கடின உடற்பயிற்சி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?
கடின உடற்பயிற்சி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? என்று பயிற்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
உடற்பயிற்சி... என்ற வார்த்தையை கேட்கும்போதே சிலருக்கு அளவு கடந்த உற்சாகமும், சிலருக்கு சிறிதளவு தயக்கமும் உண்டாகும். ஏனெனில் உடலை மேம்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இயல்பாக இருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் அதனை அடையும் பொருட்டு சிலர் அதற்கான வழிமுறையை சரியாக பின்பற்றுவதில்லை. இதன் காரணமாக உடலில் சிறு காயங்கள் முதல் எலும்பு முறிவு உள்ளிட்ட பெரிய அளவிலான பாதிப்புகளும் உண்டாகின்றன. சில நேரங்களில் இதனால் உயிரிழப்பும் நடந்து வருவது அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாகவே உள்ளது.
ஆம்... தற்போது முறையான வழிகாட்டுதல் மற்றும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் தனது உடல்நிலைக்கு ஏற்றவாறு உடற்பயிற்சியை எடுத்துக்கொள்ளாமல் சிலர் உயிரிழப்பை சந்திக்கின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இது நாட்டின் அனைத்து மக்களிடமும் பேசு பொருளாகியது. இந்த இறப்புக்கு காரணம் என்னவென்று ஆராயும்போது, அவர் சரியான தூக்கமில்லாது உடற்பயிற்சி மேற்கொண்டதன் விளைவாக இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது.
இதேபோல் சமீபத்தில் கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த ஆணழகன் போட்டிக்கு சென்ற சேலத்தை சேர்ந்த ஹரிகரன் என்ற 21 வயது வாலிபர், பயிற்சி எடுத்த நில நிமிடங்களில் திடீரென மரணம் அடைந்தார். உடற்பயிற்சி செய்யும்போது இப்படி உயிரிழப்புகள் நடப்பதற்கு காரணம் என்ன?. தற்போதைய சூழலில் இது தொடர் கதையாகி வருவது ஏன்? என்பது குறித்து உடற்பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
முறையான உடற்பயிற்சி தேவை
இந்திய மருத்துவ சங்க மாநில இணை செயலாளர் விழுப்புரத்தை சேர்ந்த டாக்டர் திருமாவளவன்:-
உடற்பயிற்சி நம் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் அவசியமான ஒன்று என நாம் அறிவோம். நம் உடற்கல்வி ஆசான்கள் முதல் உயரிய பதவிகளில் உள்ள அதிகாரிகள் வரை (தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. ரவி) வரை ஊடகங்கள் மூலமாக உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். ஆம், சீரான, முறையான உடற்பயிற்சி உடலுக்கு நல்லது. ஆனால் முக்கியமாக சில இளம்வயதினர் குறுகிய காலத்தில் உடல் கட்டமைப்பை அடைய தேவைக்கு அதிகமான முறையற்ற கடின உடற்பயிற்சி மேற்கொண்டும் மற்றும் ஸ்டெராய்டு சம்பந்தமான மருந்துகள் எடுத்தும் உடல்நலனை தொலைக்கின்றனர். கடின உடற்பயிற்சி தசைநார்களின் அலர்ஜி, தசை விடுபடுதல், குருத்தெலும்புகளின் பாதிப்புகள், கழுத்து, இடுப்பு ஜவ்வு, மூட்டு தொந்தரவுகள், சில சமயங்களில் எலும்பு முறிவுகள், சிறுநீரக பாதிப்பு, இதயத்துக்கு தேவையற்ற வேலைப்பளு மட்டுமல்லாமல் சில சமயங்களில் மாரடைப்பு மற்றும் இதயத்துடிப்பு மாறுபாடுகள் ஏற்பட்டு உயிர் இழப்பே ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக கன்னட முன்னணி நடிகர், சில விளையாட்டு வீரர்கள் உயிரிழப்பு. அதுவும் குறிப்பாக கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டவர்கள் இதில் மிக கவனமாக இருக்க வேண்டும். சீரான, படிப்படியான உடற்பயிற்சியே இதயத்துக்கு வலிமை சேர்ப்பதோடு அடுத்தடுத்து கடின உடற்பயிற்சி செய்வதற்கு இதயத்தை தயார்படுத்துகிறது. முறையாக மலை ஏறுபவர்கள்கூட தங்களை ஒவ்வொரு கட்டமாக பயிற்சிக்கு உட்படுத்துவதன் நோக்கமும் இதுவே. ஆகவே சரியான முறையான உடற்பயிற்சி செய்வோம், உடல்நலனை காப்போம்.
தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும்
திண்டிவனத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற உடற்பயிற்சி ஆசிரியர் பிரான்சிஸ்:-
நம் உடலுக்கு உடற்பயிற்சி மிக, மிக அவசியமாகும். அவரவர் உடலுக்கு ஏற்றவாறு தேவையான அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி மேற்கொண்டால் உடல்நலத்துக்கும், உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும். அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதால் விளையாட்டு வினையாகலாம், விளையாடாவிட்டாலும் உடல்நலத்துக்கு கேடு நேரும். ஆகவே உடற்பயிற்சியை மேற்கொண்ட பிறகு சத்துள்ள உணவுகளை வீட்டில் செய்து சாப்பிட வேண்டும். வெளியில் சாப்பிடுவதால் உடற்பயிற்சி செய்தாலும் பலனற்றுபோகும். எனவே தேவைக்கேற்ப எதையும் பயன்படுத்த வேண்டும்.
உடலுக்கு பாதிப்பு
செஞ்சி அருகே பென்னகரை சேர்ந்த உடற்பயிற்சியாளர் செந்தமிழ்செல்வன்:-
கடின உடற்பயிற்சி என்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். மேலும் இதுவரை உடற்பயிற்சியை எடுக்காதவர்கள் திடீரென்று உடற்பயிற்சி செய்யும்போது அங்கு உடற்பயிற்சியாளர் சொல்லிக்கொடுப்பதை மட்டுமே செய்ய வேண்டும். ஆனால் புதியதாக வருபவர்கள் அவர்களுடைய விருப்பத்திற்கு செய்யும்போது அதில் ஏதாவது ஒரு சிறிய தவறுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுபோல் உணவு முறைகளையும், உடற்பயிற்சி முறைகளையும் முறையாக செய்தால் உடற்பயிற்சிக்கு மிக்க நன்றாக இருக்கும். உடற்பயிற்சி என்பது பகுதி, பகுதியாக எடையை மற்றும் வலுவான இயந்திரங்களை இயக்க வேண்டும். ஆனால் உடற்பயிற்சியாளர்கள் சொல்லிக்கொடுப்பதை விட்டுவிட்டு தாங்களாகவே எடுத்தவுடன் அதிக பலம் கொண்ட இயந்திரங்கள் மூலம் செய்முறை செய்வதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
மூச்சு திணறி உயிரிழப்பு
மேல்மலையனூர் சிவக்குமார்:-
உடற்பயிற்சி என்பது அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும். பள்ளிப்பருவத்திலேயே விளையாட்டு என்று ஒரு பாடவேளையில் விளையாட்டு மட்டுமல்லாமல் உடற்பயிற்சியும் கற்றுத்தரப்பட்டன. ஆனால் தற்போது பாடங்கள் அதிகளவில் இருப்பதால் அந்த பாடவேளையில் குறிப்பிட்ட பாடத்தை முடிக்காத ஆசிரியர் கேட்டுவிட்டால் அந்த பயிற்சி இல்லாமல் போய்விடுகிறது. ஆண்களுக்கு தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால் நடத்தல், ஓடுதல், குதித்தல் போன்ற உடற்பயிற்சிகளை செய்கின்றனர். வசதியானவர்கள் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். கடின உடற்பயிற்சி ஆபத்தை ஏற்படுத்துமா? என்றால் ஓரளவிற்கு உண்மையென்றே நான் கருதுகிறேன். காரணம் சுவாசப்பிரச்சினை உள்ள ஒரு நபர், உடற்பயிற்சி செய்யும்போது மூச்சு திணறி உயிரிழக்கக்கூடும். இதனால் உடற்பயிற்சி செய்யக்கூடியவர்கள் பயப்படுகின்றனர். என்னைப்பொறுத்தவரை எந்த பயிற்சியும் அளவோடு இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நினைவுக்கு வர வேண்டும்.
உடலுக்கு வலு சேர்க்கும்
தியாகதுருகத்தை சேர்ந்த மருத்துவர் ராஜா:-
உடல் உழைப்பு இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உடற்பயிற்சி அவசியமாகிறது. மேலும் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பயிற்சியாளர்களின் ஆலோசனைப்படி விளையாட்டு மற்றும் மிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் உடலுக்கு கூடுதலான சத்துக்கள் தேவைப்படும். எனவே இயற்கை உணவை சரிவிகிதத்தில் எடுத்து கொள்ளலாம். ஒரு சில விளையாட்டு வீரர்கள் உடலை கட்டுக்கோப்பாக காட்டுவதற்காக புரோட்டின் பவுடர் உள்ளிட்ட செயற்கை உணவுகளை அதிகமாக எடுத்து கொள்கின்றனர். இதனால் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதேபோல் பயிற்சியாளரின் ஆலோசனை இல்லாமல் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே பயிற்சியாளர்களின் ஆலோசனைப்படி மிதமான உடற்பயிற்சி, இயற்கை உணவு ஆகியவற்றை எடுத்து கொண்டால் உடற்பயிற்சி உடலுக்கு வலு சேர்க்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.