'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' சாத்தியமா?


ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை சாத்தியமா?
x

பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்து இருக்கும் ‘ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

ஒரே போலீஸ் சீருடை

மத்திய அரசு 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, 'ஒரே நாடு ஒரே தேர்தல்', ஒரே நாடு ஒரே மொழி', 'ஒரே நாடு ஒரே வரி', 'ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு' என்ற வரிசையில் இப்போது 'ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை' என்ற கோஷத்தை மத்திய அரசு முன் வைத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநில உள்துறை மந்திரிகள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது சட்ட அமலாக்க பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை அளிக்கும். இதன்மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியும். 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்பதை உங்கள் கவனத்துக்கு ஒரு சிந்தனையாக முன்வைக்கிறேன்" என்றார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

பிரதமரின் இந்த யோசனைக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு தனது அதிகாரத்தை ஒரு குடைக்குள் கொண்டுவந்து, மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்தியாவில் காவல் துறை என்ற அமைப்பு 1861-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அணியவேண்டிய சீருடை தொடர்பாக மத்திய அரசு விதிகளை உருவாக்கியுள்ளது.

அதே நேரத்தில், இந்திய காவல் பணியை சாராத போலீசாரின் சீருடைகளை அந்தந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கு தகுந்தாற்போல வடிவமைத்துக்கொள்கின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் தமிழகத்தில், போலீசாரின் சீருடைகளில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை. ஏட்டுகள், தலைமை ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை அரைக்கால் சட்டை மற்றும் நீளமான தொப்பி அணிந்து பணியாற்றி வந்தனர். 1973-ம் ஆண்டு தமிழகத்தில் போலீசாரின் சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

வேறுபாடு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு போலீசார் காக்கி சீருடையும், போக்குவரத்து போலீசார் வெள்ளை நிற சட்டையும், காக்கி 'பேண்ட்'டும் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் போலீசார் வெள்ளை நிற சீருடையிலும், புதுச்சேரியில் காக்கி சீருடையுடன் சிவப்பு நிற தொப்பியும் அணிகிறார்கள். இதேபோல டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மராட்டியம், ஜம்மு-காஷ்மீர் என ஒவ்வொரு மாநிலங்களிலும் போலீஸ் சீருடைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்பநிலை, கலாசாரம், மாநில கொள்கை உள்ளிட்ட பல்வேறு சூழலுக்கு ஏற்ப போலீசாரின் சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தநிலையில், மத்திய அரசு இப்போது முன்வைத்துள்ள 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியமா? என்பது குறித்து ஓய்வுபெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

சாத்தியம் இல்லை

ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. மு.ரவி:- மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான காக்கி சீருடை இருந்தாலும், நிற வேறுபாடு இருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்பதான் சீருடைகளை முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தை பொறுத்தமட்டில் வெயில் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு நமது சீருடை வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. மலைப்பிரதேசமான ஊட்டியில் உள்ள நமது போலீசாருக்கு சீருடையில் மாற்றம் இருக்கிறது. நுண்ணறிவு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு உள்பட 3-ல் ஒரு பங்கு போலீசாருக்கு சீருடையே கிடையாது. ஒரே மாநிலத்தில் உள்ள போலீசார் இடையே சீருடையில் இத்தனை மாற்றம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அகில இந்திய அளவில் போலீசாருக்கு ஒரே சீருடை என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பலம். அதன்படி, மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப சீருடைகள் இருக்க வேண்டும்.

நடைமுறைக்கு பொருந்தாது

ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. திலகவதி:- 'ஒரே நாடு ஒரே சீருடை' என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் தனித்தன்மையை காட்டுவதற்காக, போலீசாரின் சீருடையில் சிறிய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். எல்லா மாநிலங்களும் ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடையை ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால், போக்குவரத்து போலீசார், இரவில் வாகன ஓட்டிகளுக்கு தெரியவேண்டும் என்பது உள்பட பாதுகாப்பு கருதி வெள்ளை நிற சீருடை அணிந்திருக்கிறார்கள். கமாண்டோ படைகள் வேறு சீருடையில் இருப்பார்கள். மாநில போலீசின் படைபிரிவுகளிலேயே வேறு வேறு சீருடைகள் இருக்கிறது. இதேபோல மத்திய அரசு போலீஸ் பிரிவுகளிலும் ஒரே மாதிரியான சீருடை இல்லை. அதனால் மாநிலங்கள் ஒரே போலீஸ் சீருடை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம். அதனால் இது நடைமுறைக்கு பொருந்தாது என்று கருதுகிறேன்.

நிர்வாக ரீதியாக...

ஓய்வுபெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜமூர்த்தி (திண்டுக்கல்) :- ஒவ்வொரு மாநிலத்திலும் போலீஸ் சீருடையில் வேறுபாடு இருக்கிறது. இது நிர்வாக ரீதியாக உதவியாக இருக்கிறது. உதாரணமாக ஒரு மாநில போலீசார் மற்றொரு மாநிலத்துக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்யும்போது வெளிமாநில போலீசார் என்பதை அடையாளம் காட்டுவதே சீருடை தான். எனவே போலீஸ் சீருடையில் வேறுபாடுகள் இருப்பது பயனுள்ளதாகவே இருக்கிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரி சீருடை அணிந்தால் போலீஸ் நிர்வாகத்துக்கு நன்றாக இருக்காது. பிரதமர் எந்த நோக்கத்திற்காக அவ்வாறு கூறினார் என்பது தெரியவில்லை.

வரவேற்பு

ஓய்வுபெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடசாமி (திண்டுக்கல்) :- போலீசாரின் சீருடையில் ரிப்பன், நட்சத்திரம் என மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடுகள் இருக்கின்றன. நாடு முழுவதும் ஒரே மாதிரி போலீசாருக்கு சீருடை என்பது வரவேற்கத்தக்கது. அதன்மூலம் வெளிமாநிலத்துக்கு செல்லும் சாதாரண மக்களும் போலீசாரை எளிதில் அடையாளம் காணமுடியும். மேலும் ஒரே சீருடை திட்டம் மாநிலங்களின் ஒத்துழைப்பை பொறுத்தது ஆகும்.

போக்குவரத்து போலீஸ்

லாரி டிரைவர் கண்ணன் (கோபால்பட்டி) :- நான் லாரியில் சரக்குகளை ஏற்றி கொண்டு வெளிமாநிலங்களுக்கு அடிக்கடி செல்கிறேன். ஒவ்வொரு மாநிலத்திலும் போலீசார் வெவ்வேறு விதமாக சீருடை அணிகின்றனர். அதிலும் போக்குவரத்து போலீசாரை அடையாளம் காண்பது சிரமமாக இருக்கிறது. எனவே போக்குவரத்து போலீசாருக்கு ஒரே மாதிரி சீருடை வழங்குவது மிகவும் முக்கியமானது.

குடும்ப தலைவி பேபி (திண்டுக்கல்) :- ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளம் மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப போலீசாருக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளது. அதை மாற்றி நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்குவதால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா? என்று தெரியவில்லை. அது சாத்தியமா? என்பதும் தெரியவில்லை. மதுவிலக்கு உள்பட பலவற்றை நாடு முழுவதும் ஒரே மாதிரி அமல்படுத்தினால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story