வேலூரில் ஆட்டோக்களில் கட்டண உயர்வு ஏற்புடையதா?டிரைவர்கள், பொதுமக்கள் கருத்து


வேலூரில் ஆட்டோக்களில் கட்டண உயர்வு ஏற்புடையதா?டிரைவர்கள், பொதுமக்கள் கருத்து
x

வேலூர் மாநகரில் ஆட்டோக்களில் உயர்த்தப்பட்டு உள்ள கட்டணம் ஏற்புடையதா? என்பது குறித்து ஆட்டோ டிரைவர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

வேலூர்

வேலூர் மாநகரில் ஆட்டோக்களில் உயர்த்தப்பட்டு உள்ள கட்டணம் ஏற்புடையதா? என்பது குறித்து ஆட்டோ டிரைவர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஆட்டோ நகரம்

தமிழகத்தில் பெருமை மிகு நகரங்களில் வேலூரும் இடம் வகிக்கிறது. இங்குள்ள சி.எம்.சி. மருத்துவமனை, வி.ஐ.டி., ஸ்ரீபுரம் தங்கக்கோவில், வேலூர் கோட்டை போன்றவற்றுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.

வேலூர் மாநகரில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சிகிச்சைக்காக வருபவர்கள் வேலூர் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் ஸ்ரீபுரம், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள தங்கும் விடுதிகளில் வெளி மாநிலத்தவர்கள், பிற மாவட்டத்தினர் தங்கி உள்ளனர்.

இவ்வாறு பல்வேறு தேவைகளுக்காக வந்தவர்களும், வேலூர் வாசிகளும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல பெரும்பான்மையானவர்கள் ஆட்டோக்களையே சார்ந்து உள்ளனர். வேலூரை 'ஆட்டோ நகரம்' என்றும் மக்கள் அழைக்கும் அளவுக்கு ஆட்டோக்கள் பெருகி காணப்படுகிறது. காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சி.எம்.சி. வரை பலர் ஆட்டோக்களை நம்பியே உள்ளனர். வேலூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. மாநகரில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ நிறுத்துமிடங்கள் அமைந்துள்ளன.

கட்டணம் உயர்வு

தனியாக ஒருவர் பயணிக்கும் போது குறைந்தபட்சமாக ரூ.50 முதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த ஆட்டோக்கள் பெரும்பாலும் 4 பேர், 5 பேர் என ஷேர் ஆட்டோக்கள் போன்று இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் ஆட்டோக்களில் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் வரை பயணம் மேற்கொள்ள முன்பு ஒரு நபருக்கு ரூ.10 மட்டும் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுகிறது.

இதே கட்டணம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புது பஸ் நிலையத்துக்கும், புது பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்துக்கும் வசூல் செய்யப்படுகிறது. புது பஸ் நிலையத்தில் இருந்து காட்பாடி ரெயில் நிலையத்துக்கு செல்ல நபருக்கு ரூ.20 முதல் ரூ. 30வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரெயில் நிலையத்தில் இருந்து புது பஸ்நிலையத்துக்கும் அதே கட்டணம்தான் வசூல் செய்யப்படுகிறது.

அதேபோல் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், புதுபஸ் நிலையத்தில் இருந்தும் வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ.30 வசூலிக்கப்படுகிறது. இதே போல வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு ரூ.30 வசூல் செய்யப்படுகிறது. இது ஆட்களைபொறுத்து கூடுதலாகவும் வசூலிக்கப்படுகிறது. இரவு நேரம் என்றால் ஆட்டோ டிரைவர்கள் கேட்பது தான் கட்டணம். இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்துக்கும் அவதிக்கும் ஆளாகின்றனர்.

7 ஆயிரம் ஆட்டோக்கள்

வேலூர் மாநகரை பொருத்தவரையில் சைதாப்பேட்டை, ஓல்டுடவுன், கொசப்பேட்டை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, கஸ்பா போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் முக்கிய சாலையில் இருந்து வெகுதொலைவில் அமைந்துள்ளன. அந்த பகுதிகளில் சாலைகள் குறுகலாக அமைந்துள்ளது. எனவே அந்த பகுதிகளுக்கு பஸ்கள் இயக்க முடியாத காரணத்தினால் சுமார் 50 சதவீத மக்கள் மெயின் சாலையில் இருந்து வீட்டுக்கு செல்ல ஆட்டோக்களையே பயன்படுத்துகின்றனர். இதனால் ஆட்டோக்களின் தேவை வேலூருக்கு இன்றியமையாததாக அமைந்துள்ளது. எனினும் கட்டண உயர்வினால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் இடத்துக்கு ஏற்றார்போல் குறைந்த கட்டணம் பெற்று வருகின்றனர்.

கட்டணத்தை மன இறுக்கத்தோடுதான் உயர்த்தி உள்ளதாக ஆட்டோ டிரைவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வேலூர் மாநகரில் மட்டும் சுமார் 7 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகிறது. இவர்கள் அனைவரும் ஆட்டோ தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். விலைவாசி உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகமாக பெற வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வே காரணம்

ஆட்டோ டிரைவர் சிம்புதேவன்:- பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான் ஆட்டோ கட்டண உயர்வுக்கு முதல் காரணமாகும். வேறு வழியின்றி பொதுமக்களிடம் கூடுதலாக கட்டணம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர ஆட்டோவுக்கு பராமரிப்பு செலவு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் ஆகும். எப்.சி., பர்மிட், காப்பீடு போன்ற இதர செலவுகளும் உள்ளது. இதற்கான கட்டணங்களும் தற்போது அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது வேலூர் தனியார் மருத்துவமனையின் கிளை ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுதாக்கு அருகே இயங்கி வருகிறது. இதனால் வேலூரில் இருந்து நோயாளிகளை மருத்துவமனை நிர்வாகமே பஸ்சில் அழைத்து செல்கிறது. இதனால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக நலிவடைந்து உள்ளது.

ஆட்டோ டிரைவர்களுக்கும் குடும்பம் உள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கட்டணத்தை உயர்த்தி உள்ளோம். ஆந்திர மாநிலத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுபோன்று தமிழகத்திலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்கள் தவிர்ப்பு

ஆட்டோ டிரைவர் ஆல்வின்:- ஆட்டோ பயணத்தினை பெண்கள் பலர் பயன்படுத்தி வந்தனர். இதனால் போதிய வருமானம் எங்களுக்கு கிடைத்தது. தற்போது அரசு, பெண் களுக்கு இலவச பஸ் பயண சலுகையை வழங்கியதால் பெரும்பாலான பெண்கள் ஆட்டோவை தவிர்த்து இலவச பஸ்களில் ஏறிச் செல்கின்றனர். எனவே சவாரி குறைய தொடங்கி உள்ளது. தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களை அந்த நிறுவனத்தின் பஸ்சில் வீட்டு வாசலுக்கே சென்று அவர்களை அழைத்துச் செல்கின்றனர்.

பள்ளி வாகனங்களாலும் ஆட்டோக்களில் மாணவர்களின் பயணமும் குறைந்துள்ளது. இதனால் ஆட்டோ கட்டணம் உயர்ந்துள்ளது. கடன் வாங்கி ஆட்டோ வாங்கியவர்கள் பலர் கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு அரசு எங்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

தொழிலாளர்கள் பாதிப்பு

அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த சந்திரசேகர்:- நான் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறேன். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே குடும்ப செலவுகளை செய்து வருகிறேன். திடீரென பெயிண்ட் அடிக்க வேலைக்கு அழைப்பார்கள். அப்போது நான் உடனடியாக செல்ல வேண்டும் என்றால் ஆட்டோவை தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. அலமேலுமங்காபுரத்தில் இருந்து வேலூர் பழைய பஸ் நிலையம் செல்ல ரூ.40 கட்டணமாக கேட்கின்றனர். இதனால் எங்களை போன்ற தொழிலாளர்கள் பாதிப்படைகின்றனர். குடும்ப பட்ஜெட்டில் துண்டுவிழும் நிலையும் ஏற்படுகிறது.

சத்துவாச்சாரியை சேர்ந்த பொன்னரசி:- ஆட்டோ டிரைவர்களுக்கும் வருமானம் தேவையானது தான். ஆனால் பன்மடங்கு கட்டணம் சிலர் வசூலிப்பதாக பலர் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு மற்றும் மழைக்காலங்களில் அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்காமல் இருக்க வேண்டும்.

காங்கேயநல்லூரை சேர்ந்த வியாபாரி வெங்கடேசன்:- காட்பாடியில் இருந்து வேலூர் செல்லும் ஆட்டோக்களில் ஆட்டோ டிரைவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தாற் போல் கட்டணத்தை ரூ.30, ரூ.40 என வசூலிக்கின்றனர். பொதுமக்கள் பஸ் போக்குவரத்தை அடுத்து அதிகமாக உபயோகப்படுத்துவது ஆட்டோக்களைத்தான். ஆட்டோக்கள் எந்த நேரத்திலும் எளிதாக கிடைக்கும் என்பதால்தான் அதில் பொதுமக்கள் பயணிக்கின்றனர். எனவே ஆட்டோ கட்டணத்தை சீரமைக்க வேண்டும். தற்போது உள்ள கட்டணங்கள் ஏற்புடையதல்ல. மேலும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஆட்டோ கட்டணத்தை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story