ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அவசியமா? தேனி மக்கள் கருத்து
அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்துவதுபோல் ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அவசியமா? என்பது குறித்து தேனி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பணமா, குணமா என்றால் இன்றைய நாகரிக உலகில் பணத்துக்கே முதலிடம் பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது. பணத்தை வைத்து தான் ஒருவருடைய அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் பணம்... பணம்... பணம்... இந்த வார்த்தை ஒன்றுதான் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட பணத்தின் மதிப்பை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
காகித பணம்
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1882-ம் ஆண்டு முதல் முறையாக காகித பணம் புழக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. ரூ.2, ரூ.5, ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரூபாய் நோட்டுகள் முதலில் புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் நோட்டுகள் நாளடைவில் கைவிடப்பட்டன.
அதன்பின்னர், 1969-ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 100-வது பிறந்தநாளையொட்டி, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. 1987-ம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டையும், 2000-ம் ஆண்டில் ரூ.1,000 நோட்டையும் புழக்கத்துக்கு விட்டனர். 2016-ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டும் வந்தது. இப்போது 1,000 ரூபாய் நோட்டு மட்டும் புழக்கத்தில் இல்லை.
ரூபாய் நோட்டுகள்
இப்படியாக ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த நிலையில், அதில் பொறிக்கப்பட்ட படங்களின் வரலாறும் அனைவராலும் பேசப்படக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு பின், வெளியான ரூபாய் நோட்டில் நான்கு முக சிங்கங்கள் உருவம் பொறிக்கப்பட்டு வெளியானது. அதனைத்தொடர்ந்து புலி, மான், தஞ்சை பெரிய கோவில், மும்பை கேட்வே ஆப் இந்தியா, நாடாளுமன்றம், பசுமைப்புரட்சி-உழவுத்தொழில்-விவசாய வேலைகள்-அணைக்கட்டுகள், இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா, ஹிராகுட் அணை, டிராக்டர் படங்கள் ரூபாய் நோட்டுகளில் உருவங்களாக பொறிக்கப்பட்டு வெளிவந்தன.
இன்று நாம் பயன்படுத்தக்கூடிய ரூபாய் நோட்டுகளில் முகப்பு பக்கத்தில் காந்தியின் உருவப்படம் இருக்கிறது. இதன் வரலாறை பார்த்தோமானால், 1969-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகளில்தான் காந்தியின் உருவப்படம் முதன் முதலாக பொறிக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் மற்ற ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, 1996-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் அனைத்து ரூபாய் நோட்டுகளின் முகப்பில் பெரிய அளவிலான காந்தியின் உருவப்படமே பொறிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், நோட்டுகளின் மறுபக்கத்தில் இந்தியாவின் நினைவு சின்னங்கள், பாரம்பரிய இடங்களின் படங்களும் அப்போது முதல் இடம்பெற்று வருகின்றன.
லட்சுமி, விநாயகர் உருவப்படம்
இந்த சூழ்நிலையில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படத்தையும், மறுபக்கம் லட்சுமி, விநாயகர் உருவப்படங்களையும் அச்சிட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இவருடைய இந்த கோரிக்கை, அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இவருக்கு போட்டியாக பிற அரசியல் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துவருகின்றன. அதில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, ரூபாய் நோட்டில் அம்பேத்கர் படத்தை அச்சிடலாமே? என்று கூறியிருக்கிறார். மராட்டிய மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. இந்திய ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி உருவப்படத்தை வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் இதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதமும் அனுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முயற்சி, சரியானதா? தற்போதைக்கு அவசியமானதா? இதனால் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது குறித்து தேனி பகுதி மக்களின் கருத்துகள் வருமாறு:-
அரசியலுக்கான கருத்து
ரமணன் (கல்லூரி பொருளாதாரத்துறை தலைவர், உத்தமபாளையம்):- உலக நாடுகளில் புழக்கத்தில் உள்ள பணத்தில் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் கூட விநாயகர் படம் போட்ட பணம் உள்ளது. இந்தியாவில் பல மதங்கள் உள்ளன. இங்கு ஒரு கடவுள் என்று இல்லை. பல கடவுள்களை மக்கள் வழிபாடு செய்கின்றனர். அத்தனை கடவுள்களுக்கும் ரூபாய் நோட்டில் இடம் கொடுக்க முடியாது. ரூபாய் நோட்டில் குறிப்பிட்ட மதத்தை போட வேண்டிய அவசியம் இல்லை. கெஜ்ரிவாலின் கருத்து முழுக்க முழுக்க அரசியலுக்கானது. அரசியலுக்காக சொல்லக்கூடிய வார்த்தைகள் தான் அவை. இது நடைமுறைக்கு வரவும் வாய்ப்பு இல்லை. ரூபாய் நோட்டில் படங்களை சேர்த்தாலோ, மாற்றினாலோ பொருளாதாரத்தில் எந்த மாற்றமும் வந்துவிடாது. கடவுள் படத்துக்கும் பொருளாதாரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத பலர் பணக்காரர்களாக இருப்பதை பார்க்கலாம். இங்கே பணம் என்பது கூட கடவுளாக தான் மதிக்கப்படுகிறது. பணத்தை தெரியாமல் மிதித்து விட்டால் தொட்டு கும்பிடும் பழக்கம் மக்களிடம் உள்ளது. பணத்தின் மதிப்பு என்பது நாட்டின் வளர்ச்சியை சார்ந்து உள்ளது. எனவே, இதுபோன்ற வார்த்தைகளுக்கு செலவு செய்யும் நேரத்தை, பொருளாதார வளர்ச்சிக்கு செலவு செய்யலாம்.
செல்வக்குமரன் (தேனி):- தற்போது இருக்கும் காந்தி படமே போதுமானது. அதில் வேறு படங்கள் சேர்ப்பது என்பது காந்தியின் விடுதலை போராட்டத்தை சிறுமைப்படுத்தும் வகையில் ஆகிவிடும். ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு வழிபாட்டு முறைகள் இருக்கும் நிலையில், இன்னும் பல படங்கள் இடம் பெற வேண்டும் என்று பலதரப்பு கோரிக்கைகள் வந்து விடும். இது மதசார்பற்ற நாடு. முழுக்க முழுக்க அரசியலுக்காக கெஜ்ரிவால் செய்கிறார். ரூபாய் நோட்டில் காந்தி புகைப்படத்தோடு வேறு புகைப்படமும் சேர்ப்பதாக இருந்தால் உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் படத்தை வைக்கலாம் என்ற கருத்தும் தமிழகத்தில் இருந்தும் எழுப்பப்பட வாய்ப்புள்ளது.
தேவையற்ற விவாதம்
மோகன் குமாரமங்கலம் (வரலாற்று ஆய்வாளர்):- கெஜ்ரிவால் கருத்து என்பது முழுக்க முழுக்க அரசியலுக்கானது. பா.ஜ.க. இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். வடமாநிலங்களில் வெகுஜன இந்துக்களின் வாக்கு வங்கியை குறிவைத்து அரசியல் காய் நகர்த்துகிறார் என்றே தோன்றுகிறது. அவர் ஐ.ஐ.டி.யில் படித்த அறிஞர். டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பையும் ஆம் ஆத்மி கைப்பற்றி விட்டது. இப்போது பா.ஜ.க.வுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்த அவர் முயற்சி செய்கிறார். ஆனால், இந்தியா மதசார்பற்ற நாடு. இங்கே இப்படி ஒரு வாதமே தவறான வாதம். ரூபாய் நோட்டில் காந்தி புகைப்படம் இருப்பதே போதுமானது. அதில் வேறு எந்த படமும் சேர்க்க தேவையில்லை.
சங்கமித்திரை (வக்கீல், கம்பம்):- கடவுள் படத்தை வைத்தால் பொருளாதாரம் வளரும் என்றால் சாமி படங்கள் போட்ட காலண்டர் அச்சடிப்பவர்கள் உலக கோடீஸ்வரர்கள் ஆகி இருப்பார்கள். ரூபாய் நோட்டில் லட்சுமி புகைப்படம் என்றால் அதை அனைத்து மதத்தினரும் ஏற்பார்களா? நம் நாட்டில் லட்சுமி படங்களில் பல படங்கள் உள்ளன. அதில் எந்த படத்தை வைக்க வேண்டும் என்று பெரிய விவாதமே வந்து விடும். நாட்டில் மக்கள் பலரும் ரூபாய் நோட்டுகள் இல்லாத டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றனர். இந்த நேரத்தில் ரூபாய் நோட்டில் எந்த படங்களை சேர்க்கலாம் என்ற விவாதம் தேவையற்றது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் சிலர் கூறுகையில், "ஏற்கனவே செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், வீட்டில் விளக்கு (லைட்) எரியவிட்ட பிறகும் ரூபாயை கொடுக்க தயங்குவார்கள். அப்படி இருக்கும்போது, ரூபாய் நோட்டுகளில் லட்சுமி படத்தை அச்சிட்டால் பலரின் மனநிலையை சொல்லவா வேண்டும்?" என்றனர்.