ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? பொதுமக்கள் கருத்து


ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? பொதுமக்கள் கருத்து
x

ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது குறித்து பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரூர்

வெண்மை புரட்சி

மனிதனின் அன்றாட சத்து தேவையை நிறைவு செய்வதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒட்டுமொத்த உலக பால் உற்பத்தியில் இந்தியா 21 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. கடந்த 1950-60 காலகட்டங்களில் இந்தியாவில் இருந்த நிலை வேறு. மக்களுடைய அன்றாட பால் தேவையைக்கூட பூர்த்தி செய்யமுடியாத சூழல் அப்போது இருந்தது. அதன்பின்னர் வெண்மை புரட்சி நிகழ்த்தப்பட்டு, பால் உற்பத்தியில் தன்னிறைவு நிலையை நாம் எட்டியிருக்கிறோம்.

விலை உயர்வு

இந்தியா கடந்த ஆண்டு மட்டும் 21 கோடி டன் பால் உற்பத்தி செய்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு நிறுவனமான ஆவின், பாலையும், தயிர், மோர் உள்பட பால் சார்ந்த பொருட்களையும் விற்பனை செய்துவருகிறது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இது, கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது.

இந்தநிலையில், ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆகவும் (ரூ.12 உயர்வு), 'டீ மேட்' (சிவப்பு) பாலை ஒரு லிட்டர் ரூ.60-ல் இருந்து ரூ.76 ஆகவும் (ரூ.16 உயர்வு), 'கோல்ட்' (பிரவுன்) பாலை ஒரு லிட்டர் ரூ.47-ல் இருந்து ரூ.56 ஆகவும் (ரூ.9 உயர்வு) உயர்த்தியிருக்கிறது. பால் அட்டை வைத்திருப்பவர்கள் ஆரஞ்சு ரக பாலை, ஒரு லிட்டர் ரூ.46-க்கு பெற்றுக்கொள்ளலாம். அதே சமயத்தில் நீலம் மற்றும் பச்சைநிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

பொதுமக்கள் கருத்து

ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள், டீக்கடைக்காரர்கள், பால் முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பால் விலை உயர்வு டீ, காபி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது குறித்து பால் முகவர்கள், டீக்கடை நடத்துபவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

அதிகளவில் வாங்குவதில்லை

கரூரை சேர்ந்த மோகன்:-

வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீக்கடைகளில் பயன்படுத்தக்கூடிய ஆவின் பாலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.12 உயர்ந்து ரூ.60 ஆக விற்பனையாகிறது. இந்த பால் பாக்கெட் ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது. டீக்கடைகளில் இந்த பால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இதனை சாதாரண பொதுமக்கள் அதிக அளவில் யாரும் வாங்குவதில்லை. விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் வாங்கி பொதுமக்கள் பயன்படுத்துவார்கள். இந்த பாலின் விலை உயர்வால் டீக்கடைகளில் டீ, காபியின் விலை உயர்த்துவது தொடர்பாக தற்போது எதுவும் முடிவு எடுக்க முடியாது.

சந்தோஷமாக உள்ளது

சேமங்கி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் அர்த்தநாரீஸ்வரன் கூறியதாவது:-

மாதம், மாதம் மாடுகளுக்கு தீவனமாக போடப்படும் தவிடு, கம்பு மாவு, சோள மாவு, மாட்டு தீவனங்கள் போன்றவை தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க த்திற்கு பால் விநியோகம் செய்யும் போது விலை மிக குறைவாகவே உள்ளது.

இந்த விலை கட்டுபடியாகாது. பாலின் விலை உயராததால் எங்களைப்போல பால் உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தோம். இந்நிலையில் தமிழக அரசு பால்விலையை உயர்த்திஇருப்பது எங்களுக்கு மிகுந்த சந்தோஷமாக உள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கு அதிக விலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பால் நிறுவனங்கள் பாலை அதிக விலைக்கு வாங்குவதால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் விநியோகம் செய்த விவசாயிகள் அதிக அளவில் தனி யாருக்கு பால் விநியோகம் செய்து வருகிறார்கள். இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழக அரசு இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு வரப்பிரசாதம்

சேமங்கி பகுதியை சேர்ந்த பால் உற்பத்தியாளர் விவசாயி தங்கவேல்:-பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சேமங்கியில் ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை தொடர்ந்து இந்த கூட்டுறவு சங்கத்திற்கு பால் விநியோகம் செய்து வருகிறேன். ஆனால் பாலின் விலை மிகவும் குறைவாக உள்ளது. மாடுகளுக்கு பால் உற்பத்திக்காக போடப்படும் தீவனங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பாலின் விலை கட்டுபடியாகவில்லை. தற்பொழுது சிறிது அளவு பால் விலையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இருந்தாலும் தனியார் பால் நிறுவனங்கள் கொடுக்கும் விலையை தமிழக அரசு கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் கூட்டுறவு சங்க ங்களுக்கு அதிக பால் கொண்டு வருவார்கள். இருப்பினும் பால் விலையை உயர்த்தியது பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

அச்சம் அடைய வேண்டாம்

கரூர் சக்கரக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ்:-

ஆவின் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் சேவையை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கிய வருகிறது. இந்நிலையில் தற்போது விலை ஏற்றம் என்பது அனைத்து பால்களுக்கும் விலை உயர்ந்த பட வில்லை. குறிப்பாக பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தும் பாலுக்கு விலை உயர்த்தப்படவில்லை. எனவே பால் விலை உயர்வு குறித்து அச்சப்பட தேவையில்லை.


Next Story