கோடை விடுமுறையில் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வழக்கம் குறைந்து வருகிறதா?
கோடை விடுமுறை நாட்களில் பிள்ளைகளோடு பிறந்த ஊர்களுக்கு போக விரும்புகிறார்களா? என்பது பற்றி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் குடும்பம், குடும்பமாக சொந்த ஊருக்கு செல்ல ரெயிலுக்காக காத்திருந்த சிலரிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:-
வேலை நிமித்தமாக வெளியூர்களில் வந்து தங்கி இருப்பவர்கள் ஏராளம். அவர்கள் பள்ளி கோடை விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ செல்வதை பெரிதும் விரும்புவார்கள். அவர்களை எதிர்பார்த்து தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று உறவினர்களும் ஆவலுடன் இருப்பார்கள்.
தற்போதைய எந்திரமயமான உலகில் எல்லாமே மாறிக்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு பிள்ளை. உறவுகள் குறைவு. நேரமும் குறைவு. பழக்க வழக்கங்கள் புதிது என்பதால் உறவைத் தேடுவதைவிட மகிழ்வைத் தேடுவதாக எங்கங்கோ செல்கிறார்கள். இருக்கும் உறவை நினைக்கிறார்களா? கோடை விடுமுறை நாட்களில் பிள்ளைகளோடு பிறந்த ஊர்களுக்கு போக விரும்புகிறார்களா? என்பது பற்றி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் குடும்பம், குடும்பமாக சொந்த ஊருக்கு செல்ல ரெயிலுக்காக காத்திருந்த சிலரிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:-
உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி
ஆசிரியர் சத்தியமூர்த்தி:- நான் திண்டுக்கல்லில் ஆசிரியராக வேலை செய்து வருகிறேன். எனது மனைவி பூங்கொடி கல்லூரி பேராசிரியை ஆவார். நாங்கள் இருவரும் திண்டுக்கல்லில் வேலை செய்கிறோம். அதேநேரம் எங்களுடைய சொந்த ஊர் சேலம் ஆகும். எனவே வேலை நிமித்தமாக திண்டுக்கல்லில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகிறோம். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. இதனால் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறோம்.
எந்த ஊரில் வேலை செய்தாலும், விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று ஒருசில நாட்கள் தங்கினால் தான் மகிழ்ச்சியாக இருக்கும். பணிச்சுமை, குடும்ப சுமை என அனைத்தும் மறைந்து உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெற்றுவிடும். எனவே ஒவ்வொரு விடுமுறையிலும் தவறாமல் சொந்த ஊருக்கு சென்று, விடுமுறையை கழிப்போம். அதன்படி கோடை விடுமுறைக்கு ஊருக்கு செல்கிறோம். குழந்தைகளுடன் செல்வதற்கு ரெயில் தான் வசதியாக இருக்கிறது. எனவே ரெயிலில் சொந்தஊருக்கு செல்கிறோம்.
கோடைவிடுமுறையில் சேரும் குடும்பம்
மர வியாபாரி கிறிஸ்துராஜா:- என்னுடைய சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகும். நான் திண்டுக்கல்லில் மர வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் கேத்ரின்லீனா, மகள் செல்வஜோசப் ஆகியோர் சொந்த ஊரில் படித்து வருவதால், மனைவி அங்கே இருந்து கவனித்து கொள்கிறார். நான் மட்டும் திண்டுக்கல்லில் தனியாக தங்கிருந்து வியாபாரம் செய்கிறேன். குழந்தைகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டாலும் நான் ஊருக்கு சென்று குழந்தைகளுடன் தங்கியிருக்க முடியாத நிலை உள்ளது. அது ஒருவித ஏமாற்றத்தை அளித்தாலும், மனைவி மற்றும் குழந்தைகள் திண்டுக்கல்லுக்கு வந்து என்னுடன் தங்கி விடுவார்கள்.
திண்டுக்கல்லில் குழந்தைகளுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று கோடைவிடுமுறையை கழிப்போம். அதன்படி இந்த விடுமுறைக்கும் குழந்தைகள், மனைவி ஆகியோர் திண்டுக்கல்லுக்கு வந்தனர். இதற்கிடையே சொந்த ஊரில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு செல்கிறோம். பின்னர் மீண்டும் அனைவரும் திண்டுக்கல்லுக்கு வருவோம். கோடைவிடுமுறை முடியும் வரை மனைவி, குழந்தைகள் என்னுடன் இருப்பார்கள். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் வசிக்கும் என்னை போன்றவர்கள், கோடை விடுமுறையை இப்படி தான் கழிக்க வேண்டியது இருக்கிறது.
வேளாங்கண்ணிக்கு ஆன்மிக சுற்றுலா
மாரம்பாடியை சேர்ந்த சத்யா:- எங்களுடைய சொந்த ஊரே மாரம்பாடி தான். பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டு இருப்பதால் குழந்தைகள் அனைவரும் வெளியிடங்களுக்கு செல்ல விரும்பினர். குழந்தைகள் மட்டுமின்றி அனைவருக்கும் விடுமுறையில் வெளியூர் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே விடுமுறையில் ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவு செய்து, வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு செல்கிறோம்.
குழந்தைகளுக்கு வெளியூர் செல்வதற்கு ரெயில் தான் மிகவும் வசதியாக இருக்கிறது. கோடைவிடுமுறையில் அனைவரும் குடும்பத்துடன் வெளியூருக்கு செல்கின்றனர். ஆனால் ரெயில்களில் இடம் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. எனவே கோடைவிடுமுறையில் கூடுதல் ரெயில்களை இயக்கினால் நன்றாக இருக்கும். அதன்மூலம் கோடைவிடுமுறையை அனைவரும் உற்சாகம் குறையாமல் கழிப்பார்கள்.
பாட்டி வீட்டுக்கு செல்கிறோம்
திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி மாணவி அபூர்வா:- பள்ளிகளுக்கு விடுமுறை விட்டதும் கோவில்பட்டியில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதனால் நானும், எனது தம்பி காளீஸ்வரனும் கோவில்பட்டியில் உள்ள பாட்டியை பார்க்க புறப்பட்டு செல்கிறோம். எங்களை அழைத்து செல்வதற்கு கோவில்பட்டியில் இருந்து எங்களுடைய மாமா வந்து கொண்டிருக்கிறார். விடுமுறையை கொண்டாட பாட்டி வீட்டுக்கு செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கோடைவிடுமுறை முடியும் வரை எங்களுடைய பாட்டி வீட்டில் தான் நானும், தம்பியும் இருப்போம். பள்ளிகள் திறப்பதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு தான் திண்டுக்கல்லுக்கு வருவோம். அது வரை எங்களுக்கு ஜாலி தான்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோடை வெப்பத்தை வெல்வோம்
இயற்கை மருத்துவர்கள் கூறும் போது, 'கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பயணத்தின் போது கோடை வெப்பத்தை வெல்வது மிகவும் முக்கியம். குறிப்பாக வெப்பம், தலைவலி மற்றும் நீரிழப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். எனவே, வெப்பமான காலநிலையை எதிர்த்து போராட தயாராக இருக்க வேண்டும். இதற்காக தளர்வான மற்றும் இலகுரக ஆடைகளை அணிய வேண்டும்.
தளர்வான, வெளிர் நிற ஆடைகள் மற்றும் பருத்தி மற்றும் கைத்தறி போன்ற துணிகளை அணிய வேண்டும். அவை சருமத்திற்கு இதமாகவும் காற்று பரவ ஏதுவாகவும் இருக்கும். மதிய நேரமாக இருந்தால் தலையில் தொப்பியும், சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம். கோடையில் நிறைய வியர்க்கும் என்பதால் உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்கலாம். குடிநீர் பாட்டிலை எடுத்துச் செல்வதுடன், சோடாக்கள், ஆல்கஹால் மற்றும் காபின் போன்ற நீரிழப்பு பானங்களைத் தவிர்க்கவும்.
அதேபோல், இலகுவான உணவுகளை உண்ணுங்கள் மற்றும் முடிந்தவரை எண்ணெய் உணவுகளைத் தவிர்க்கலாம். காரணம் அவை உடலில் உள்ள நீரின் அளவைக் குறைக்கின்றன. தர்பூசணிகள், தக்காளிகள், ஆரஞ்சுகள், பிளம்ஸ் மற்றும் திராட்சைகள் போன்ற நிறைய தண்ணீரைக் கொண்டிருக்கும் புதிய கோடைகாலப் பழங்கள் போன்ற காய்கறிகள் மற்றும் சாலடுகள் உண்ணுவதன் மூலம் நுண்ணூட்டச்சத்துகளை பெற முடியும். பயணத்தின் போது காகிதம் அல்லது துணி விசிறியை உடன் எடுத்துச் செல்லலாம். சூடான மதிய வேளை பயணங்களை தவிர்க்கலாம்' என்கின்றனர்.