சதவீதம் முதல் தவணையும், 92 சதவீதம் 2-ம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மொத்தம் 12 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இதன் மூலம் பொதுமக்களுக்கும் 90 சதவீதம் எதிர்ப்பு சக்தி உள்ளது. எதிர்ப்பு சக்தியை பொறுத்த வரையில் இயற்கையில் உள்ள எதிர்ப்பு சக்தி மற்றும் கொரோனா நோய் வந்து சென்ற பிறகு ஏற்படும் எதிர்ப்பு சக்தி என்று இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது. இந்த எதிர்ப்பு சக்தி இருப்பதால் வரும் காலங்களில் கொரோனா வந்தாலும் அதனை தடுக்க முடியும். கடந்த 3 அல்லது 4 மாதங்களில் பார்க்கும் போது முக கவசம் பெரிதாக எவரும் போடாத நிலையிலும் நோய் பரவல் குறைவாக இருக்கிறது. வைரஸ் உருமாறுகிற போது வீரியமாக இருக்கிறதா? என்றும் சோதனை செய்யப்பட்டது. ஏற்கனவே இருப்பது போன்றுதான் இருக்கிறதே தவிர புதிதாக வீரியமாக வரவில்லை என்று தெரியவந்துள்ளது. எனவே நோய்க்கான அறிகுறி இருந்தால் பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதித்து கொள்ள வேண்டும். அரசு சார்பிலும் வைரஸ் புதுவிதமான உருமாறுகிறதா? என்பதையும் கண்காணித்து வருகிறோம். ஆனால் அவ்வாறு இல்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது முக கவசம் அணிந்து கொண்டு சென்று தற்காப்பாக இருப்பது நல்லது' என்றார்.
இணை நோய்கள்
கொரோனா தீவிரமாக பரவி வந்த போது, அதன் சிகிச்சைக்காக ஒருங்கிணைந்து பணியாற்றிய கதிர்இயக்கத் துறை நிபுணர் டாக்டர் வி.ஆனந்தகுமார் கூறும் போது, 'கொரோனா வைரஸ் பெரும் கொள்ளை நோயாக மாறி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்களின் வாழ்வியல் பாதிப்பு, தேக்க நிலைகளை உண்டாக்கியது. ஆனால் தற்போது 3-ம் நிலையில் பெரிய அளவில் கொரோனாவால் பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தாலும் சாதாரணமாக வரும் சளி, காய்ச்சல் போன்று கொரோனா உருமாறி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இப்போதும் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை மற்றும் இறப்புகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சீனாவில் கொரோனா இருக்கக் கூடாது என்ற அந்த நாட்டு அரசின் திட்டத்திற்கு ஏற்ப பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டு வருகின்றன. நம் நாட்டை பொறுத்த வரையில் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளை சேர்ப்பது மற்றும் இறப்பு போன்றவை குறைவாக இருக்கிறது. பொதுவாக தொற்று வந்து போனதற்குப் பிறகு இயற்கையில் ஏற்படும் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பு ஊசி போட்டதற்கு பிறகு ஏற்படும் எதிர்ப்பு சக்தி இந்த இரண்டும் இருந்தால் நல்லது. நம் நாட்டில் பொதுமக்களிடம் எதிர்ப்பு சக்தி உள்ளது. வரும் காலங்களில் எதிர்ப்பு சக்தி குறையும் போது பல இடங்களில் பூஸ்டர் என்ற தடுப்பு ஊசி போடப்படலாம். ஆனால் 3-ம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு வராததால் பூஸ்டர் போடுவதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. இருந்தாலும் நாமும் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சோதனைகளுக்கு செல்லும் போதும் முக கவசத்தை அணிந்து செல்வது நல்லது. ஆனால் பொதுமக்களுக்கு இதுகுறித்து பயம் தேவையில்லை. முன்பரிசோதனை, தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறையில் நாம் பலம் வாய்ந்து இருப்பதால் பொதுமக்களுக்கு வாழ்வியல் பாதிப்பு, கல்வி, வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. காற்றில் பல வித தொற்றுகள் இருப்பதால் புதிய வாழ்வியல் முறையாக முக கவசம் எப்போதும் அணிவது நல்லது. அதேபோல் சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சுய தற்காப்பு முறைகளை கடைப்பிடிப்பது நன்மையைத் தரும். அதேநேரம் எதிர்ப்பு சக்தியை முறையாக பராமரிப்பது, இணை நோய்களை கட்டுக்குள் வைத்திருப்பதிலும் கவனம் செலுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும்' என்றார்.
அறிகுறிகள்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் திருமால்பாபு கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்று முற்றிலுமாக போய்விட்டது என சொல்லிவிட முடியாது. கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் உடலில் அவ்வப்போது காய்ச்சல், உடல் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு மறைகிறது. முதியவர்கள் சிலர் உடல்நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறும் போது, கொரோனா தொற்று அறிகுறிகள் தென்படுகிறது. தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களிலும் கொரோனா தொற்று முழுவதுமாக குணமடையவில்லை என்ற செய்தியும் வெளிவருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க முன் ஏற்பாடுகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் கொரோனா பாதிப்பு குணமடைந்துவிட்டது என கருதி அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. முக கவசம் அணிவது, கை, கால்களை சோப்பு மற்றும் சானிடைசர் போட்டு கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எப்போதும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வைரஸ் காய்ச்சல்
இந்திய மருத்துவ சங்க ஆரணி கிளை தலைவர் டாக்டர் டி. பால்ராஜ் கூறுகையில், கொரோனாவுக்கு பொதுமக்கள் கடைபிடித்த கட்டுப்பாடுகள், மருத்துவ உள்கட்டமைப்பு, முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், அரசு அளித்த தடுப்பூசிகளை முறையாக போட்டுக் கொண்டதன் விளைவாக இப்போது நாம் மீண்டு வந்திருக்கிறோம். கொரோனாவால் இன்னும் ஆங்காங்கே சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆரணியை சுற்றியுள்ள கிராமங்களிலும் ஒருவிதமான வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து இருந்து வருகிறது, இருமல், தொண்டை வலி, கை- கால் வலி, அசதி மற்றும் காய்ச்சலால் பாதித்தவர்கள் தினமும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள், குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அதனால் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், டெங்கு காய்ச்சல் ஆங்காங்கே தற்போது இருந்து வருகிறது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மருந்துக்கடைகளில் தாமே சுயமாக மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது. 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனை செய்வது அவசியம் என்றார்.
முக கவசம் அணிய வேண்டும்
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த மாணிக்கம் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தற்போதும் காணப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்பை போன்று அல்லாமல் குறைவான அளவில் தொற்று உள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனாவினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் இல்லை. கொரோனா பாதிப்பு இல்லை என்று பெரும்பாலான பொதுமக்கள் முக கவசம் அணிவதில்லை. வெகுசிலரே முக கவசம் அணிந்திருப்பதை காணமுடியும். கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவி, சமூக இடைவெளியை பின்பற்றி வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து சென்றார்கள். அதனை எப்போதும் பின்பற்றினால் உடல்நலத்திற்கு நல்லது. ஏனெனில் கொரோனா தொற்று முழுமையாக ஒழிந்து விடவில்லை. தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றார்.
ஊரடங்கு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஜெமினி ராமச்சந்திரன் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். கூலி தொழிலாளர்கள் வேலையின்றி அவதிப்பட்டனர். அன்றாட செலவுக்கு பணம் இல்லாமல் கடன் வாங்கி குடும்பம் நடத்தக்கூடிய சூழ்நிலை உருவானது. தற்போது கொரோனா பரவல் குறைந்து சகஜ நிலைக்கு வந்து விட்டதாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் ஆங்காங்கே கொரோனா பரவல் உள்ளது. பொதுமக்கள் தாங்கள் வாங்கிய கடனை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து வருகின்றனர். எனவே கொரோனாவை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
கட்டுக்குள் உள்ளது
காட்பாடியை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.எஸ்.ரவி கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். அதனால் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, அடிக்கடி கைகளை சுத்தம் செய்தனர். தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என்பது உண்மை. அதனால் மக்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். கடைகள் மற்றும் பொது இடங்களுக்கு முக கவசம் அணியாமல் செல்கின்றனர். இருந்தாலும் தற்போது வரை கொரோனா நீடிக்கிறது. எனவே பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடும் திருவிழாக்கள், திருமணங்கள், நிகழ்ச்சிகளின் போது பொதுமக்கள் முக கவசம் அணிந்து செல்வது நல்லது என்றார்.
சேத்துப்பட்டு பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் கே.ரவி கூறுகையில், தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பஸ் நிலையத்துக்கு வருகின்றனர். எனவே, நான் எப்போதும் முகக்கவசம் அணிந்து வியாபாரம் செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் இல்லை. ஆனாலும் பொதுமக்கள் வெந்நீரை குடிக்க வேண்டும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்றார்.
விழிப்புணர்வு
அரக்கோணத்தை சேர்ந்த டாக்டர் அசோக் குமார் கூறுகையில், கொரோனா பரவல் ஓய்ந்து விடவில்லை. நோய் பரவல் குறைந்து காணப்படுகிறது. எதுவாக இருந்தாலும் நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நம் உடல்நிலை மீது கவனம் கொள்ள வேண்டும். முறையாக உடற்பயிற்சி செய்வது, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களை ஒதுக்கி வைப்பது நல்லது என்றார்.