நீட் தேர்வு மசோதாவுக்கு எதிராக கவர்னர் ஆணவமாக பேசுவது நியாயமா? - சபாநாயகர் அப்பாவு கேள்வி
நீட் தேர்வு மசோதாவுக்கு எதிராக கவர்னர் ஆணவமாக பேசுவது நியாயமா? என்று சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்படலாம். அந்த நம்பிக்கையில்தான் ஆட்சி மாற்றமே நீட் தேர்வுக்கு விடிவு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். நாடு முழுவதுமே ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அது நிறைவேறும்.
பெற்றோர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும்போது, அதன் நன்மை, தீமைகளை கவர்னர் ஆய்வு செய்து விளக்கி கூறலாம். மாறாக ஆணவத்தில் நான் கையெழுத்திட மாட்டேன் என்று கூறுவது தேவையில்லாதது. தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?, தன்னால் என்ன செய்ய முடியும்? என்பதைக்கூட கவர்னர் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் 4 பேரை தவிர மற்ற அனைவருமே ஆதரித்து பேசி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவரும் நீட் தேர்வு தேவையில்லை என்று ஆதரித்து பேசினார். தற்போது ஜனாதிபதியின் பரிசீலனையில் உள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கவர்னர் கையெழுத்திட மாட்டேன் என்று ஆணவமாக கூறுவது நியாயமா? என்று எனக்கு தெரியவில்லை. மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.