சேலம் மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கையேந்திபவன்கள் சாதகமா? பாதகமா?
சேலம் மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கையேந்திபவன்கள் சாதகமா? பாதகமா? என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சேலம்,
கையேந்திபவன்கள்
சாலையோர உணவகங்கள் என்பது மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் உள்ள சாலைகளின் ஓரத்தில் சுட, சுட உணவு தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்களே ஆகும். இங்கு உணவை பெற்று ஒரு கையில் வைத்துக் கொண்டு நின்று கொண்டே மற்றொரு கையில் எடுத்து சாப்பிடுவதால் இதனை 'கையேந்தி பவன்' என்றும் அழைக்கிறார்கள். சேலம் மாநகரை பொறுத்தவரை நாளுக்கு நாள் கையேந்திபவன்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.
குறிப்பாக பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஜங்சன் ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு கையேந்திபவன்கள் உள்ளன. அங்கு இரவு நேரங்களில் எப்போதும் மக்கள் அலைமோதுவதை பார்க்க முடியும். இதேபோல் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் சேலத்தில் தங்கியிருந்து கல்லூரிகள் மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் பலர் கையேந்திபவனில் சாப்பிட்டு தான் தங்களது பசியை தீர்த்து வருகின்றனர்.
அசைவ உணவுகள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கையேந்திபவன்களில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, புரோட்டா உள்ளிட்ட சில உணவுகள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வந்தனர். பெரும்பாலும் அசைவ உணவுகள் இருப்பதை பார்க்க முடியாது. ஆனால் தற்போது பெரும்பாலான கையேந்திபவன்கள், ஓட்டலுக்கு நிகராக அசைவ உணவகங்களையும் தயாரித்து விற்று வருகின்றன.
அதாவது மட்டன், சிக்கன், நாட்டுக்கோழி, மீன், நண்டு, உள்ளிட்ட இறைச்சிகளில் விதவிதமாக புதுப்புது பெயர்களில் உணவு தயாரித்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கின்றனர். இங்கு ஓட்டலை விட குறைந்த விலையில் உணவுகள் விற்பனை செய்யப்படுவதால் ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவருமே நாடி வருகின்றனர். இதனால் கையேந்திபவன்கள் அதிகளவு முளைக்க தொடங்கி விட்டன.
எண்ணெயை மாற்றுவதில்லை என புகார்
பல கையேந்திபவன்களில் ஒரே எண்ணெயை தான் அனைத்து உணவு தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தி வருவதாகவும், இது போன்ற கையேந்திபவனில் சாப்பிடுவதால் வயிற்றுவலி, வயிற்றுபோக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கையேந்தி பவன்களுக்கு செல்பவர்களில் சிலர் புகார் கூறுவதையும் காண முடிகிறது.
சேலத்தில் அதிகரித்து வரும் கையேந்தி பவன்களின் சாதக, பாதகங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் கூறும் கருத்துகள் விவரம் வருமாறு:-
நண்பர்களுடன் சேர்ந்து....
தனியார் வங்கி ஊழியர் அஜய்:-
நான் கடந்த 3 ஆண்டுகளாக சேலத்தில் தங்கியிருந்து வங்கியில் பணியாற்றி வருகிறேன். கொரோனா காலத்தில் ஓட்டல்கள் மூடிக்கிடந்த போது என்னை போன்று தங்கியிருந்து வேலை பார்த்தவர்களின் வயிற்றுபசியை தீர்த்தது கையேந்திபவன் தான். தற்போது தெருவுக்கு, தெரு கையேந்திபவன்கள் உள்ளதால், எங்கு உணவுகள் நன்றாக இருக்கிறது என்று தெரியாமல் குழப்பம் அடைய வைக்கிறது. நண்பர்களுடன் அமர்ந்து ஜாலியாக சத்தமாக பேசி குறைந்த விலையில் விருப்பப்பட்ட உணவை சாப்பிட கையேந்திபவன் ஏற்ற இடம் தான். சில கையேந்திபவன்களில் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படுவதால் சாப்பிட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே வயிற்றுவலி, வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. இதன்மூலம் எங்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவதுடன் அடுத்தநாள் அலுவலகத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால் பல கையேந்திபவன்கள் உணவுகளை தரமாக தயாரித்து குறைந்த விலைக்கு விற்று, ஏழை தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளதையும் மறுப்பதற்கு இல்லை.
கல்லூரி மாணவர் ஆல்பர்ட்:-
கையேந்திபவன்களில் விலை குறைவாக இருப்பதால் அடிக்கடி நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது வழக்கம். ஓட்டல்களில் ஒரு இட்லியே ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்படுவதால் பெரும்பாலானோர் குடும்ப சூழல் காரணமாக சாலையோர கடைக்கு வருகின்றனர். ஆனால் ஒரு சில கையேந்திபவன்களில் வாடிக்கையாளர்களை இழுக்கும் வகையில் மணமும், செயற்கை வண்ணங்களும் சேர்க்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரமான பொருட்கள்
சேலம் 4 ரோடு பகுதியில் கையேந்திபவன் நடத்தி வரும் தம்பதியானவிக்ரம், சரிதா:-
நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் இரவு நேர கையேந்திபவன் நடத்தி வருகிறோம். சமையலுக்கு தரமான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை தான் பயன்படுத்தி வருகிறோம். எங்களது கடையில் உணவுகள் தரமானதாகவும், சுவையாகவும் இருப்பதால் தினமும் ரெகுலர் வாடிக்கையாளர்கள் உள்பட பலர் வந்து சாப்பிட்டுவிட்டு செல்கிறார்கள். வாடிக்கையாளர்கள் உணவுகளில் ஏதேனும் குறைகள் தெரிவித்தால் மறுமுறை அந்த தவறு வராமல் பார்த்து கொள்கிறோம்.. வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவுகள் கொடுத்து திருப்தி படுத்துவதே எங்களுடைய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள ஓட்டல் உரிமையாளர்வைத்தியநாதன்:-
சேலத்தில் புற்றீசல் போல் கையேந்திபவன்கள் பெருகி விட்டதால் சிறு ஓட்டல்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் பல சிறு ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. கையேந்திபவன் நடத்தி வருபவர்களுக்கு வாடகை கிடையாது. நினைத்த இடத்தில் கடை வைத்து நடத்தி கொள்ளலாம். மேலும் ஜி.எஸ்.டி. வரி கிடையாது. ஓட்டல்களில் அடிக்கடி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி உணவின் தரம் குறித்து அடிக்கடி ஆய்வு நடத்துகின்றனர். ஆனால் கையேந்திபவன்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்துவது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.