மரக்காணம் அருகே மீனவர் வலையில் சிக்கியது, பல கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சமா?வனத்துறையினர் கைப்பற்றி ஆய்வு


மரக்காணம் அருகே மீனவர் வலையில் சிக்கியது, பல கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சமா?வனத்துறையினர் கைப்பற்றி ஆய்வு
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே மீனவர் வலையில் சிக்கியது பல கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சமா? என வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

விழுப்புரம்

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 38). இவர் மீனவர்களுடன் விசைப்படகில் கடலில் மீன்பிடித்துவிட்டு நேற்று காலை கரை திரும்பினார். அவரது வலையில் 25 கிலோ எடை கொண்ட ஒரு மர்ம பொருள் சிக்கி இருந்தது.

இதை பார்த்த வினோத், அது திமிங்கலத்தின் எச்சம் எனப்படும் 'அம்பர் கிரீஸ்' ஆக இருக்கும் என்று கருதினார். அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இதுபற்றி வனத்துறை, போலீசார், கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

திமிங்கலத்தின் எச்சமா?

அதன்பேரில் மீன்வளத்துறை மேற்பார்வையாளர் விஜய், வனவர் பாலசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் அப்துல்ரகுமான், கால்நடை உதவி மருத்துவர் சுமதி ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள், அந்த மர்ம பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அது திமிங்கலத்தின் எச்சமாக இருக்கக்கூடும் என்றும், இருப்பினும் முறையாக ஆய்வகத்தில் சோதனை செய்தால் மட்டுமே இதன் உண்மை தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே அந்த மர்ம பொருளை வனத்துறையினர் ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.

பல கோடி ரூபாய் மதிப்புடையது

இது திமிங்கலத்தின் எச்சமாக இருந்தால் இதன் மதிப்பு சர்வதேச அளவில் பல கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். திமிங்கலம் வாந்தி அல்லது அம்பர் கிரீஸ் என்பது திமிங்கலத்தின் செரிமான உறுப்பில் இருந்து வாய் வழியாக வெளியேற்றப்படும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். சீனாவில் பாலியல் திரவ மருந்து தயாரிக்க அம்பர் கிரீஸ் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளில் உயர் தரமான வாசனை திரவியங்களை தயாரிக்க அம்பர் கிரீஸ் மூல பொருளாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story