கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா?; பக்தர்கள் கருத்து


தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? என்பது குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்களில் பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? என்பது குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அன்னதானம்

'தானத்தில் சிறந்தது அன்னதானம்', 'போதும் என்ற மனப்பான்மையை அளிப்பது அன்னதானம் மட்டுமே', உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நம் அனுபவப் பூர்வமாகவே பார்க்க முடியும். பசியோடு இருப்பவருக்கு உணவு அளிப்பது சிறந்த மனித பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு அளிப்பது நம் கலாசாரத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. மேலை நாடுகளில் உணவு வங்கிகள் மூலமும், உறையுள்கள் மூலமும் உணவு இல்லாதவருக்கு உணவு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி சென்னையில் அன்னதான திட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆன்றோர்கள், சான்றோர்கள், பக்தர்கள் வரவேற்பை பெற்று படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில், வேம்படி இசக்கியம்மன் கோவில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உள்பட 8 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் குறைந்தது 25 நபர்களுக்கும், அதிகபட்சம் 200 பேருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு சாப்பாட்டுக்கு ரூ.35 செலவிடப்படுகிறது. தொடர்ந்து 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

நாள் முழுவதும் உணவு

கடந்த 2021-22-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின்போது, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி வைத்தார் அதன்படி, காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. தற்போது ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அன்னதான திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? சாப்பிடும் பக்தர்களுக்கு மனநிறைவு கிடைக்கிறதா? என்று அறிந்து கொள்வதற்காக கோவில்களுக்கு சென்று பக்தர்களிடம் கேட்டோம். அவர்கள் கூறியதை இங்கு பார்ப்போம்.

தரமாக இருக்கிறது

தூத்துக்குடியை சேர்ந்த செல்வமாரியப்பன்:- வெளியூர் பக்தர்கள், ஏழை பக்தர்களுக்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கோவில்களில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் சிறப்பாக நடந்து வருகிறது. தினமும் 100 பேருக்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், கூட்டு வழங்குகின்றனர். இங்கு ஏராளமானவர்கள் வருகின்றனர். இதனால் அதிகமானவர்கள் சாப்பிடும் வகையில் அன்னதானத்தை அதிகரிக்க வேண்டும். கோவிலில் அன்னதான கூடத்தில் உள்ள நாற்காலிகள், மேஜைகள் சேதம் அடைந்து உள்ளன. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாப்பாடு நல்ல தரமாக உள்ளது.

தூத்துக்குடியில் அன்னதானம் தயார் செய்யும் முத்துராமன்:- நான் ஆரம்பம் முதல் அன்னதானத்துக்காக சமையல் செய்து கொடுத்து வருகிறேன். ஆரம்பத்தில் ரூ.1,000 வழங்கப்பட்டது. தற்போது 100 பேருக்கு சமையல் செய்வதற்காக ரூ.3 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. இதில் சாம்பார், ரசம், மோர், கூட்டு அல்லது பொரியல், ஊறுகாய் தயார் செய்து கொடுக்கிேறாம். முன்பு 20 கிலோ அரிசி சமைத்து 100 பேருக்கு வழங்கினோம். தற்போது விலைவாசி உயர்ந்து விட்டதால், 16 கிலோ அரிசியை சமைத்து 100 பேருக்கு வழங்குகிறோம். இதனால் மீண்டும் சாப்பாடு கேட்பவர்களுக்கு கொடுக்க முடிவது இல்லை. திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை முன்னிட்டு பக்தர்கள் அன்னதானத்துக்கு நன்கொடை வழங்குகிறார்கள். அதனை கொண்டும் அன்னதானம் வழங்குகிறோம். அதேபோன்று சாப்பாடு பரிமாறுவதற்கு ஆட்கள் கிடையாது. இதனால் சில மாணவர்கள் தினமும் வந்து பரிமாறுகின்றனர். அன்னதான திட்டம் சிறப்பாக நடந்து வருகிறது.

விரிவுபடுத்த வேண்டும்

தூத்துக்குடியை சேர்ந்த முனியசாமி:- சங்கரராமேசுவரர் கோவிலில் அன்னதானம் சிறப்பாக நடந்து வருகிறது. தினமும் 100 பேருக்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு பசியாறி செல்கின்றனர். அதேபோன்று வெளியூரில் இருந்து வந்து தங்கி படிக்கும் மாணவர்களும் அதிக அளவில் கோவிலில் சாப்பிடுகின்றனர். ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்படுகிறது. அவர்கள் அன்னதான கூடத்தில் அனுமதிக்கப்பட்டு சாப்பாடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும். தரத்தையும் மேம்படுத்த வேண்டும்.

தூத்துக்குடி சிவன் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட சிவனாம்பாள்:- நான் வெள்ளி, சனிக்கிழமைகளில் சங்கரராமேசுவரர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கிறேன். தரிசனம் முடித்த பிறகு கோவிலில் வழங்கும் அன்னதானத்தில் பங்கேற்று சாப்பிட்டு உள்ளேன். சாப்பாடு மிகவும் சுவையாக, நன்றாக இருக்கிறது. போதுமான அளவுக்கு சாப்பாடும் தருகிறார்கள். தரமான சாப்பாடு சாப்பிட்ட மன நிறைவு கிடைக்கிறது. இந்த அன்னதான திட்டம் ஏராளமான பக்தர்களுக்கு பயன் உள்ளதாக அமைந்து இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தற்போது கந்தசஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது.

இதனால் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதையொட்டி காலை முதல் இரவு வரை முழுநேரமும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

இங்கு அன்னதானம் சாப்பிட்ட தூத்துக்குடி கீழரெங்கநாதபுத்தை சேர்ந்த மஞ்சுளா கூறுகையில், 'திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் அன்னதானம் மிகவும் சுவையாக உள்ளது. போதுமான அளவு சாப்பாடு தருகிறார்கள். மீண்டும் தேவை என்றாலும் உடனடியாக தருகிறார்கள். இது திருப்தியாக இருக்கிறது' என்றார்.

ஓட்டப்பிடாரம் தாலுகா கச்சேரி தளவாய்புரத்தை சேர்ந்த வன்னியபெருமாள் கூறும்போது, 'நானும், என்னுடைய மனைவியும் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கந்தசஷ்டி திருவிழாவுக்கு வந்து தங்கி சாமி தரிசனம் செய்வது வழக்கம். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு காலை முதல் மூன்று வேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வருகிறோம். அன்னதானம் மிகவும் சுவையாக உள்ளது. சாப்பாடும் நல்ல முறையில் பரிமாறுகிறார்கள்' என்றார்.


Next Story