கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கேட்பது சரியா?
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது ஏற்புடையதா? என்பது குறித்து கல்வியாளர், ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
மாநிலப் பட்டியலில் கல்வி
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைக்கும் போது, கல்வியை மத்திய பட்டியலில், மாநில பட்டியலில் அல்லது பொது பட்டியலில் இவற்றில் எதில் சேர்ப்பது என்பது நீண்ட விவாதத்திற்கு பிறகே இறுதியில் கல்வி மாநில பட்டியலில் இருப்பதுதான் சரியானது என்று முடிவு செய்து, கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்த்தனர்.
இந்தியாவில் 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை அமலில் இருந்த அவசர காலகட்டத்தில் (எமர்ஜென்சி) காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவியல், விலங்குகள், பறவைகள் பாதுகாப்பு ஆகிய 5 முக்கிய துறைகள் அரசமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின் மூலம், மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. இது ஒத்திசைவுப் பட்டியல் என்று அழைக்கப்படுகிறது.
சர்தார் ஸ்வரண்சிங் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இதனால் இந்த துறைகளின் அதிகாரங்களில் மாநில சட்டப்பேரவைகளுக்கு இருந்த முழு அதிகார வரம்பு, பொதுப் பட்டியலுக்கு மாறியது.
மீண்டும் கொண்டு வரவேண்டும்
மாநில அரசுகளின் எந்தவித முன் அனுமதியும் இன்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல், அவசர காலத்தில் இந்த சட்டம் இயற்றப்பட்டது என்று அப்போது முதல் தற்போது வரை விமர்சனத்துக்குள்ளாகிய வண்ணமே இருக்கின்றன.
கல்வித் துறையை பொதுப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்ற குரல் இதற்கு முன்பு முதல்-அமைச்சர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி பல ஆண்டுகளாக வலுத்துக் கொண்டே இருந்தாலும், தற்போது வரை கல்வி பொதுப் பட்டியலிலேயே நீடித்து வருகிறது.கல்வி மாநிலப் பட்டியலில் இல்லாமல், பொதுப் பட்டியலில் இருப்பதால் தான், நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக் கொள்கை போன்றவை மத்திய அரசு மூலம் அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தி.மு.க., அ.தி.மு.க. உள்பட சில கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இந்த அம்சங்கள் முன்வைக்கப்பட்டன.
பிரதமரிடம் வலியுறுத்திய மு.க.ஸ்டாலின்
இதுதவிர, இதுதொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டிலும் இருக்கின்றன. நாடாளுமன்றத்திலும் இதுகுறித்த விவாதங்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், கடந்த 11.11.2022 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதொடர்பான கோரிக்கையையும் வலியுறுத்தினார்.அதில், 'அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த போது முதலில் கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. அவசர காலத்தின் போது அது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவே கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்க வேண்டும் என்று மத்திய அரசையும், குறிப்பாக பிரதமரையும் கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது பற்றி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-
சமூக, பொருளாதாரம்
மோகனா (விலங்கியல் பேராசிரியை, தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் மாநில தலைவர்) :- சமூகம், பொருளாதாரம் உள்பட அனைத்திலும் இருக்கும் தடைகளை உடைக்கும் ஒரே ஆயுதம் கல்வி. எனவே மக்களுக்கு உணவு அளிப்பதை விட நல்ல கல்வியை கொடுப்பதே சிறந்தது. அதனால் தான் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதற்கு மாநில அரசின் பட்டியலில் கல்வி இருக்க வேண்டும். மாநில பட்டியலில் இருந்தால் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவித்தொகையோடு கல்வியை கொடுக்க முடியும். மாநில அரசு உரிமையோடு முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். சமூக நீதி பாதுகாக்கப்படும். பொதுபட்டியலில் கல்வி இருந்தால் மத்திய அரசு கொண்டு வரும் நீட் போன்ற தேர்வுகளால் மாணவர்கள் உயர்கல்வியை இழக்க நேரிடும். மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்வி கொள்கை சமூகநீதியை பறிக்கும் வகையில் இருக்கிறது.
மாநிலங்களுக்கு உரிமை
பேட்ரிக் ரெய்மாண்ட் (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர்) :- 1976-க்கு முன்பு கல்வி மாநில பட்டியலில் இருந்தது. அப்போது கல்வி மீதான அனைத்து முடிவுகளையும் எடுக்க மாநிலங்களுக்கு உரிமை இருந்தது. பாடத் திட்டம், பாடத்தொகுப்பு, மாணவர் சேர்க்கை தொடர்பான முடிவுகளை மாநிலங்கள் எடுத்தன. ஒருங்கிணைத்தல், உயர் கல்வி தரத்தை பராமரித்தல் மட்டும் மத்திய அரசிடம் இருந்தது. நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்ட போது 42 வது சட்ட திருத்தத்தின் மூலம் கல்வி பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன்மூலம் கல்வி கொள்கையில் மத்திய அரசு தலையிட வழிவகுக்கிறது. அதுவே நீட், புதிய கல்வி கொள்கை போன்றவை ஆகும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர்கள் நீண்ட விவாதத்துக்கு பின்னரே கல்வியை மாநில பட்டியலில் சேர்த்தனர். இந்தியா பன்முக தன்மை கொண்ட ஒரு துணை கண்டம். ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி, கலாசாரம், பண்பாடு என அனைத்தும் வேறுபடுகிறது. மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலாசாரம், வரலாற்றை சார்ந்ததாக கல்வி இருக்க வேண்டும். எனவே கல்வியை மாநில அரசு தீர்மானிப்பதே முறையாகும். சி.பி.எஸ்.இ., மாநில கல்வி பாடத்திட்டம் என வெவ்வேறு பாடத்திட்டங்களில் கல்வி கற்கின்றனர். அதேநேரம் மத்திய பாடத்திட்டத்தின்படி அகில இந்திய தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெறுவது கடினம். இதனை தவிர்க்க மாநிலங்களின் அதிகாரத்தில் கல்வி இருக்க வேண்டும்.
மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்
முருகேசன் (பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர்) :- ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் வாழ்வு நிலை, பண்பாடு, கலாசாரம் வெவ்வேறாக இருக்கிறது. அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப கல்வியை கொடுக்க வேண்டும். பள்ளி, மருத்துவ கல்லூரிஆகியவற்றின் கட்டமைப்புக்கு மாநில அரசே செலவு செய்கிறது. இதனால் மாநிலத்துக்குரிய கல்வியை மத்திய அரசு திட்டமிடுவது சரியாக இருக்காது. இந்தியாவில் அதிக மருத்துவ கல்லூரிகளை கொண்டது தமிழ்நாடு. நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு 25 சதவீத இடம் கூட கிடைப்பதில்லை. ஆனால் வெளிமாநில மாணவர்கள் இங்குவந்து படிக்கின்றனர். மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு செலவு செய்து, நிர்வகித்தாலும் நமது மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. மேலும் அந்தந்த மாநிலத்தின் மொழிக்கு தான் கல்வியில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால் இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது. எனவே கல்வியை, மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதே நல்லது.
பொதுபட்டியலில் இருக்க வேண்டும்
சரவணன் (தமிழ் பேராசிரியர்) :- ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான கல்வி இருப்பதால் மாணவர்களின் கல்வி தரம் வேறுபடுகிறது. இதனால் நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள், ரெயில்வே தேர்வு உள்ளிட்ட மத்திய அரசு போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்களின் வெற்றி சதவீதம் குறைகிறது. மாணவர்கள் பிளஸ்-2 முடித்த பின்னரே உயர்கல்வி தேர்வு பற்றி சிந்திக்கும் நிலை உள்ளது. இந்த நிலை மாறி பள்ளி பருவத்தில் தொழிற்கல்வியை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். தாய்மொழியில் கல்வி அளிப்பதோடு, பிற மொழிகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அது மாணவ-மாணவிகளின் எதிர்காலத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதற்கு நாடு முழுவதும் மாணவ-மாணவிகளுக்கு ஒரே தரத்தில் கல்வி வழங்க வேண்டும். எனவே கல்வி பொது பட்டியலில் இருப்பதே நல்லது. தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.