செல்போன் ஆதிக்கத்தால் காணாமல் போகிறதா டைரி?


செல்போன் ஆதிக்கத்தால் காணாமல் போகிறதா டைரி?
x

செல்போன் ஆதிக்கத்தால் காணாமல் போகிறதா டைரி? -பொதுமக்கள் கருத்து

ராணிப்பேட்டை

விஞ்ஞானத்தின் அதிவேக பாய்ச்சலோடு பயணித்துக்கொண்டிருக்கிறது உலகம். இந்த உலகத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகளோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதன்காரணமாக நாம் பாரம்பரியமாக கடைபிடித்து வந்த வாழ்க்கை முறையில் பல மாற்றங்களை சந்தித்து வருகிறோம்.

அப்படி நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச்சென்று கொண்டிருக்கிறது டைரி. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது செல்போனின் ஆதிக்கம் என்றால் மிகையில்லை.

காலப்பெட்டகம்

டைரி என்ற சொல் லத்தீன் மொழியில் இருந்து பிறந்தது. 17-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரான சாம்பல் பிப்ஸ் என்பவர் எழுதிய டைரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் டைரிகளை கைகளில் வைத்திருப்பதே ஒரு கவுரவமாக பார்க்கப்பட்டது. ஒவ்வொரு நாளிலும் நாம் செய்த நல்லது, ெகட்டதை குறித்து வைத்துக்கொள்ளும் காலப்பெட்டகமாகவும் விளங்கியது.

சிக்கலான நேரத்தில் எடுத்த முடிவுகள் பிற்கால சந்ததிக்கு எடுத்துச்சொல்லும் வழிகாட்டியாகவும், வருங்கால சந்ததியினருக்கு அது ஒரு வரலாற்று சுவடாகவும் விளங்கியது என்றால் மிகையாகாது.

அப்படிப்பட்ட டைரிகள் கடந்த காலங்களில் ஒரு பொக்கிஷம் போல் பார்க்கப்பட்டது. குறிப்பாக பல கொலை சம்பவங்களில் கூட ஒரு சாட்சியாக டைரி நின்று பலருக்கும் தண்டனைகளை வாங்கிக்கொடுத்திருக்கிறது.

டைரி என்ற உடன் வளவளப்பான அட்டையுடன் கூடியது என்று நினைக்க வேண்டாம். சாதாரண நோட்டில் கூட நாட்களை குறிப்பிட்டு எழுதுவதும் டைரிதான்.

டைரிகளில் குறியீடுகள் (கோடுவேர்டு) மூலமும் சிலர் எழுதுவது உண்டு. அதை எழுதியவர் படித்தால் மட்டுமே அந்த குறிப்புகளுக்கான அர்த்தம் புரியும். மற்றவர்களுக்கு சம்பந்தப்பட்டவர் என்ன எழுதி இருக்கிறார் என்பது தெரியாது. பிரபலமானவர்கள் தங்களது ரகசிய வாழ்க்கை தகவல்களை அப்படி எழுதி வைப்பது உண்டு. இப்படி டைரிக்கு என்று ஒரு நீண்ட வரலாறு உண்டு.

செல்போனில் பதிவிடும் முறை

ஆனால் இன்றைக்கு செல்போன், கணினி ஆகியவற்றின் வருகையால் டைரி எழுதும் பழக்கம் மெல்ல ெமல்ல மறைந்து கொண்டிருக்கிறது. டைரிகளில் எழுதுவதை பலரும் கணினிகளிலும், செல்போன்களிலும் குறிப்பேடாக பதிவு செய்யும் வழக்கத்தை வைத்துள்ளனர். ஆனால் அது பாதுகாப்பு இல்லாதது என்பதுதான் உண்மை. எனவே, டைரிக்கு நிகர் டைரிதான்.

இருந்தாலும் கொரோனா, காகிதத்தின் விலை ஏற்றம் போன்றவற்றால் டைரிகளின் விலை அதிகரித்துள்ளது. அதை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் டைரிகள் அச்சடிக்கப்பட்டு கடைகளில் அப்படியே தங்கள் வாழ்நாளை கழித்து விடுகிறது.

தற்போது ஆன்மிக தகவல்களை எழுதிவைக்கவும், பொதுஅறிவு விவரங்களை எழுதி வைக்கவும், தொழில் கணக்கீடுகளை சேகரிக்கவும், பஞ்சாங்கத்துக்கும் டைரிகள் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு டைரிக்கு வாழ்நாள் ஒரு ஆண்டுதான். ஜனவரி மாதம் 1-ந் தேதி டைரி எழுதத்தொடங்குவார்கள். டிசம்பர் 31-ந் தேதியுடன் ஒரு வருட அனுபவத்துடன் முடித்து விடுவார்கள்.

அடுத்த ஆண்டு புது டைரி வாங்கி அதில் எழுத தொடங்குவார்கள். இன்றைக்கு புத்தாண்டு தொடங்கி விட்டது. புது டைரியில் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எழுத தொடங்க வேண்டும்.

காலமாற்றத்தில் டைரி பயன்பாடு குறைந்து கொண்டிருக்கிறதா? அல்லது அதிகரித்திருக்கிறதா? பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

எழுதுவதற்கே சோம்பல் படுகிறார்கள்

சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், எழுத்தாளருமான பொன்னீலன்:- அன்றாடம் மனதில் தோன்றும் நிகழ்வுகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பது தான் டைரி. டைரி எழுதும் பழக்கம் எனக்கு சிறு வயதில் இருந்தே உண்டு.

தினமும் என் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளையும், மனதில் ஏற்படும் மாற்றங்களையும் டைரியில் எழுதி வைப்பேன். தற்போது கூட ஏதாவது புதிய தகவல்கள் கிடைத்தால் அதை டைரியில் எழுதி வைத்து பின்னர் அது பற்றி ஆராய்வேன்.

மனதில் இருக்கும் விஷயங்களை டைரியில் எழுதி வைத்துவிட்டு சில காலம் கழித்து அதை படிக்கும் போது ஒரு விதமான மகிழ்ச்சி கிடைக்கும். அதே சமயம் சில நிகழ்வுகளை படித்துப் பார்க்கும்போது வருத்தமும் ஏற்படும்.

மேலும், சில விஷயங்களை படிக்கும் போது குற்ற உணர்ச்சி ஏற்படும். ஆனால் எந்த விஷயமாக இருந்தாலும் அதை டைரியில் எழுதி வைக்கும் போது மன அழுத்தம் குறையும். நமது வாழ்க்கை சரியான பாதையில் செல்கிறதா? என்பதை நமக்கு டைரி காட்டும். டைரி எழுதுவதன் மூலம் நமது வாழ்க்கை ஒழுங்குபடும். டைரி எழுதினால் மன அமைதி ஏற்படும்.

ஆனால் தற்போதைய நவீன காலத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே டைரி எழுதுபவர்கள் இருக்கிறார்கள். முதலில் எழுதுவதற்கே சோம்பல்படுகிறார்கள்.

செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டதால் தங்கள் மனதில் உள்ளதை செல்போன் செயலியில் டைப் செய்து வைக்கிறார்கள்.

ஆனால் அதனால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் தரவுகள் அனைத்தும் அழிந்துவிடும்.

எனவே டைரி எழுதும் பழக்கத்தை பொதுமக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிலர் பணம் கொடுக்கல் மற்றும் வாங்கல் விவரங்களை எழுதுவதற்காக டைரியை பயன்படுத்துகிறார்கள். அது தவறு இல்லை.

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த சண்முகம்:- செல்போன் பயன்பாட்டிற்கு முன்பாக அன்றாட நிகழ்வுகளை மீண்டும் நினைவுப்படுத்தும் கருவியாக டைரி இருந்தது.

தினமும் நாம் சந்திக்கும் மனிதர்கள், எதிர்பாராத நிகழ்வுகள், சந்தோஷமான தருணம், துக்கம், பயணம் என்று அனைத்தையும் டைரியில் எழுதுவோம்.

சில நாட்கள் அல்லது காலங்களுக்கு பின்னர் டைரியில் எழுதி இருக்கும் வார்த்தைகளை படிக்கும்போது அந்த நிகழ்வுகள் கண்முன்னே வந்து செல்லும். ஆனால் தற்போது ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் அனைத்து நிகழ்வுகளையும் செல்பி அல்லது புகைப்படங்களாக பதிவு செய்து கொள்கிறோம்.

அவற்றை பார்த்து அந்த நினைவுகளுக்கு செல்ல முடியும் என்பதால் டைரி எழுதும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் குடும்பம், உறவினர்கள், நண்பர்களின் பிறந்தநாள், திருமணநாள் உள்ளிட்டவற்றை செல்போன் காலண்டரில் நினைவூட்டும்படி செய்ய முடியும்.

எனவே இதற்கும் தினசரி டைரியை காண வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய இளைஞர்கள், மாணவர்களிடம் டைரி எழுதும் பழக்கம் இல்லை. எனவே செல்போன் வருகையால் காணாமல் போன டெலிபோன் பூத்கள், வாழ்த்து அட்டைகள் வரிசையில் டைரியும் சேரும் நாட்கள் தொலைவில் இல்லை.

ஆரணியில் டைரி விற்பனை செய்து வரும் எம். செல்வராஜ்:- கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகு டைரி வியாபாரம் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் பேப்பர் விலை உயர்ந்து விட்டதால் டைரி அச்சடிப்பு செலவும் அதிகரித்து விட்டது.

ஆரணி மாநகரில் 55 ஆண்டு காலமாக டைரி விற்பனை செய்து வருகிறேன். ஆண்டுக்கு ஆண்டு டைரி விற்பனைகுறைந்து கொண்டு தான் வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தற்போது டைரி எழுதும் பழக்கமே இல்லை.

அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் செல்போனும், கம்ப்யூட்டரும் தான். மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மட்டுமே டைரி எழுதும் பழக்கம் தற்போதும் இருந்து வருகிறது.

மேலும், டைரி வாங்குபவர்களும் பிறருக்கு பரிசு அளிப்பதற்காக தான் வாங்குகிறார்களே தவிர தனது பயன்பாட்டுக்கு என்று யாரும் வாங்குவது இல்லை. இப்படியே சென்றால் வருங்காலத்தில் டைரி எழுதும் கலாசாரம் இல்லாமலே போய்விடும்.

ஆற்காடு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஏ.வி.சரவணன்:- டைரி எழுதும் பழக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பொதுவாக எல்லோரிடமும் இருந்து வந்தது. இந்தப் பழக்கத்தினால் அன்றைய தினம் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகள் குறித்து எழுதி வைத்து பிற்காலங்களில் தேவைப்படும்போது அதனை எடுத்து பார்க்கும் போது இப்பொழுதுதான் நடந்தது போல ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்

யாரிடமாவது கடன் பெற்றிருந்தால் அவற்றையும் தேதி குறிப்பிட்டு எழுதி வைத்து பின்னர் திருப்பி செலுத்த ஏதுவாக இருக்கும். ஒருவருடைய பிறந்தநாள் மற்றும் திருமண நாள் ஆகியவற்றை டைரியில் குறித்து வைத்துக்கொண்டு அந்த நாட்களில் அவர்களுக்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவிப்போம்.

நாம் முக்கியமான நபர்களை பார்க்கச் செல்லும்போது ஜனவரி முதல் தேதி அன்று அவர்களுக்கு டைரி வழங்கி வாழ்த்து தெரிவிப்பதும் வழக்கமாக இருந்தது. இதனால் எழுதும் திறன் மற்றும் வாசிப்புத் திறன் அதிகமாக காணப்பட்டது.

ஆனால் தற்பொழுது பொங்கல் பண்டிகைக்கு எவ்வாறு வாழ்த்து விளம்பரம் அனுப்புவது அடியோடு நிறுத்தப்பட்டதோ அது போல் டைரி வழங்கும் பழக்கம் குறைந்துவிட்டது.

மேலும் கடைகளில் விற்பனை செய்வதும் வெகுவாக குறைந்துவிட்டது. டைரி எழுதும் பழக்கத்தினால் ஞாபக சக்தி அதிகமாக காணப்பட்டது.

ஆனால் தற்பொழுது செல்போனின் மூலமாக வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றின் மூலமாக குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். இதனால் எழுதும் பழக்கம் குறைந்துவிட்டது.

எழுதும் பழக்கம் குறைந்து விட்டதால் தற்போதுள்ள பெரும்பாலான மாணவர்களின் கையெழுத்து பிழையுடனும் மிகவும் மோசமாகவும் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story