ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படுமா?


ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படுமா?
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:19+05:30)

திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மயிலாடுதுறை

சீர்காழி, ஜன.26-

திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் திருமுல்லைவாசல், ராதநல்லூர், தொடுவாய், கூழையார், வேட்டங்குடி, தாழந்தொண்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையம் போதிய டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

24 மணி நேரமும்...

இதன் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவசர சிகிச்சை பெற வேண்டுமானால் நீண்ட தொலைவில் உள்ள சீர்காழி, அல்லது சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை இருந்து வருவதால், இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கூடுதல் பணியாளர்களோடு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பணியில் இருக்க நடவடிக்கை

இதுகுறித்து திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் நவாஸ் கூறியதாவது:-

திருமுல்லைவாசல் கிராமம் கடற்கரை கிராமமாகும். இந்த கிராமத்தை சுற்றிலும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் சிகிச்சை பெற வேண்டுமானால் திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து தான் சிகிச்சை பெற வேண்டும். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே டாக்டர்கள் பணியில் இருக்கின்றனர். மற்ற நேரங்களில் டாக்டர்கள் இருப்பது இல்லை. இரவு நேரங்களில் பாம்பு கடி, விபத்து உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை பெற வேண்டுமானால் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீர்காழி அல்லது 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிதம்பரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவ பணியாளர்கள்

திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ்:- திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையார், வேட்டங்குடி, ராதாநல்லூர், வழுதலைக்குடி, திருமுல்லைவாசல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய பொதுமக்கள் சிகிச்சை பெறும் திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story