அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்துவது போல் ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமா? மக்கள் கருத்து
அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்துவதுபோல ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமானதா? என்பது பற்றி மக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
சேலம்,
காகித பணம்
பணமா, குணமா என்றால் இன்றைய நாகரிக உலகில் பணத்துக்கே முதலிடம் பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது. பணத்தை வைத்து தான் ஒருவருடைய அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் பணம்... பணம்... பணம்... இந்த வார்த்தை ஒன்றுதான் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட பணத்தின் மதிப்பை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1882-ம் ஆண்டு முதல் முறையாக காகித பணம் புழக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. ரூ.2, ரூ.5, ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரூபாய் நோட்டுகள் முதலில் புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் நோட்டுகள் நாளடைவில் கைவிடப்பட்டன.
அதன்பின்னர், 1969-ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 100-வது பிறந்தநாளையொட்டி, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. 1987-ம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டையும், 2000-ம் ஆண்டில் ரூ.1,000 நோட்டையும் புழக்கத்துக்கு விட்டனர். 2016-ம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் வந்தது. இப்போது 1,000 ரூபாய் நோட்டு மட்டும் புழக்கத்தில் இல்லை.
ரூபாய் நோட்டுகள்
இப்படியாக ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த நிலையில், அதில் பொறிக்கப்பட்ட படங்களின் வரலாறும் அனைவராலும் பேசப்படக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு பின், வெளியான ரூபாய் நோட்டில் நான்கு முக சிங்கங்கள் உருவம் பொறிக்கப்பட்டு வெளியானது. அதைத்தொடர்ந்து புலி, மான், தஞ்சை பெரிய கோவில், மும்பை கேட்வே ஆப் இந்தியா, நாடாளுமன்றம், பசுமைப்புரட்சி-உழவுத்தொழில்-விவசாய வேலைகள்-அணைக்கட்டுகள், இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா, ஹிராகுட் அணை, டிராக்டர் படங்கள் ரூபாய் நோட்டுகளில் உருவங்களாக பொறிக்கப்பட்டு வெளிவந்தன.
இன்று நாம் பயன்படுத்தக்கூடிய ரூபாய் நோட்டுகளில் முகப்பு பக்கத்தில் காந்தியின் உருவப்படம் இருக்கிறது. இதன் வரலாறை பார்த்தோமானால், 1969-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகளில் தான் காந்தியின் உருவப்படம் முதன் முதலாக பொறிக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் மற்ற ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, 1996-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் அனைத்து ரூபாய் நோட்டுகளின் முகப்பில் பெரிய அளவிலான காந்தியின் உருவப்படமே பொறிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், நோட்டுகளின் மறுபக்கத்தில் இந்தியாவின் நினைவு சின்னங்கள், பாரம்பரிய இடங்களின் படங்களும் அப்போது முதல் இடம்பெற்று வருகின்றன.
லட்சுமி, விநாயகர் உருவப்படம்
இந்த சூழ்நிலையில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படத்தையும், மறுபக்கம் லட்சுமி, விநாயகர் உருவங்களையும் அச்சிட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.இவருடைய இந்த கோரிக்கை, அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
இவருக்கு போட்டியாக பிற அரசியல் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துவருகின்றன. அதில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, ரூபாய் நோட்டில் அம்பேத்கர் படத்தை அச்சிடலாமே? என்று கூறியிருக்கிறார். மராட்டிய மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. இந்திய ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி உருவப்படத்தை வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதமும் அனுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முயற்சி, சரியானதா? தற்போதைக்கு அவசியமானதா? இதனால் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களின் கருத்துகள் வருமாறு:-
டிஜிட்டல் கரன்சி
தனியார் கல்லூரி பொருளாதாரத்துறை பேராசிரியர் அரிதர்(கருப்பூர்):- இந்திய நாட்டை பொறுத்தவரை பல்வேறு மத நம்பிக்கைகளை உள்ளடக்கிய மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களும் ஏற்கும் விதமாகவும், மத நல்லிணக்கத்தை பேணும் வகையிலும், யாருடைய மனமும் புண்படாத வகையிலும் ரூபாய் நோட்டுகளில் கடவுள்களின் உருவப்படம் அச்சடிக்கலாம். இருந்தாலும் ரூபாய் நோட்டுகளில் சாமி உருவப்படம் அச்சடித்தால் தான் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும் என்று கூற முடியாது. பொருளாதார வளர்ச்சி என்பது பொருட்கள், சேவைகள் உற்பத்தி மற்றும் நுகர்வில் ஏற்படும் வளர்ச்சி ஆகியவற்றை சார்ந்தது ஆகும். மேலும் தற்போது டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்த உள்ள நிலையில் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.
ஆம் ஆத்மி கட்சி மகளிர் அணி நிர்வாகி ரேவதி (சேலம் குகை):- ஆம் ஆத்மி கட்சி எந்த மதத்தையும் சாராத ஒரு கட்சி. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கையால் கட்சி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது தொடர்பாக அவர் கூறியுள்ள கருத்து பொதுவானது ஆகும். கட்சி கூறியதாக எடுத்து கொள்ள கூடாது. ரூபாய் நோட்டில் வேறு யாருடைய படத்தையோ அச்சடிக்க பா.ஜனதா வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. அதைதடுக்கும் நோக்கத்தில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் அப்படி தெரிவித்திருப்பாரே?, தவிர வேறு எந்த உள்நோக்கமும் இருக்காது.
உள்நோக்கத்துக்கத்துடன் சொல்லியிருக்கலாம்
பொருளாதார விமர்சகர் சோம.வள்ளியப்பன்:-
பொருளாதார வளர்ச்சி மற்றும் பணப்பெருக்கத்துக்கும், லட்சுமி, விநாயகர் உருவங்களை அச்சிட வேண்டும் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நம்பிக்கை ரீதியில் அவர் சொல்லியிருக்கலாம். அரவிந்த கெஜ்ரிவால் நன்கு படித்தவர். அவர் வேறு ஒரு உள்நோக்கத்துக்காக தான் இதை சொல்லியிருக்க வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். உலகத்தில் முன்னேறிய நாடுகள்கூட இப்படி முயற்சித்தது கிடையாது. மதிப்புமிக்க, வணங்கக்கூடிய இறைவனை இப்படி பயன்படுத்துவது சரியாக இருக்காது. மற்ற மதத்தினரும், இப்படி தங்கள் கடவுளை அச்சிட சொன்னால் என்ன செய்வார்கள்?. வாக்கு வங்கி அரசியலுக்காக இதை செய்வதாகவே நான் கருதுகிறேன். இதன்மூலம் வாக்குகள் கிடைக்கும் என்றாலும், அதுவும் நடக்குமா? என்பதும் கேள்விக்குறிதான்.
மக்களை குழப்ப வேண்டாம்
இல்லதரசி சுபா:- ரூபாய் நோட்டுகளில் கடவுள்களின் படங்கள் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அனைத்து மதங்களும் ஒன்று கூடி வாழும் இந்தியாவில் ஒரு மதத்தின் கடவுள்களை பெருமைப்படுத்துவது பிரிவினையைத்தான் உண்டாக்க வழிவகுக்கும். நாட்டில் வறுமையை போக்க நல்ல ஆலோசனைகளை வழங்கலாம். அதை விட்டுவிட்டு ரூபாய் நோட்டுகளில் உருவப்படம் அச்சடிப்பதா?, வேண்டாமா? என்று பேசி மக்களை குழப்ப வேண்டாம். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் காந்தியின் உருவப்படமே ரூபாய் நோட்டுகளில் இருந்தால் போதும்.
விவாதம் தேவையற்றது
சமூக ஆர்வலர் வக்கீல் செல்வம் (சேலம்):-
ரூபாய் நோட்டுகளில் தற்போது இருக்கிற மாதிரி எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காந்தியடிகளின் உருவப்படத்தை மட்டும் அச்சடிக்க வேண்டும். மதசார்பற்ற ஜனநாயக நாட்டில் ஒரு மதத்தை சேர்ந்த கடவுள்களின் புகைப்படத்தை அச்சடித்தால் பெரும்பாலானோருக்கு மன கஷ்டம் ஏற்படலாம். மேலும் பல்வேறு சாமிகளின் புகைப்படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடித்தால் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே ஒரு அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. எனவே ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது தொடர்பான விவாதம் தேவையற்றது.
இல்லத்தரசி மங்கலம் (சூரமங்கலம்):- மதசார்பற்ற நாட்டில் நாம் வாழ்ந்து வருகிறோம். தற்போதைய டிஜிட்டல் உலகில் எங்கு பார்த்தாலும் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்து வருகிறது. திருட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பெரும்பாலானோர் பணத்தை கையில் வைத்து கொண்டு செல்லும் பழக்கத்தை தவிர்த்து வருகின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில், 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூபாய் நோட்டுகளை மாற்றி அமைத்தால், பணப்பதுக்கல் இருக்காது. ரூபாய் நோட்டுகள் தேவைக்கு தகுந்தவாறு அச்சிட்டால் போதும். சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. அதை பற்றி யோசிக்கலாம். தேவையில்லாமல் ரூபாய் நோட்டுகளில் கடவுள்களின் உருவப்படங்கள் அச்சிடலாமா?, வேண்டாமா? என்று பேசப்பட்டு வருவது தேவையற்றது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
====