மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறதா? பயனாளிகள் கருத்து
மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறதா? என்பது குறித்து பயனாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சேலம்,
ஜல்ஜீவன் மிஷன்
மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். அந்த வகையில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய அரசு உறுதி பூண்டு உள்ளது.
இதற்காக நீர் ஆதாரங்களை மேம்படுத்தி பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. இதனால் ஏராளமானோர் பயன்பெற்றனர்.
இதன் அடுத்த கட்டமாக நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மக்களும் பயன்பெற வேண்டும், அவர்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி ஜல்ஜீவன் மிஷன் (ஊரக குடிநீர் இயக்கம்) என்ற திட்டத்தை அறிவித்தார்.
தமிழகம் முதலிடம்
2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களில் இருக்கும் வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்கி முடிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் இலக்கு. மேலும், ஒவ்வொருவருக்கும் குறைந்தது 55 லிட்டர் குடிநீராவது வழங்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் குறிக்கோள்.
இதற்காக இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அவற்றின் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் கிராமப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி புதிய குடிநீர் திட்டம் தொடங்கி குழாய்கள் பதித்தல், குடிநீர் தொட்டிகள் கட்டுதல், கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்ட செயல்பாடுகள் மூலம் மிக சிறப்பாக செயல்பட்ட முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது. இதற்கான விருதை டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க, அதை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார்.
385 ஊராட்சிகளில்
சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 385 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில் 5,109 குக்கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் 6 லட்சத்து 49 ஆயிரத்து 977 குடியிருப்புகளும், அவற்றின் மூலம் 23 லட்சத்து 41 ஆயிரத்து 363 பேரும் வசித்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் 2020-2021-ம் ஆண்டில் 64 ஊராட்சிகளில் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.120.45 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 714 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கடுத்து 2021-2022-ம் ஆண்டு 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த நிதியின் மூலமாக ரூ.26.38 கோடியில் 481 குக்கிராமங்களில் 31,006 குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காட்சி பொருளான குழாய்கள்
ஆனால், சேலத்தாம்பட்டி உள்பட ஒருசில ஊராட்சிகளில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்கு மேலாக குடிநீர் இணைப்புகள் வழங்கியும் இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் அந்த கிராமங்களில் வீடுகள் முன்பு குழாய்கள் காட்சி பொருளாக இருப்பதை காணமுடிகிறது.
அதேசமயம், பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் இத்திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு சீரான முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி உள்பட பெரும்பாலான ஊராட்சிகளில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் டெபாசிட் தொகை செலுத்தி பெற்ற குடிநீர் இணைப்பை இத்திட்டத்தின் கீழ் மாற்றி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதாவது ஊரகப்பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாத வீட்டில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் புதிய இணைப்பு பெறுவதற்கு பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ரூ.1,200 மட்டும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில ஊராட்சிகளில் பங்களிப்பு தொகை அதிகமாக கேட்பதாகவும் சொல்லப்படுகிறது.
மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் சில ஊரகப்பகுதியில் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சில ஊராட்சிகளில் இத்திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் மக்கள் மத்தியில் எழுகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு இல்லை
இதுகுறித்து கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி சத்யா நகரை சேர்ந்த ஷோபனா கூறுகையில், எங்கள் வீட்டில் ஏற்கனவே ரூ.2500 செலுத்தி குடிநீர் இணைப்பு பெற்றுள்ளோம். அதற்கு ஆண்டுக்கு ரூ.600 குடிநீர் கட்டணம் செலுத்தி வருகிறோம்.
ஆனால் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் எங்கள் வீட்டில் உள்ள குடிநீர் இணைப்பில் கேட் வால்வு ஒன்றை பொருத்தி சேர்த்துவிட்டார்கள். அதற்கு மக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.1,200 செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். அன்றாட தேவைக்கு தண்ணீரும், வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகமும் செய்யப்படுகிறது. எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு எதுவும் இல்லை' என்றார்.
குடிநீர் வினியோகம்
சேலத்தாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த கார்த்திகா கூறுகையில், 'எங்கள் பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளை கணக்கெடுத்து ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த குழாயில் தண்ணீர் வரவில்லை. அது காட்சி பொருளாகவே இருக்கிறது.
இதனால் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் வரும் குடிநீரை பிடித்து பயன்படுத்தி வருகிறோம். எங்கள் தெருவில் எங்கு பார்த்தாலும் குடிநீர் குழாய் இருப்பதை காணமுடியும். ஆனால் தண்ணீர் வினியோகம் இருக்காது. எனவே, மக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
குடிநீர் குழாய் பழுது
மல்லமூப்பம்பட்டி ஊராட்சியை சேர்ந்த முருகன் கூறுகையில், 'எங்கள் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 800 குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் சில வீடுகளில் மட்டும் புதிதாக இணைப்புகள் வழங்கிவிட்டு மீதியை ஏற்கனவே இருக்கும் இணைப்புடன் சேர்த்துவிட்டார்கள். குழாயில் சரிவர தண்ணீர் வருவது இல்லை. அதையும் மீறி வந்தாலும் சுகாதாரமான முறையில் இருப்பது கிடையாது. ஊராட்சியில் இருக்கும் குடிநீர் குழாய்கள் பழுதடைந்து காணப்படுகிறது. மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை' என்றார்.
சீரான முறையில்
சேலத்தாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த ராஜேந்திரன் கூறுகையில், 'இளம்பிள்ளை அருகே இருப்பாளி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்த பிறகு தான் சேலத்தாம்பட்டி ஊராட்சிக்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வினியோகம் செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். பணிகளை விரைந்து முடித்து மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும், என்றார்.
தலைவாசல் ஊராட்சி அம்மன் நகரை சேர்ந்த மகேஸ்வரி கூறுகையில், இத்திட்டம் மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் எங்கள் ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது இல்லை. இதற்காக பிரதமர் மோடிக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், என்றார்.
மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். அதற்கான நீர்ஆதாரங்களை புதிதாக உருவாக்க வேண்டும். இன்னும் பல கிராமப்புறங்களில் குடிநீர் வினியோகம் இல்லாத நிலை உள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டறிந்து உடனடி தீர்வு காணவேண்டும். இந்தியாவெங்கும் குடிநீர் பிரச்சினை இல்லாத நிலை வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.