ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?பொதுமக்கள் கருத்து


ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

'எத்தனை நாளா சொல்கிறேன், கடைசி தேதி வரைக்கும் இருக்காதீங்கனு, ரீடிங் எடுத்த உடனேயேபோய் பணத்தை கட்டுங்க, கட்டுங்கன்னு சொன்னா கேட்டாத்தானே!'

'நம்ம வீட்டுக்கு கரண்ட் பில் கட்ட இன்றைக்குத்தான் கடைசி நாளு, சாயந்திரத்துக்கு உள்ள பணத்தை கட்டலைனா, பியூசை புடுங்கிட்டு போய்விடுவாங்க, பிறகு இருட்டுலதான் கிடக்கணும். புரியாத மனுஷனா இருக்கிறாரே!'

இப்படி பல இல்லங்களில் இல்லத்தரசிகள் கணவன்மார்களை கடிந்துகொள்வதைக் கேட்டு இருக்க முடியும். முன்பு எல்லாம் கரண்ட் பில் கட்டுவதாக இருந்தால் மின்சார வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்களில் போய்தான் பணம் கட்ட வேண்டும். ஆன்லைன் முறை வந்த பிறகு அதிக மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பில் வந்தால் ஆன்லைனில் செலுத்த வாரியம் அறிவுறுத்தியது. அதன்படி தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் அதைப்பின்பற்றி வந்தனர்.

இதில் படித்த சிலர் எவ்வளவு ரூபாய் கரண்ட் பில் வந்தாலும் கவுண்ட்டர்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி ஆன்லைனிலேயே பணத்தைக் கட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கரண்ட் பில் கட்டுபவர்கள் ஆன்லைனில்தான் கட்ட வேண்டும் என்று வாரியம் அறிவுறுத்தியது. இதனையும் பலர் பின்பற்றி வந்தனர்.

இந்தநிலையில் தற்போது ரூ.1,000 பில் வந்தாலே ஆன்லைனில்தான் கட்டவேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இதுபற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள், மின்சார வாரிய அதிகாரிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

'பேடிஎம்' வசதி தேவை

தமிழ்நாடு மின்சார வாரிய என்ஜினீயர் யூனியன் பொது பொருளாளர் கே.கல்யாணசுந்தரம் கூறும்போது, 'ஆன்லைன் மூலம் கரண்ட் பில் கட்டுவது என்பது ஒரு நல்ல திட்டம்தான். பொதுமக்கள் தேவை இல்லாமல் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை. சர்வர் பிரச்சினை காரணமாக காலதாமதம் ஏற்பட்டால் அதற்காக தேவையில்லாமல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டியதில்லை. ஊழியர்களுக்கும் பொதுமக்கள் கட்டிய பணத்தை வங்கியில் செலுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளும் தவிர்க்கப்படும். நகரப்பகுதிகளில் இதற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. கிராமப்பகுதிகளில் உள்ளவர்கள் ஆன்லைன் என்றால் தேவை இல்லாமல் ஒரு முகவரை சந்திக்க வேண்டும். அவர்களுக்கு கரண்ட் பில்லுடன் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சூழல் ஏற்படும். அதேபோல், தனியார் வங்கிகளில் கடைசி தேதியில் பணத்தை செலுத்தும் போது, அது வாரியத்தின் கணக்கிற்கு வருவதற்கு ஒரு நாள் ஆகிவிடுகிறது. வாரிய அலுவலகத்தில் பணம் கட்டியதற்கான சான்று இல்லாததால், தேவையில்லாமல் மின்துண்டிப்பு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.

கவுண்ட்டர்களில் ஏ.டி.எம். கார்டுகளை தேய்த்து பணம் பெறும் வசதி மட்டுமே இருக்கிறது. ஆனால் சாதாரண தள்ளுவண்டி இட்லி கடையில் இருப்பது போன்ற 'பேடிஎம்' போன்ற வசதிகள் இன்னும் வாரியத்திற்குள் வரவில்லை. கவுண்ட்டர்களில் ஊழியர்கள் தட்டுப்பாடால் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை, மாறாக சர்வர் பிரச்சினையால் காலதாமதம் ஏற்படும் போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே கவுண்ட்டர்களில் பேடிஎம் உள்ளிட்ட நவீன வசதிகளை கொண்டு வருவதுடன், சர்வர் மற்றும் இணையத்தள வசதிகளை வலுப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் பொதுமக்கள் தானாகவே ஆன்லைனை தேடிச்சென்று விடுவார்கள்' என்றார்.

பணம் வசூலிக்க மின்கணக்கீட்டாளர்

நுகர்வோர் மன்றத்தின் (சிட்டிசன் கன்ஸ்யூமர் அன்ட் சிவிக் ஆக்ஸன் குரூப்) முதுநிலை ஆய்வாளர் கே.விஷ்ணு மோகன் ராவ் கூறும் போது, 'கவுண்ட்டர்களில் பணத்தை கையாள்வதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் காசோலைகள் கையாள்வது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஆன்லைன் முறையில் கரண்ட் பில் கட்டும் முறை அறிவிக்கப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக வாரியத்திற்கு உடனடியாக பணம் கிடைக்க வேண்டும் என்றால் ஆன்லைன் என்பதுதான் சரியாக இருக்கும். ஆனால் இந்த முறை நகரப்பகுதிகளில் அமல்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் கிராமப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பாமரமக்கள் என பலதரப்பட்ட மின்சார நுகர்வோர்களால் ஆன்லைனில் பணம் செலுத்த வாய்ப்பு இல்லை. அதேபோல் மூத்த குடிமக்களாலும் ஆன்லைனில் பணம் செலுத்த முடியாது என்பதால் அவர்கள் பிறரை நாடிச் செல்ல வேண்டியிருக்கும். இவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் மின்சாரம் கணக்கிட வருபவர்களையே பணம் வசூலிக்கவும் அறிவுறுத்தலாம்' என்றார்.

ஆட்குறைப்பு நடவடிக்கை

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி:-

வசூல் மையங்களில் பணிபுரியும் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யவும், காலிப்பணியிடம் ஏற்படும்போது அவற்றை நிரப்பிடாமல் பதவிகளை ரத்து செய்திடவும் இந்த அறிவிப்பு உதவிடும். ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மின் நுகர்வோர்களுக்கு நம்பகத்தன்மையை அதிகரிக்கும் நிலையே உள்ளது.

ரூ.1000 மின் கட்டணம் என்பது மின் நுகர்வோர்களில் சுமார் 80 சதவீதம்பேர் ஆன்லைனில் செலுத்த வாய்ப்புள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபடும் பல பேர், மின்வாரிய வசூல் மையங்களில் நேரடியாகவே மின் கட்டணம் செலுத்தி அச்சிடப்பட்ட ரசீது பெறவே விரும்புகின்றனர். எனவே அரசின் அறிவிப்பு, மின் நுகர்வோர்களை முழுமையாக பாதிக்கும். மின்வாரிய வசூல் மையங்களில் பணிசெய்யும் பணியாளர்களை மறைமுகமாக ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு கொண்டு செல்லும் என்பதால் இந்த அறிவிப்பை மின்வாரியம் கைவிட வேண்டும், வாபஸ் பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

கூடுதல் செலவினம்

திண்டிவனம் பனையூரை சேர்ந்த ஜெயகிருஷ்ணன்:-

மின் கட்டணத்தை அரசு ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியானதுதான். இதற்கான இன்டர்நெட் சென்டருக்கு செல்வதால், அது கூடுதல் செலவினமாகிவிடுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களின் மின்கட்டணத்தை ஆன்லைனில் கட்டுவதற்கு வசதி வாய்ப்பை அரசு உருவாக்கித்தர வேண்டும். முன்பு இலவசமாக, மின் கட்டணத்தை கட்டியதுபோல் ஆன்லைனில் கட்டுவதற்கு அரசு வழிவகுக்க வேண்டும்.

மேல்மலையனூரை சேர்ந்த விஜயகுமார்:-

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த சொல்வது என்னைப்பொறுத்தவரையில் சரியானதாகவே கருதுகிறேன். ஏனெனில் இதனால் காலநேரம் மிச்சமாகும். மின் கட்டணம் செலுத்தும் இடத்துக்கு அனைவரும் செல்லும்போது கூட்டநெரிசல் ஏற்படும். இதை இனி தவிர்க்கலாம். அதோடு கட்டணம் செலுத்துவதற்கு பல மணிநேரம் கால்கடுக்க நின்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவதை நான் வரவேற்கிறேன்.

கிராமப்புற மக்களுக்கு பாதிப்பு

செஞ்சியை சேர்ந்த கோபிநாத்:-

ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் வந்தால் ஆன்லைனில் கட்ட வேண்டும் என்று சொல்வது மிகவும் சிரமமானது. நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு வேண்டுமென்றால் இது எளிதாக இருக்கலாம். கிராமப்புறங்களில் இது கடினமானது.

மின் கட்டணத்தை அருகே உள்ள மின்சார அலுவலகத்தில் செலுத்துவதே வசதியாக இருக்கும். ஏனெனில் 'பாமரமக்கள், படிக்க தெரியாதவர்கள், குறிப்பாக கணினி அறிவு குறைவாக இருப்பவர்கள், இணையதள வசதி இல்லாதவர்கள்தான் கிராமப்புறங்களில் அதிகம் உள்ளனர். இவர்களிடம் ஆன்லைனில் மின்கட்டணம் கட்டுங்கள் என்று கூறினால் அவர்களால் அதனை ஏற்க முடியாது. இதற்காக அவர்கள், நகரப்பகுதிக்கு சென்று ஆன்லைன் மூலம் கட்ட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே ஏற்கனவே இருக்கும் முறைப்படி கவுண்ட்டர்களில் சென்று பணத்தை செலுத்த கூடுதல் வசதி செய்துதர வேண்டும். ஆன்லைனில் கட்டுபவர்கள் கட்டிவிட்டு போகட்டும். ஆன்லைன் மூலம் கட்ட முடியாதவர்கள் கவுண்ட்டர்களில் பணம் வசூலிக்கும் முறையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

24 மணிநேரமும் பணம் கட்டலாம்

தியாகதுருகத்தை சேர்ந்த அருட்செல்வன்:- செல்போன், டி.வி., ஆகியவற்றிற்கு பணம் கட்டுவது முதல் மளிகை கடைகள், உணவகங்கள், வங்கிகளில் பணம் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்தும் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்கின்றனர். இவ்வாறு ஆன்லைன் பரிவர்த்தனையால் நேரம் மிச்சமாகிறது. நேரடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் நிலை இருக்காது. மேலும் விடுமுறை நாட்கள், வேலை நாட்கள் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்த முடியும். இதே போல் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியில் அலுவலகத்தில் மாலை வரை மட்டுமே கட்ட முடியும். ஆனால் ஆன்லைனில் இரவு 12 மணி வரை பணம் கட்டலாம். எனவே ஆன்லைனில் பணம் செலுத்தும் நடைமுறையை வரவேற்கிறேன்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர்:-

ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைனில் கட்டினால் வரிசையில் நின்று நேரத்தை வீணாக்காமல் இருந்த இடத்தில் இருந்து செலுத்த முடிகிறது. ஆனால் மின்சார கட்டணத்தை ஆன்லைனில் கட்டுவதால் கட்டண தொகைக்கு ஏற்ப கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதை அரசு சரி செய்தால் நன்றாக இருக்கும்.


Next Story